பாரதிராஜாவின் 'மயிலு’ இப்போது எப்படி இருப்பார்?
தமிழ் சினிமாவின் ஆகச்சிறந்த திரைப்படங்களை எந்த நோக்கில் பட்டியலிட்டாலும், பாரதிராஜாவின் ’16 வயதினிலே’ நிச்சயம் இடம்பெற்றிருக்கும். அதே போல தமிழ் சினிமா உருவாக்கிய மறக்க முடியாத பாத்திரங்களை பட்டியலிட்டாலும், 16 வயதினிலே நாயகி, மயிலுக்கு இடம் இருக்கும்.
தமிழ் சினிமாவின் ஆகச்சிறந்த திரைப்படங்களை எந்த நோக்கில் பட்டியலிட்டாலும், பாரதிராஜாவின் ’16 வயதினிலே’ நிச்சயம் இடம்பெற்றிருக்கும். அதே போல, தமிழ் சினிமா உருவாக்கிய மறக்க முடியாத பாதிதிரங்களை பட்டியலிட்டாலும், 16 வயதினிலே நாயகி, மயிலுக்கு இடம் இருக்கும். (சப்பானிக்கும் தான்).
கிராமத்து தென்றலாக திரையில் தோன்றிய ’மயிலு’ பலவிதங்களில் மைல் கல் பாத்திரம். அண்மையில் மறைந்த பாரதிராஜாவின் திரையுலக சாதனைகளையும், தமிழ் சினிமா மீதான அவரது தாக்கத்தையும் எண்ணற்ற விதங்களில் அலசி ஆராயலாம் என்றாலும், அவர் உருவாக்கிய மயிலு பாத்திரம் மூலம், அவரது திரையுலக பயணத்தை திரும்பி பார்ப்பது பொருத்தமாக இருக்கும்.

’16 வயதினிலே’ திரைப்படத்தில் மயிலு கதாப்பாத்திரத்தில் நடிகை ஸ்ரீதேவி
மயிலு பாத்திரம் ஏன் மறக்க முடியாதது?
மயிலு கதாப்பாத்திரம் ஏன் மறக்க முடியாததாக இருக்கிறது என்பதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. மறைந்த நட்சத்திரம் ஸ்ரீதேவி அந்த பாத்திரமாகவே வாழ்ந்து அதற்கு உயிர் கொடுத்திருப்பார். மயிலுக்கு பின் தமிழ் திரையுலகில் கோலோச்சி, பின்னர் இந்தி திரையுலகிற்கு சென்று முத்திரை பதித்தாலும், நடிகையாக ஸ்ரீதேவியின் அடையாளத்தையும், குணாதிசயத்தையும் நிறுவிய பாத்திரமாக மயிலு விளங்குகிறது.
இயக்குனர் பாரதிராஜா நாயகிகளை அறிமுகம் செய்வதற்காக தனித்து அறியப்பட்டவர் என்றாலும், அவர் அறிமுகம் செய்த ஆர் வரிசை நாயகிகள் தனி முத்திரை பதித்தவர்கள் என்றாலும், 16 வயதினிலே மயிலு வேடத்தில் வேறு எந்த நாயகியையும் நினைத்து பார்க்க முடியவில்லை.
ஸ்டூடியோவில் இருந்து வெளியேறி கிராமங்கள் நோக்கி காமிராவை கொண்டு வந்த படங்களில் ஒன்றான 16 வயதினேலேவில், செந்தூரப்பூவே... என இளமை ததும்ப பாடிய மயிலு பாத்திரம் அத்தனை புத்துணர்ச்சி தருவதாக இருந்தது.
ஸ்ரீதேவி வடிவில் மயிலு அழகின் சிகரமாக சொக்க வைத்ததோடு, கிராமத்து பதின் பருவத்தை அதன் ஏக்கங்களோடு அப்படியே திரையில் பிரதிபலித்தார். மயிலுவிடம் அழகு மட்டும் அல்ல, அவரிடம் கனவுகளும் இருந்தன. ’ஆத்தா நான் பாசாயிட்டேன்...’ என உற்சாகமாக அழைத்தபடி மயிலு அறிமுகமாகும் காட்சியிலேயே அவரது கனவை புரிந்து கொள்ளலாம்.
பள்ளித்தேர்வில் தேர்ச்சி பெற்றத்தை குதூகலத்தோடு உணர்த்தும் காட்சி மட்டும் அல்ல அது, அந்த கிராமத்து பெண் மேலும் படிக்க விரும்புகிறாள், வாழ்வில் வெற்றி பெற விரும்புகிறாள் என்பதையும் உணர்த்திய காட்சி.
அதன் பின், மயிலு சோதனைக்கு ஆளாகி வாழ்க்கை சிக்கலுக்கு உள்ளானாலும், படித்து பட்டம் பெற்று வாழ்க்கையில் முன்னேறத்துடிக்கும் ஒவ்வொரு கிராமத்து இளைஞர்களின் கனவுகளை பிரதிபலிப்பவராகவே மயிலுவை கொண்டாடலாம்.
நகரத்தில் இருந்து கிராமத்துக்கு வரும் ஆபத்து எனும் அம்சம், பாரதிராஜாவின் பெரும்பாலான படங்களில் இருப்பதாக தமிழின் முன்னணி விமர்சகர் வெங்கடேஷ் சக்ர்வர்த்தி எழுதியதாக நினைவு. இப்படி பாரதிராஜாவின் கதை களத்திலும், காட்சி அமைப்பிலும் அலசலுக்கும், ஆய்வுக்கும் உரிய அம்சங்கள் அநேகம் என்றாலும், பதின் பருவத்து நாயகி அறிமுகமாகும் காட்சியிலேயே ‘பள்ளித்தேர்வில் வெற்றி பெற்றதை உற்சாகமாக அறிவிக்கும் வகையில் காட்சி வைத்ததை பாரதிராஜாவின் திரை பங்களிப்பில் முக்கிய அம்சமாக கருதலாம், என நினைக்கிறேன்.
