‘ஹைதராபாத் டெலிவரி ஊழியர் பைக் விபத்தில் மரணம்’ - தங்கள் ஊழியர் அல்ல என Zepto விளக்கம்!
சிசிடிவி கேமராவில் பதிவாகிய இந்த விபத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆனது. இவர் ஜெப்டோ ஊழியர் என்ற செய்திகள் பரவியது. ஆனால், அவர் ஜெப்டோ டெலிவரி பார்ட்னர் அல்ல, என நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.
ஹைதராபாத், மேஹ்திப்பட்ணம் பகுதியில் திங்கள்கிழமை இரவு ஏற்பட்ட சாலை விபத்தில், 25 வயதுடைய துரித விநியோக டெலிவரி ஊழியர் கபில் அபிஷேக் என்ற நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இவர் ஜெப்டோ ஊழியர் என்ற செய்திகள் வலைத்தளங்களிலும் செய்தி வட்டாரங்களிலும் பரவியது. ஆனால், அவர் ஜெப்டோ டெலிவரி பார்ட்னர் அல்ல, என நிறுவனம் தங்கள் அடையாள சரிபார்ப்பு முறைமைகளைக் கொண்டு மறுத்துள்ளது.
இது தொடர்பாக காவல்துறை கூறும்போது, மேஹ்திப்பட்ணம் காவல் நிலைய எல்லைக்குள் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தபோது, கணேஷ் டிராவல்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான தனியார் சுற்றுலா பேருந்து மோட்டார் சைக்கிள் மீது மோதியது இதில் பலத்த காயமடைந்த அந்த இளைஞர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்.
இந்த விபத்து சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. சம்பவத்தையடுத்து, மேஹ்திப்பட்ணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து பேருந்து ஓட்டுநரை காவலில் எடுத்தனர். பின்னர், விசாரணையின் ஒரு பகுதியாக அவர் கைது செய்யப்பட்டார். உயிரிழந்தவரின் உடல் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது.
விபத்துக்கான காரணங்களைக் கண்டறிய மேலதிக விசாரணை நடைபெற்று வருவதாக போலீசார் தெரிவித்தனர்.
இதனிடையே, தெலங்கானா கிக் மற்றும் பிளாட்ஃபார்ம் தொழிலாளர்கள் சங்கம் (TGPWU) சம்பவத்தில் உயிரிழந்த ஜெப்டோ டெலிவரி ஊழியருக்கு இரங்கல் தெரிவித்துள்ளது. விபத்து நேரத்தில் அவர் பணியில் இருந்ததாக சங்கம் கூறியது.
சங்கத்தின் நிறுவனர்-தலைவர் ஷேக் சலாவுதீன், பிளாட்ஃபார்ம் நிறுவனங்கள் நிர்ணயிக்கும் கடுமையான டெலிவரி காலக்கெடுகள் மற்றும் காயமடைந்த அல்லது உயிரிழந்த கிக் தொழிலாளர்களுக்கு உரிய நேரத்தில் உதவி வழங்கப்படாததை சுட்டிக்காட்டினார்.
“10 நிமிட டெலிவரிகள் நேரத்திற்கு துவங்குகின்றன. ரூ.100 கோடி வேகத் திட்டங்களும் நேரத்தில் துவங்குகின்றன. ஆனால், சாலையில் ஒரு தொழிலாளர் விபத்தில் சிக்கும்போது, காப்பீடும் இழப்பீடும் ஏன் நேரத்தில் துவங்குவதில்லை?” என்று அவர் கேள்வி எழுப்பினார்.
கிக் தொழிலாளர்களின் பணிச்சூழல் தொடர்பான பொறுப்புணர்வையும், விபத்து காப்பீட்டை உடனடியாக அமல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
ஜெப்டோ டெலிவரி பார்ட்னர் இல்லை - மறுப்புச் செய்தி:
விபத்தில் உயிரிழந்த டெலிவரி பணியாளர் குறித்து சமூக ஊடகங்களில் பரவிய தகவல்களுக்கு விளக்கம் அளித்து, அந்த நபர் தங்களின் நிறுவனத்துடன் எந்த வகையிலும் தொடர்புடையவர் அல்ல என்று ஜெப்டோ மறுத்துள்ளது.
ஜனவரி 5ஆம் தேதி மாலை சுமார் 5 மணியளவில் ஹைதராபாத்தில் நடந்த விபத்தின் சிசிடிவி காட்சிகள் சமூக ஊடகங்களில் வைரலானது. அதில், இருசக்கர வாகனத்தில் சென்ற டெலிவரி பணியாளர் கீழே விழுந்து, பின்னர் பேருந்து ஒன்று அவர் மீது ஏறியதால் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகக் காணப்பட்டது.

இந்த விபத்து, க்விக்–காமர்ஸ் நிறுவனங்களின் அதிவேக டெலிவரி முறைகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை மீண்டும் வலுப்படுத்தியுள்ளது.
இதனிடையே, சமூக ஊடக தளம் X-ல் வெளியிட்ட இரங்கல் செய்தியில், ஜெப்டோ நிறுவனம் உயிரிழந்த நபரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்ததுடன், அவர் ஜெப்டோ நிறுவனத்துடன் தொடர்புடையவர் அல்ல என்றும் தெளிவுபடுத்தியுள்ளது.
“சம்பவத்தில் உயிரிழந்த நபர் ஜெப்டோ நிறுவனத்தின் ஊழியர் அல்ல. விபத்து நேரத்தில் அவர் ஜெப்டோவுக்காக டெலிவரி செய்யவும் இல்லை. எங்களது தரவுத்தளச் சரிபார்ப்பு, முக அடையாளம் காணுதல், மற்றும் எங்களது கடை வலையமைப்பில் உள்ள சிசிடிவி காட்சிகள் மூலம் இதை உறுதிப்படுத்தியுள்ளோம். மேஹ்திபட்னம் காவல் நிலையத்துடன் முழுமையாக ஒத்துழைத்து, தவறான புரிதலை சரிசெய்ய எங்களது கண்டுபிடிப்புகளை சமர்ப்பித்துள்ளோம்,” என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

