Freshworks நிறுவனத்தின் தலைமை தயாரிப்பு மற்றும் தொழில்நுட்ப அதிகாரியாக ரயான் மானிங் நியமனம்!
யான் மானிங், உலகளாவிய மென்பொருள் நிறுவனங்கள் மற்றும் ஸ்டார்ட்அப் நிறுவனங்களில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர்.
அமெரிக்க நாஸ்டாக் (Nasdaq) பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள SaaS மென்பொருள் நிறுவனமான பிரெஷ்வொர்க்ஸ் (Freshworks), தனது புதிய தலைமை தயாரிப்பு மற்றும் தொழில்நுட்ப அதிகாரியாக (Chief Product and Technology Officer) ரயான் மானிங்கை நியமித்துள்ளது. அவர் ஆகஸ்ட் 10-ஆம் தேதி முதல் பொறுப்பேற்க உள்ளார். நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி டெனிஸ் உட்சைடுக்கு இவர் ரிப்போர்ட் செய்வார்.
இந்தப் பதவியில் இருந்த ஸ்ரீநி ராகவன், தொழில்முனைவு முயற்சியில் ஈடுபடுவதற்காக நிறுவனத்தை விட்டு விலகுகிறார். அவர் கடந்த 2024 டிசம்பரில் தலைமை தயாரிப்பு அதிகாரியாக பிரெஷ்வொர்க்ஸில் இணைந்திருந்தார்.
ரயான் மானிங், உலகளாவிய மென்பொருள் நிறுவனங்கள் மற்றும் ஸ்டார்ட்அப் நிறுவனங்களில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். குறிப்பாக சர்விஸ் நவ் நிறுவனத்தில் முக்கிய பொறுப்புகளை வகித்துள்ளார். மேலும், அவர் இணைந்து தொடங்கிய ஃப்ரீ ஏஜெண்ட் சி.ஆர்.எம் நிறுவனம் பின்னர் Servis.ai ஆக வளர்ச்சி பெற்றுள்ளது.
புதிய பொறுப்பில், பிரெஷ்வொர்க்ஸின் செயற்கை நுண்ணறிவு (AI), தகவல் தொழில்நுட்ப சேவைகள் (IT) மற்றும் வாடிக்கையாளர் அனுபவ (Customer Experience) தயாரிப்புகளுக்கான தயாரிப்பு மற்றும் தொழில்நுட்ப உத்திகளை ரயான் மானிங் வடிவமைப்பார். நிறுவனத்தின் உலகளாவிய தயாரிப்புத் திட்ட வரைபடம் (Product Roadmap) மற்றும் பொறியியல் குழுவையும் அவர் வழிநடத்துவார்.
மேலும், தயாரிப்பு மற்றும் தொழில்நுட்பக் குழுக்களை ஒரே நிர்வாகத் தலைமையின் கீழ் ஒருங்கிணைப்பதன் மூலம், நடுத்தர அளவிலான மற்றும் வேகமாக செயல்படும் நிறுவனங்களிடையே தனது சந்தை விரிவாக்கத்தை மேலும் வலுப்படுத்த பிரெஷ்வொர்க்ஸ் திட்டமிட்டுள்ளது. தற்போதைய தலைமை தொழில்நுட்ப அதிகாரி (CTO) முரளி சுவாமிநாதன், இனி ரியான் மானிங்கிடம் ரிப்போர்ட் செய்வார்.
இந்த நியமனம் குறித்து நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி டென்னிஸ் உட்சைட் கூறுகையில்,
"வாடிக்கையாளர்களின் தேவைகளை விரைவாகப் புரிந்து, சந்தையில் வெற்றி பெறும் தயாரிப்புகளாக மாற்றும் திறன் ரியான் மானிங்கிடம் உள்ளது. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் வாடிக்கையாளர்கள் புதிய திறன்களை விரைவாகப் பயன்படுத்தும் விதத்தை மாற்றி வரும் நிலையில், தயாரிப்பு மற்றும் பொறியியல் அணிகளை மீண்டும் ஒரே அமைப்பின் கீழ் கொண்டு வருவதன் மூலம் அதிக வேகத்துடனும் குறைந்த சிக்கல்களுடனும் செயல்பட முடியும்," என்றார்.
ரயான் மானிங் கூறுகையில்,
"ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் முதல் உலகளாவிய மென்பொருள் நிறுவனங்கள் வரை சேவை மேலாண்மை தயாரிப்புகளை உருவாக்கிய அனுபவம் எனக்கு உள்ளது. சக்திவாய்ந்த தொழில்நுட்ப திறன்களையும், விரைவான செயல்படுத்தும் ஆற்றலையும் ஒருங்கிணைத்து, தற்போதைய சந்தையின் தேவையை பூர்த்தி செய்யும் தனித்துவமான நிலையில் பிரெஷ்வொர்க்ஸ் உள்ளது," என்றார்.
இதற்கிடையில், 2026-ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் (Q1), பிரெஷ்வொர்க்ஸ் நிறுவனம் 228.6 மில்லியன் அமெரிக்க டாலர் வருவாயைப் பதிவு செய்துள்ளது. இது கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் பதிவான 196.3 மில்லியன் டாலருடன் ஒப்பிடுகையில் 16 சதவீத உயர்வாகும். அதே நேரத்தில், நிறுவனத்தின் நிகர இழப்பு 1.3 மில்லியன் டாலரிலிருந்து 4.8 மில்லியன் டாலராக அதிகரித்துள்ளது. இதனால் வருவாய் வளர்ச்சி தொடர்ந்தாலும், லாபகரமான செயல்பாட்டை எட்டும் சவால் நிறுவனத்திற்கு நீடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