அந்த வகையில், மயிலு இப்போதும் இளம் பெண்களுக்கு ஊக்கம் அளிக்கும் நாயகி. மயிலுவை கொண்டாடுவது என்பது அவரை உருவாக்கிய பாரதிராஜாவை கொண்டாடுவது போல தான்.
எனவே, பாரதிராஜாவின் மயிலு இப்போது எப்படி இருப்பார், என யோசித்துப்பார்ப்பது பொருத்தமாகத் தோன்றுகிறது.
பழைய படங்களை டிஜிட்டல் முறையில் மெருகேற்றுவது போல, 16 வயதினிலே படத்தை மெருகேற்றினால் எப்படி இருக்கும்:? டிஜிட்டல் யுகத்து மயிலு எப்படி இருப்பார்?
கம்ப்யூட்டர் பரவலாகாத காலத்தில் இந்த படம் வந்தது. தொழில்நுட்பத்தின் தாக்கம் திரையில் தெரியாது.
இப்போது இணைய யுகத்தில் இருந்து இன்ஸ்டா யுகத்திற்கு வந்திருக்கிறோம். இந்த யுகத்தில் டிஜிட்டல் மயிலு எப்படி இருப்பார்?
டிஜிட்டல் யுகத்தில் மயிலு எப்படி இருப்பார்?
’மயிலு’ இப்போது இருந்திருந்தால், அந்த கதாப்பாத்திரத்துக்கு இன்ஸ்டாவில் கணக்கும் இருக்க வாய்ப்பிருக்கா? என்று யோசித்துப் பார்த்தால், இல்லை பாரதிராஜாவின் மயிலு இன்ஸ்டாவில் இருக்க மாட்டார் என்றே நினைக்கிறேன்.
செந்தூரப்பூவே... என அவர் பாடும் காட்சி இன்ஸ்டாவிற்கு ஏற்ற தன்மையோடு இருக்கும் என்றாலும், படிப்பை முக்கியமாக கருதிய கிராமத்து மயிலு, இன்ஸ்டாவை புறந்தள்ளிவிட்டு ஐஏஸ் கனவுகளில் மூழ்கியிருப்பார் என்றே சொல்லத் தோன்றுகிறது.
ஆனால், மயிலு யூடியூப்பில் தன் கிராமத்து சிறார்களுக்கு பாடம் சொல்லி கொடுக்கலாம். ஃபேஸ்புக்கை விட அவர் லின்க்டுஇன் போன்ற தொழில்முறை வலைப்பின்னல் சேவையில் ஆர்வம் கொண்டிருக்கலாம், என்றும் தோன்றுகிறது.

டிஜிட்டல் யுகத்தின் மயிலு இப்படி தான் இருந்திருப்பார். மயிலுக்கு எதிர்பாரா தடை ஏற்படாவிட்டால் 16 வயதினிலே படத்திலேயே அவர் பட்டம் பெற்று உயர் பதவிக்கு வந்து முன்னுதாரணமான பெண்ணாகி இருப்பார்.
முக்கியமாக இன்ஸ்டாவில் தனது அடையாளத்தை தேடும் நிலையில் மயிலு இருந்திருக்க மாட்டார். ஸ்னேப்சேட்டிற்கும் அவர் நோ சொல்லியிருப்பார்.
டிஜிட்டல் யுகத்து மயிலு இணையம் தரும் வாய்ப்புகளை பயன்படுத்தி வெளிநாட்டுக்கு செல்ல நினைத்திருப்பார். ஏன், நகரத்துக்கு வந்து மயிலு பெண்களுக்கான ஸ்டார்ட் அப் நிறுவனமும் துவக்கியிருக்கலாம். அத்தகைய குணாதிசயங்களின் கீற்றுகளோடு தான் கிராமத்து மயிலு இருந்ததாக நம்புகிறேன்.
டிஜிட்டல் மயிலுவை இன்னும் பலவிதங்களில் வளர்த்தெடுக்கலாம் என்றாலும், 16 வயதினிலே மயிலு இயற்கையாக வயதாகி இப்போது எப்படி இருப்பார்? என்று கற்பனை செய்து பார்ப்பதும் சுவாரஸ்யமாக இருக்கும்.
மயிலு டீச்சராகி தலைமை ஆசிரியராக ஓய்வு பெற்றிருக்கலாம். அல்லது சுய உதவி குழுவுக்கு தலைவராகி வழி காட்டி கொண்டிருக்கலாம். மயிலு எப்படி இருந்தாலும், மிஸ்டர் சப்பானி கோட் சூட் போட்டபடி அவரது பக்கத்தில் கம்பீரமாகவும், மன நிறைவோடும் இருப்பார் என்றும் நம்பலாம்.
மயிலு பாத்திர உருவாக்கத்தையும், அவளது தாக்கத்தையும் இன்னும் ஆழமாக அலசலாம். மயிலுவை உருவாக்கியதற்காக உங்களுக்கு கூடுதல் நன்றி இயக்குனர் இமையம். போய் வாருங்கள், உங்களை மறக்க மாட்டோம், மயிலுவையும் சாப்பானியையும், இன்னும் பிற சாகாரவரம் பெற்ற உங்கள் திரை பாத்திரங்களையும் தான்.
Edited by Induja Raghunathan

