Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
ADVERTISEMENT
Advertise with us

பொதுவெளியில் பாலூட்டுதல் விரசமல்ல… இவை வேற லெவல் நாடாளுமன்றங்கள்!

நாடாளுமன்றத்தில் எம்பிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பெண்கள் மகப்பேறு முடிந்த பின்னர் குழந்தைகளுடன் நாடாளுமன்ற நிகழ்வுகளில் பங்கேற்கும் விதமாக மாற்றத்தை கொண்டு வந்துள்ளன உலக நாடுகள் சில...

பொதுவெளியில் பாலூட்டுதல் விரசமல்ல… இவை வேற லெவல் நாடாளுமன்றங்கள்!

Monday July 23, 2018 , 3 min Read

"

அண்மையில் கேரளாவைச் சேர்ந்த வாரஇதழ், தனது அட்டைப்படத்தில் தாய் ஒருவர் குழந்தைக்கு பாலூட்டும் புகைப்படம் பிரசுரித்தது. பாலூட்டுதல் என்பது தாய்மைக்கான புனிதமான விஷயம் அதை இப்படி ஆபாசமாக காண்பிக்கலாமா என்று பெரிய அளவிலான விவாதங்கள் நடத்தி வழக்கு தொடரும் அளவிற்கு அந்த விஷயம் பூதாகரமானது. பாலூட்டுதல் என்பது மறைக்கப்பட வேண்டிய விஷயமல்ல கோளாறு பார்ப்பவர் கண்களில் தான் இருக்கிறது என்று உச்ச நீதிமன்றமே கூறியுள்ளது.

இந்தியாவில் பாலூட்டும் செயல் மூடி மறைத்து வீட்டிற்குள்ளேயே பெண்களை முடக்கும் விஷயமாக இருக்கிறது. ஆனால் உலக நாடுகள் பெண்கள் பொது வாழ்வில் ஈடுபடுவதை ஊக்குவிக்கும் விதமாக மாற்றங்களுக்குத் தயாராகி வருகின்றன.

\"ஆஸ்திரேலிய

ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் செனட் உறுப்பினர் லரிசா வாட்டர்ஸ் பாலூட்டிக்கொண்டே விவாதத்தில் பங்கேற்ற வைரல் படம், நன்றி : கூகுள் இமேஜஸ்


நாடாளுமன்றத்திற்கு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட இரண்டாவது பெண் தலைவர் என்ற பெருமைக்கு சொந்தக்காரர் நியூசிலாந்து நாட்டின் பிரதமர் ஜெசின்டா அடர்ன். கடந்த அக்டோபரில் பிரதமராக பொறுப்பேற்கும் சில நாட்களுக்கு முன்னர் அடெர்ன் கர்ப்பமடைந்ததையடுத்து ஜுன் மாதம் 21ம் தேதி அழகான பெண் குழந்தையை பெற்றெடுத்தார். 

மகப்பேறு முடிந்து நாடாளுமன்றம் திரும்பியவர் தனது குழந்தையுடன் விவாதங்களில் பங்கேற்றார். ஆம் ஜெசின்டா அலுவலகப் பணிகளில் இப்போதே அவருடைய குட்டி தேவதை இணைந்துவிட்டார்.

ஓராண்டிற்கு முன்னர் இளம் தாய்மார்களுக்கு இந்த வாய்ப்பு கிடைக்கவில்லை. பல நாடுகள் தங்களது நாடாளுமன்றம் குழந்தைகளுக்கும் பெற்றோருக்கும் நண்பனாக இருக்க விரும்பி எடுத்த நடவடிக்கைகளின் பலனாக சட்டங்களில் செய்த திருத்தம், விதிகளில் மாற்றம் செய்தன. அவை இந்த உலகிற்கு புதிய உறவை அறிமுகம் செய்யும் பெற்றோருக்கு ஆச்சரியத்தை அளிப்பதாக அமைந்தது.

