'ஐஐடி மெட்ராசில் சேரும் முதல் பழங்குடியின மாணவி' - இறந்த தந்தையின் கனவை நிறைவேற்றிய ராஜேஸ்வரி!
சேலத்தைச் சேர்ந்த ராஜேஸ்வரி என்ற மாணவி ஜேஇஇ நுழைவுத்தேர்வில் வெற்றி பெற்று மெட்ராஸ் ஐஐடியில் சேர்ந்து படிப்பதற்கான வாய்ப்பை பெற்றுள்ளார். ஐஐடியில் சேரும் முதல் பழங்குடியினப் பெண்ணான ராஜேஸ்வரிக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
IIT– இந்திய தொழில்நுட்பக் கழகம் என்பது பொறியியல் மற்றும் தொழில்நுட்பத்தில் உயர்கல்வி அளிக்கும் புகழ்பெற்ற கல்வி நிறுவனமாகும். குறிப்பாக, ஐஐடி மெட்ராஸ் பிரபலமான, தேசிய முக்கியத்துவம் வாய்ந்த கல்வி நிறுவனமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இங்கு சேர்ந்து பயில வேண்டும் என்பது பல மாணவர்களின் கனவு. ஐஐடி-ஜேஇஇ நுழைவுத் தேர்வில் வெற்றி பெறுபவர்களுக்கு மட்டுமே இங்கு பயிலும் வாய்ப்பு கிடைக்கும். இதனை தனது கடும் முயற்சியால் சாத்தியமாக்கியுள்ளார் சேலம் மாவட்டம் கருமந்துறையைச் சேர்ந்த பழங்குடியின மாணவி ராஜேஸ்வரி.

ராஜேஸ்வரி, சாதனை மாணவி
யார் இந்த பழங்குடியின மாணவி?
சேலத்திலிருந்து 65 கி.மீ. தொலைவில் உள்ள கல்வராயன் மலைகளில், 90 சதவிகிதம் பழங்குடி மக்கள் வாழ்கின்றனர். அங்குள்ள கருமந்துறை கிராமத்தைச் சேர்ந்தவர் ஆண்டி. படிக்கும் ஆர்வம் இருந்த போதும் குடும்ப வறுமை காரணமாக தையல் தொழிலாளியாக வாழ்நாளை நடத்தினார். ஆண்டிக்கு துணையாக இருந்து அவரது மனைவி கவிதா குடும்பத்தை நடத்தி வந்தார்.
இந்த தம்பதிக்கு ஜெகதீஸ்வரி, ராஜேஸ்வரி, பரமேஸ்வரி என 3 மகள்களும் ஸ்ரீகணேஷ் என்ற மகனும் உள்ளனர். எவ்வளவு கஷ்டப்பட்டாலும் தனது நான்கு குழந்தைகளுக்கு கல்வியால் உயர்வு தரும் சிறந்த எதிர்காலம் அமைக்க வேண்டும் என்று உறுதியுடன் இருந்தார் ஆண்டி. மூத்த மகள் ஜெகதீஸ்வரி இளங்கலை படித்துவிட்டு சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். மகன் ஸ்ரீகணேஷ் பட்டப்படிப்பை முடித்து விட்டு தந்தையின் தொழிலையே தொடர்ந்து வருகிறார். இரு குழந்தைகளை இளங்கலை பட்டதாரிகளாக்குவதில் வெற்றி பெற்றதே ஆண்டியை பொருத்தவரையில் ஒரு சாதனை. ஆனால், அவரை மேலும் பெருமைப்பட வைத்திருக்கிறார் ஆண்டியின் மற்றொரு மகள் ராஜேஸ்வரி.
2024ம் ஆண்டில் அவர் இறந்திருக்காவிட்டால், ஆண்டி தனது வாழ்வின் மிகப் பெருமைமிக்க தருணத்தை இன்று அடைந்திருப்பார். தனது குடும்பத்தை உலகமே வியந்து பாராட்டும் ஒரு மாற்றத்தை ஆண்டி கண்டிருப்பார்.
அவரது மூன்றாவது மகள் ராஜேஸ்வரி, ஐஐடி-மெட்ராஸில், சேர்வதற்கான வாய்ப்பை பெற்ற முதல் பழங்குடி மாணவியாக வரலாறு படைத்துள்ளார்.
