VIHAAN-I - உள்நாட்டில் தயாரான சிப் விநியோகத்திற்காக, சென்னை அஹீசா மற்றும் சிக்மா நிறுவனங்கள் ஒப்பந்தம்!
சென்னையை தலைமையமாக கொண்ட பேப்லஸ் செமிகண்டக்டர் நிறுவனம் Aheesa மற்றும் தொழில்நுட்ப, மென்பொருள் மற்றும் மின் ஆளுகை சேவைகள் நிறுவனம் Zigma, ஆகிய இரண்டு நிறுவனங்களும், நெட்வொர்க் திறன் கொண்ட விஹான் – 1 சிப் விநியோகம் தொடர்பாக ஒப்பந்தம் செய்துள்ளன.
சென்னையை தலைமையமாகக் கொண்ட பேப்லஸ் செமிகண்டக்டர் நிறுவனம் ‘அஹீசா டிஜிட்டல் இன்னவேஷன்ஸ்’ (Aheesa) மற்றும் தொழில்நுட்ப, மென்பொருள் மற்றும் மின் ஆளுகை சேவைகள் நிறுவனம் ‘சிக்மா டெக்னாலஜிஸ்’ (Zigma) ஆகிய இரண்டு நிறுவனங்களும், நெட்வொர்க் திறன் கொண்ட விஹான் – 1 சிப் (வ் விநியோகம் தொடர்பாக ஒப்பந்தம் செய்துள்ளன. இதன்படி, விஹான் -1 சிப் விநியோக பாட்னராக சிக்மா விளங்கும்.
இதற்கான ஒப்பந்தம் மும்பையில் கையெழுத்திடப்பட்டது. இந்த ஒப்பந்தம் அஹீசா நிறுவனத்தின் வடிவமைப்பு திறன் மற்றும் சிக்மா நிறுவனத்தின் திறனை ஒன்றிணைத்து, இந்தியாவில் உருவாக்கப்பட்ட சிப்பை நாடு முழுவதும் மற்றும் வெளிநாடுகளுக்கு கொண்டு செல்ல வழி வகுக்கிறது.

அஹீசா நிறுவனத்தின் விஹான் -1 சிப், குடியரசு தினத்தன்று வடிவமைப்பு இறுதி செய்யப்பட்டு, பின்னர் சுதந்திர தினம் அன்று வெற்றிகரமாக முதல் முயற்சியிலேயே உற்பத்தி செயல்பாட்டை நிறைவு செய்த நிலையில், இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. இந்த சிப் நெட்வொர்கிங் சிலிக்கான் இறக்குமதி சார்பை குறைப்பதோடு, உள்ளூர் பிராட்பேண்ட் சாதனங்கள் உற்பத்தை ஊக்குவிக்கும்.
இந்த சிப்பை நாட்டின் நெட்வொர்க் நிறுவனங்களிடம் கொண்டு செல்ல ஏற்ற பங்குதாரர் தேவை, இந்த பிரிவில் சிக்மா 30 ஆண்டு அனுபவம் கொண்டுள்ளது. மின் ஆளுகை உள்ளிட்ட பிரிவுகளில் சேவை அளித்து வருகிறது.
இந்த சிப் உற்பத்தி நிலைக்கு சென்று, அடுத்த ஆண்டு வாக்கில் உற்பத்தியாகும், என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவிலேயே சிப் தயாரிக்கும் முயற்சியில் ஒரு மைல்கல்லாக இது அமைகிறது.
"தொழில்நுட்ப நுகர்வில் இருந்து தொழில்நுட்ப உற்பத்திக்கு நாம் நகரும் நிலையில், இது இந்திய செமிகண்டக்டர் துறைக்கான முக்கிய தசாப்தமாக அமைகிறது,” என்று அஹீசா டிஜிட்டல் இன்னவேஷன்ஸ் நிறுவன இணை நிறுவனர் மற்றும் சி.இ.ஒ.ஸ்ரீதரன் மணி கூறியுள்ளார்.
"நாங்கள் எல்லைகளை கடந்து கனவு காண்கிறோம். இந்தியாவின் செமிகண்டக்டர் துறை எதிர்காலத்தை வடிவமைக்கும் வகையில் உற்பத்தி, வளர்ச்சியை திட்டமிட்டுள்ளோம். உள்ளூர் மற்றும் உலக சந்தையில் எங்கள் சிப் பயன்பட வேண்டும், என விரும்புகிறோம். சிக்மா நிறுவனத்துடனான கூடு, இரு நிறுவனங்கள் ஆற்றலையும் ஒன்றிணைக்கிறது,” என்றும் கூறினார்.
"தொழில்நுட்பம், பொது உள்கட்டமைப்பு இணையும் இடங்களில் சிக்மா பணியாற்றி, டிஜிட்டல் சேவைகளை மக்களிடம் கொண்டு வந்துள்ளது. இந்த உள்கட்டமைப்பின் அடுத்த கட்டமாக இந்திய சிப் அமைகிறது. உள்நாட்டில் உருவான பிராட்பேண்ட் சிப்பாக விஹான் – அமைகிறது. எங்கள் நிறுவனங்கள் இணைந்து, இந்திய சிலிக்கானை டிஜிட்டல் உள்கட்டமைப்பின் மையமாக கொண்டு வருவோம்,” என்று சிக்மா டெக்னாலஜிஸ் நிர்வாக இயக்குனர் ராஜா கதிரவன் கூறியுள்ளார்.
தொலைத்தொடர்பு, பிராட்பேண்ட், சைபர் பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளில் சிப் மற்றும் நெட்வொர்கிங் தொழில்நுட்பங்களை அஹீசா உருவாக்கி வருகிறது. செமிகான் 2.0 கீழ் சிப் தயாரிப்பை இந்தியா ஊக்குவித்து வரும் சூழலில் இந்த கூட்டு நிகழ்ந்துள்ளது.
Edited by Induja Raghunathan

