சென்னை போட் கிளப்பில் 47,168 சதுர அடி கொண்ட ரூ.211 கோடி மதிப்பிலான சொத்தை வாங்கிய Freshworks கிரீஷ் மாத்ருபூதம்!
ஆர்.ஏ.புரத்தில் உள்ள போட் கிளப் சாலையின் 13-ஆம் எண் நிலப்பகுதியில் அமைந்துள்ள ‘அனிதாஸ் அபார்ட்மெண்ட்’ என்ற இந்த சொத்து, சுமார் 7.65 கிரவுண்டுகள் பரப்பளவில் அமைந்துள்ளது. 5 தளங்களைக் கொண்ட இந்த கட்டிடத்தின் மொத்த கட்டிட பரப்பளவு 47,168 சதுர அடியாகும்.
சென்னையின் மிக உயர்தர குடியிருப்பு பகுதிகளில் ஒன்றான போட் கிளப் பகுதியில், ரூ.211 கோடி மதிப்பிலான சொத்தை Freshworks நிறுவனத்தின் நிறுவனர் கிரீஷ் மாத்ருபூதம் வாங்கியுள்ளார், என தி ஹிந்து பத்திரிகை முதலில் செய்தி வெளியிட்டது. இந்த ஒப்பந்தம், 2026ஆம் ஆண்டில் சென்னை நகரில் இடம்பெற்ற குறிப்பிடத்தக்க உயர்மதிப்புள்ள குடியிருப்பு சொத்து பரிவர்த்தனைகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது.
சொத்து பதிவுத் தகவல்களின்படி, இந்த பரிவர்த்தனை ஜூன் 17ஆம் தேதி பதிவு செய்யப்பட்டுள்ளது. வாங்குபவராக ரத்னா கிரீஷ் மாத்ருபூதம் பெயர் இடம்பெற்றுள்ள நிலையில், விற்பனையாளர்களாக பிரகாஷ் தோத்லா ரெட்டி மற்ரும் அனிதா தோத்லா ரெட்டி ஆகியோர் உள்ளனர்.
ஆர்.ஏ.புரத்தில் உள்ள போட் கிளப் சாலையின் 13-ஆம் எண் நிலப்பகுதியில் அமைந்துள்ள 'அனிதாஸ் அபார்ட்மெண்ட்' என்ற ரூ.211 கோடி மதிப்பிலான இந்த சொத்து, சுமார் 7.65 கிரவுண்டுகள் பரப்பளவில் அமைந்துள்ளது. ஐந்து தளங்களைக் கொண்ட இந்த கட்டிடத்தின் மொத்த கட்டிட பரப்பளவு 47,168 சதுர அடியாகும்.
பதிவு ஆவணங்களின்படி, இந்த சொத்தை அடமானமாகக் கொண்டு ஹெச்.எஸ்.பி.சி. வங்கியிடமிருந்து ரூ.140 கோடி கடன் பெறப்பட்டுள்ளது.

இந்த சொத்து வாங்குதல், கிரீஷ் மாத்ருபூதத்தின் தனிப்பட்ட குடியிருப்பு பயன்பாட்டிற்காக மேற்கொள்ளப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சென்னையில் பணக்காரர்கள் விரும்பும் குடியிருப்பு பகுதிகளில் ஒன்றாக விளங்கும் போட் கிளப், குறைந்த அளவிலான நிலவசதி, மரங்கள் நிறைந்த சாலைகள் மற்றும் பரந்த தனியார் வளாகங்களால் பிரபலமானது. இதனால் இப்பகுதியில் நடைபெறும் சொத்து பரிவர்த்தனைகள் அரிதானவை. தொழில்துறை முன்னோடிகள், பெரும் தொழில் குடும்பங்கள் மற்றும் மூத்த நிர்வாகிகள் வசிக்கும் பகுதியாகவும் இது நீண்டகாலமாக அறியப்படுகிறது.
இந்த சொத்து முன்னதாக, பிரிஜ் மோகன் ரெட்டி குடும்பத்தினரின் உரிமையில் இருந்தது. சமீப ஆண்டுகளில் பல ஸ்டார்ட்அப் நிறுவனர்கள் மற்றும் தொழில் தலைவர்கள் மேற்கொண்ட உயர்மதிப்புள்ள குடியிருப்பு சொத்து முதலீடுகளின் வரிசையில், இந்த ஒப்பந்தமும் முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது.
தகவல் உதவி: தி ஹிந்து, தொகுப்பு: முத்துகுமார்