அடெர்னும், மகளிர் துறையின் அமைச்சராக இருந்த ஜூலி அனி கென்டரும் கடந்த ஆண்டில் தாங்கள் தாய்மை அடைந்திருப்பதை அறிவித்தனர். இதனையடுத்து மகப்பேறு முடிந்து இவர்கள் குழந்தைகளுடன் நாடாளுமன்ற விவாதங்களில் பங்கேற்கும் வகையிலான மாற்றங்களை கொண்டு வருவதற்கான முனைப்புகள் எடுக்கப்பட்டன.

\"மகள்

மகள் மற்றும் கணவருடன் நியூசிலாந்து பிரதமர் ஜெசின்டா, நன்றி  : கூகுள் இமேஜஸ்


குழந்தை பராமரிப்பிற்காக பல பெண்கள் பொதுவாழ்வில் ஈடுபடாமல் அலுவலகப் பணியையே நாடுகின்றனர். இதனால் உலகம் முழுவதும் சட்டம் இயற்றும் அரங்குகளில் பெண் தலைவர்களின் பங்களிப்பு குறைந்த அளவிலேயே இருப்பதாக வல்லுநர்கள் கருதுகின்றனர்.

ஆனால் இந்த அசாதராணமான நிலை தற்போது மாற்றம் கண்டு வருகிறது. ஆஸ்திரேலியா மற்றும் கனடா நாடாளுமன்றங்களில் பெண் அரசியல்வாதிகள் தங்கள் குழந்தைகளுக்கு பாலூட்டிக் கொண்டே விவாதங்களில் பங்கேற்ற புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலானதும் இதற்கு முக்கியக் காரணம்.

பிரிட்டன் நாடாளுமன்றம் உள்பட பல நாடாளுமன்றங்கள் குழந்தைகளை அவைக்குள் அனுமதிப்பதில்லை. இது பாலூட்டும் தாய்மார்களுக்கு மிகப்பெரிய சவாலானதாக இருந்தது. பெண் எம்பிகளின் பொழுது என்பது வெகு சீக்கிரம் தொடங்கி சிறு சிறு இடைவேளைகளுக்குப் பின்னர் தாமதமாகவே முடியும்.

கடந்த நவம்பர் மாதத்தில் ஜப்பபான் முனிசிபல் சட்டசபையில் இருந்து அதன் உறுப்பினர் யுகா ஒகாடா வெளியேற உத்தரவிட்டப்பட்டது. அவர் பெரிதாக எந்தத் தவறும் செய்துவிடவில்லை தன்னுடைய 7 மாதக் குழந்தையை சட்டசபைக்கு அழைத்து வந்திருந்தார். அதுவும் தன்னுடைய பணிகள் மற்றும் குழந்தை வளர்ப்புக்கு இடையே இருக்கும் பிரச்னை என்ன என்பதை வெளிக் காட்டவே அவர் தன்னுடைய மகனை உடன் அழைத்து வந்திருந்தார்.

உலகம் முழுவதிலும் உள்ள அரசியல் கட்சிகள் சட்டசபைக்குள் குழந்தைகளை அழைத்து வர அனுமதி அளிக்கப்படாததால் பெரும் நெருக்கடிகளை சந்திக்கின்றன. குறிப்பாக முக்கியமான திட்டங்கள் குறித்து ஓட்டெடுப்பு நடக்கும் போது அதில் பெண் எம்பிகள் சில சமயங்களில் பங்கேற்க முடியாமல் போய்விடுகிறது.

நாடாளுமன்றங்கள் ஆண்களுக்காகவே உருவாக்கப்பட்டது போன்று செயல்பட்டு வந்த அமெரிக்காவும் கூட தனது போக்கில் மாற்றத்தை கொண்டு வந்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதத்தில் அமெரிக்க செனட்டில் கடைசி நேரத்தில் விதியில் செய்த மாற்றத்தால் செனட் உறுப்பினர் டேமி டக்வொர்த் தன்னுடைய பிறந்த குழந்தையுடன் வந்து நாசா விண்வெளி ஆய்வு மைய தலைவர் பதவிக்கு அதிபர் டொனால்டு ட்ரம்ப் முன்மொழிந்தவருக்கு எதிராக வாக்களித்தார்.

