காஞ்சிபுரம் அயிமிச்சேரி பகுதியில் புதிய ட்ரோன் உற்பத்தி ஆலை அமைத்த 'Dhaksha Unmanned Systems'
கோரமண்டல் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் துணை நிறுவனமான தக்ஷா அன்மாண்டு சிஸ்டம்ஸ், அயிமிச்சேரி பகுதியில் இந்தப் புதிய ஆலையை அமைத்துள்ளது. கோரமண்டல் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் செயல் தலைவர் அருண் அழகப்பன் புதிய ஆலையைத் திறந்து வைத்தார்.
காஞ்சிபுரம் அருகே 'தக்ஷா அன்மேன்டு சிஸ்டம்ஸ்' (Dhaksha Unmanned Systems) நிறுவனத்தின் புதிய ட்ரோன் உற்பத்தி ஆலை திறக்கப்பட்டுள்ளது.
கோரமண்டல் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் துணை நிறுவனமான தக்ஷா அன்மாண்டு சிஸ்டம்ஸ், அயிமிச்சேரி பகுதியில் இந்தப் புதிய ஆலையை அமைத்துள்ளது. கோரமண்டல் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் செயல் தலைவர் அருண் அழகப்பன் புதிய ஆலையைத் திறந்து வைத்தார்.
விவசாயம், பாதுகாப்பு மற்றும் தொழில் நிறுவனங்களின் பயன்பாட்டுக்கான ட்ரோன்களின் உற்பத்தியை அதிகரிப்பதுடன், முக்கிய தொழில்நுட்பங்களை உள்நாட்டிலேயே உருவாக்கும் நடவடிக்கைகளுக்கும் இந்த ஆலை உதவும், என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெரிய அளவிலான, சிக்கலான ஆளில்லா விமானத் திட்டங்களைச் செயல்படுத்தவும், வாடிக்கையாளர்களின் தேவைகளுக்கு ஏற்ப புதிய தயாரிப்புகளை உருவாக்கவும் இந்தத் தொழிற்சாலை பயன்படுத்தப்பட உள்ளது.
2 புதிய விவசாய ட்ரோன்கள் அறிமுகம்
நிகழ்ச்சியில் DH Agrigator E10 Prime, DH Agrigator E10 Eco ஆகிய 2 புதிய விவசாய ட்ரோன் மாடல்களை தக்ஷா நிறுவனம் அறிமுகப்படுத்தியது.
உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட உதிரிபாகங்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட E10 Prime ட்ரோன், மத்திய அரசின் ‘நமோ ட்ரோன் தீதி’ திட்டத்துக்கு ஏற்ற வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
சிறு மற்றும் குறு விவசாயிகள், கிராமப்புறத் தொழில்முனைவோர் உள்ளிட்டோர் ட்ரோன் அடிப்படையிலான விவசாயச் சேவைகளைப் பயன்படுத்தும் வகையில் குறைந்த விலையில் E10 Eco மாடல் உருவாக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்புத் துறைக்கும் உற்பத்தி
விவசாயத்தைத் தவிர, பாதுகாப்புத் துறைக்கான ட்ரோன்களின் உற்பத்தியிலும் புதிய ஆலை முக்கியப் பங்கு வகிக்க உள்ளது. கண்காணிப்பு மற்றும் தளவாடப் பணிகளுக்கான ட்ரோன்களைத் தயாரிக்க தனி உற்பத்தி வரிசை அமைக்கப்பட உள்ளது.
முக்கியமான தொழில்நுட்பங்களில் உள்நாட்டுமயமாக்கலை அதிகரிப்பதுடன், ட்ரோன் துறையில் தொழில்நுட்பக் கூட்டாளர்களுடன் இணைந்து செயல்படுவதற்கான வாய்ப்பையும் இந்த ஆலை உருவாக்கும் என நிறுவனம் தெரிவித்துள்ளது.
‘இந்தியாவின் ட்ரோன் துறைக்கு புதிய வாய்ப்பு’
இதுகுறித்து தக்ஷா அன்மேன்டு சிஸ்டம்ஸ் நிறுவனத்தின் இயக்குநரும், கோரமண்டல் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரியுமான எஸ். சங்கரசுப்பிரமணியன் கூறியதாவது,
”இந்தியாவின் உற்பத்தித் திறன் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியில் மேம்பட்ட தொழில்நுட்பங்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. விவசாயம், பாதுகாப்பு மற்றும் நிறுவனப் பயன்பாடுகளில் ட்ரோன்கள் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் திறன் கொண்டவை,” என்றார்.
புதிய ஆலை மூலம் ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, உற்பத்தி உள்ளிட்ட செயல்பாடுகளை ஒருங்கிணைத்து, விரைவாக புதிய தயாரிப்புகளை உருவாக்க முடியும். விவசாயிகளிடமிருந்து கிடைக்கும் கள அனுபவங்களின் அடிப்படையில் நடைமுறைக்கு ஏற்ற ட்ரோன் தீர்வுகளை உருவாக்கி வருகிறோம்.
பாதுகாப்புத் துறையில் உள்நாட்டுமயமாக்கலை அதிகரிப்பதுடன், தொழில்நுட்பக் கூட்டாண்மைகளையும் உருவாக்கி வருகிறோம். இந்த விரிவாக்கம் இந்தியாவின் உள்நாட்டு ட்ரோன் உற்பத்தித் திறனை மேலும் வலுப்படுத்தும். ‘ஆத்மநிர்பர் பாரத்’ திட்டத்தின் நோக்கத்துக்கும் இது பங்களிக்கும், என்றார்.
