கோவை எஸ்விபி டெக் பார்க்கில் 82,000 சதுர அடியில் ஃபோர்டு நிறுவனத்தின் மூன்றாவது தொழில் வர்த்தக மையம்!
ஆட்டோமொபைல் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான ஃபோர்டு மோட்டாரின் உலகளாவிய திறன் மைய (ஜிசிசி) பிரிவான ஃபோர்டு பிஸ்னஸ் சொல்யூஷன்ஸ், தமிழ்நாட்டின் கோவையில் புதிய மையத்தை திறந்துள்ளது.
ஆட்டோமொபைல் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான ஃபோர்டு மோட்டாரின் உலகளாவிய திறன் மைய (ஜிசிசி) பிரிவான ஃபோர்டு பிஸ்னஸ் சொல்யூஷன்ஸ் (FBS), தமிழ்நாட்டின் கோவையில் புதிய மையத்தை திறந்துள்ளது. சென்னையில் பெரிய மையம் மற்றும் அண்மையில் பெங்களூருவில் துவங்கப்பட்ட சிறிய மையத்தை தொடர்ந்து இந்தியாவில் நிறுவனம் துவங்கும் மூன்றாவது மையமாக இது அமைகிறது.
கோவையில் 800 இருக்கைகளை கொண்ட மையம் நிறுவனத்தின் தணிக்கை, நிதி (ஃபோர்டு கிரெடிட்), மற்றும் இதர வர்த்தக செயல்பாடுகளுக்கானதாக அமையும். கோவையில் அமைந்துள்ள புதிய மையத்தை தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா சம்பத் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்.

சென்னையில் உள்ள பிரதான மையம் (ஜிசிசி) சிக்கலுக்கு உள்ளானால், முக்கிய செயல்பாடுகள் தடையின்றி தொடர்வதை உறுதி செய்யும் வர்த்தக தொடர்ச்சி மையமாக இந்த அலுவலகம் அமைகிறது, என ஃபோர்டு பிஸ்னஸ் சொல்யூஷன்ஸ் இந்திய சைட் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் கங்கபிரியா சக்ரவர்தி தெரிவித்தார்.
“இதற்கு முன் கோவையில் செயல்படுத்தி வந்த மையத்தை கோவிட் காலத்தில் மூடினோம். உள்ளூர் திறமையாளர்கள் தொடர்பான சிறந்த அனுபவத்தை இந்த மையம் கொண்டிருந்தது. குறிப்பாக தரம், வர்த்தகம், செயல்படுகள், பொறியியல் செயல்பாடுகள் உள்ளிட்ட பிரிவுகளில் சிறந்த அனுபவம் கொண்டிருந்தது,” என்றும் அவர் கூறினார்.
பேக்கப் செயல்பாடுகள் தவிர சில தணிக்கை குழுக்களும் புதிய மையத்தில் இருந்து செயல்படும் என்றும் கூறினார்.
கோவை மையம், எஸ்விபி டெக் பார்க்கில் மூன்று மாடிகளில் 82,000 சதுர அடியில் அமைந்துள்ளது. கூட்டு மற்றும் ஹைபிரிட் பணிக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டுள்ளது.
“ஃபோர்டு நிறுவனத்திற்குள் நிறைய மாற்றங்கள் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக பல புதிய அமைப்புகள் நிறுவப்பட்டு வருகின்றன. தணிக்கை மற்றும் ஃபோர்டு கிரெடிட் குழு கோவையில் இருந்து முக்கியமாக செயல்படும் நிலை இருக்கும்,” என்றும் அவர் கூறினார்.
இந்த மையத்தின் திறனை பொறியியல் அல்லது தொழில்நுட்பக் குழுக்கள் கொண்டு விரிவாக்கம் செய்யும் திட்டம் தற்போது இல்லை என்றாலும், கோவையின் வலுவான ஆட்டோமொபைல் மற்றும் தொழில் சூழலை கொண்டு பார்க்கும் போது இதற்கான சாத்தியம் இருப்பதாக கூறினார்.
இந்திய செயல்பாடுகளை பொருத்தவரை, மென்பொருள் பொறியியல், தரவு அறிவியல் மற்றும் தரவு அலசல் ஆகிய பிரிவுகளில் பெரிய அளவு தேவை உள்ளது என்று கூறினார். கோவை குழுவைச் சேர்ந்து, ஃபோர்டு பிஸ்னஸ் சொல்யூஷன்ஸ் ஊழியர்கள் எண்ணிக்கை இந்தியாவில் 12,000 ஆக உயர்கிறது. இதன் பெரும் பகுதி சென்னையை மையத்தில் உள்ளது.
“ஃபோர்டு பிஸ்னஸ் சொல்யூஷன்ஸ் 25 ஆண்டுகளாக தமிழ்நாட்டிற்கு ஈடுபாடு மிக்க பங்குதாரராக இருக்கிறது. இந்த கோவை விரிவாக்கம் இந்த நம்பகத்தன்மையின் தொடர்ச்சியாக அமைகிறது. இந்த விரிவாக்கத்தை வரவேற்கிறோம் மற்றும் கோவை மக்களுக்கு இது உருவாக்கக் கூடிய வாய்ப்புகளை வரவேற்கிறோம்,” என இது தொடர்பான அறிக்கை ஒன்றில் தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா சம்பத் கூறியுள்ளார்.
Edited by Induja Raghunathan