நியூசிலாந்தில் ஆண்கள் கூட விவாத அரங்கிற்கு தங்களின் பிறந்த குழந்தையை எடுத்து வரலாம். ஸ்வீடன் நாட்டின் நாடாளுமன்றம் ஆண்களுக்கும் குழந்தை வளர்ப்பிற்கான விடுமுறையை அளிக்கிறது, இதே போன்று தங்கள் நாட்டின் நாடாளுமன்றத்திலும் அமல்படுத்தலாம் என்று சில நாடுகள் ஆலோசித்து வருகின்றன.

நியூசிலாந்து நாடாளுமன்றத்தில் எம்பிகள் குழந்தைகள் பராமரிப்பு மையம் மற்றும் விளையாட்டு பொம்மைகள் அடுக்கி வைக்கப்பட்ட அறைகளை பயன்படுத்தலாம். நாடாளுமன்ற கபேயில் குழந்தைகளுக்கென ஹைசேர் மற்றும் வராண்டாவில் குழந்தைகள் விளையாட திடல் ஏற்படுத்தவும் ஸ்பீக்கர் உத்தரவிட்டுள்ளார்.

நியூசிலாந்து நாடாளுமன்றம் ஏற்கனவே இளம் தாய்மார்கள் விவாத அரங்கில் பாலூட்ட அனுமதி அளித்துள்ளது. தற்போது சிறார்களையும் அழைத்து வரலாம் என்று ஸ்பீக்கர் உத்தரவிட்டுள்ளார். பெற்றோர் குழந்தைகளிடையேயான பாசப் பிணைப்பை ஏற்படுத்துவதற்காக இந்த உத்தரவு போடப்பட்டுள்ளது.

\"ஐஸ்லாந்து

ஐஸ்லாந்து சுதந்திர கட்சியின் முன்னாள் எம்பி உனூர் ப்ரே கொன்ரட்ஸ்டாட்டிர், பட உதவி: ஹஃப்பிங்க்டன் போஸ்ட்


பாலூட்டுதலை வரவேற்றுள்ள நாடாளுமன்றங்கள்

•\tநியூசிலாந்து நாட்டு எம்பி வில்லோ ஜூன் ப்ரைம் 2017 நவம்பரில் நாடாளுமன்ற விவாதத்தில் தன்னுடைய குழந்தைக்கு பாலூட்டிக்கொண்டே பங்கேற்றார்.

•\tஆஸ்திரேலியாவின் விக்டோரிய மாகாண எம்பியான எல்லன் சேன்டெல் 2017 செப்டம்பரில் விக்டோரிய நாடாளுமன்றத்தில் தன்னுடைய மகளுக்கு பாலூட்டிக் கொண்டே நாடாளுமன்ற செயல்பாடுகளில் ஈடுபட்டார்.

•\tஜூன் 2017ல் ஆஸ்திரேலியாவின் எம்பி லரிஸா வாட்டர்ஸ் தன்னுடைய மகளுக்கு நாடாளுமன்ற செயல்பாடுகளை பங்கேற்றவாறு பாலூட்டினார். பாலூட்டிக் கொண்டே தான் கொண்டு வந்த தீர்மானம் மீதான உரையையும் நிகழ்த்தினார்.

•\tஐஸ்லாந்து சுதந்திர கட்சியின் முன்னாள் எம்பியான உனூர் ப்ரே கொன்ரட்ஸ்டாட்டிர் 2016 அக்டோபரில் நாடாளுமன்றத்தில் தன்னுடைய குழந்தைக்கு பாலூட்டிக் கொண்டிருந்த போது திடீரென அவரை உரையாற்ற ஸ்பீக்கர் அழைப்பு விடுக்க பாலூட்டியவாறே அவரும் தனது கருத்துகளை முன்வைத்தார்.

கட்டுரை : பிரியதர்ஷினி 

"