அடிப்படை வசதிகள் இல்லாத, ஒற்றை வீட்டில் இருந்தாலும் கற்றலை மட்டுமே என்றுமே நிறுத்தவில்லை ராஜேஸ்லரி. 8ம் வகுப்பு வரை கருமந்துறை தனியார் பள்ளியில் படித்தவர், அதன் பின்னர், கருமந்துறை அரசு உண்டு உறைவிட மேல்நிலைப் பள்ளியில் 9ம் வகுப்பு முதல் படித்துள்ளார். 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 438 மதிப்பெண்கள் எடுத்தவர், 12ம் வகுப்பு தேர்வில் 600க்கு 521 மதிப்பெண்களை பெற்றார்.
வேதியியல், கணிதத்தில் சிறப்பாக படித்த ராஜேஸ்வரியை ஐஐடியில் சேர்வதற்கான ஜேஇஇ நுழைவுத் தேர்வில் பங்கேற்குமாறு ஆசிரியர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
“என்னுடைய சகோதரர்கள் படித்தவர்களாக இருந்தாலும் அவர்களுக்கு ஐஐடியில் சேர்ந்து படிப்பது பற்றி தெரியவில்லை. என்னுடைய ஆசிரியர்கள் எனக்கு வழிகாட்டினார்கள். அவர்களிடம் பெற்ற பயிற்சி எனக்கு போட்டித் தேர்வுக்கு உதவியது. JEE அட்வான்ஸ்டு தேர்வுக்காக, ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் உள்ள அரசு நடத்தும் உறைவிட பயிற்சி முகாமில் பங்கேற்று பயிற்சி பெற்றேன்,” என்று கூறியுள்ளார் ராஜேஸ்வரி.
திங்கட்கிழமை வெளியிடப்பட்ட JEE அட்வான்ஸ்டு தேர்வு முடிவுகளில், பட்டியல் பழங்குடி பிரிவில் ராஜேஸ்வரி அகில இந்திய தரவரிசையில் 417-வது இடத்தைப் பெற்றுள்ளார். தமிழ்நாடு அரசின், தொலைதூர பழங்குடி பகுதிகளைச் சேர்ந்த மாணவர்களைப் பயிற்றுவிக்கும் முயற்சிகளால், 28 அரசு பழங்குடி உறைவிடப் பள்ளிகளைச் சேர்ந்த பல மாணவர்கள் சமீபத்திய ஆண்டுகளில் தேசிய தொழில்நுட்ப நிறுவனங்களில் சேர்க்கை பெற்றுள்ளனர். ஆனால், ராஜேஸ்வரி JEE அட்வான்ஸ்டு தேர்வில் வெற்றி பெற்று IIT-யில் சேர தகுதி பெற்ற முதல் மாணவியாவார்.

அப்பாவின் இழப்புக்கு பிறகு, குடும்ப பொருளாதாரத்தை சுமக்கும் அண்ணன், கூலித் தொழில் செய்யும் அம்மா என ஏழ்மையும் வறுமையும் மிக்க குடும்பப் பின்னணியாக இருந்தாலும், மறைந்த தனது அப்பாவின் கனவை நிறைவேற்றி இருக்கிறார் ராஜேஸ்வரி.
கல்வி ஒன்றே ஒருவருக்கு உயர்வைத் தரும் என்று தீர்க்கமாக நம்பிய ஆண்டியின் வாழ்நாள் போராட்டத்திற்கு வெற்றியை தேடித் தந்திருக்கிறார் அவருடைய மகள் ராஜேஸ்வரி என்று ஆசிரியர்கள், ஊர்மக்கள் அவரை பாராட்டி வருகின்றனர். தற்போது குமிழி, ஏக்லவ்யா மாதிரி உறைவிடப் பள்ளியில், IIT சூழலுக்கு உதவும் விதத்திலான ஆங்கில பேச்சு மற்றும் மென்திறன் கற்றல் நிகழ்ச்சியில் பங்கேற்று பயிற்சி பெற்று வருகிறார் ராஜேஸ்வரி.
“என்னுடைய இந்த சாதனையைப் பார்த்து மேலும் பல பழங்குடி மாணவர்கள் பெரிய அளவில் கனவு காண வேண்டும். என்னால் முடிந்த உதவிகளைச் செய்து அவர்களும் ஐஐடியில் சேர்வதற்கான உதவிகளைச் செய்வேன்,” என்று ராஜேஸ்வரி தெரிவித்துள்ளார்.

