8,000 ரூபாய் முதலீட்டில் தொடங்கி இன்று ரூ.60 லட்சம் டர்ன்ஓவர் - 58 வயதில் அசத்தும் ‘வசீகர வேதா’ நிறுவனர் விஜயா!
தோட்டத்தில் கிடைத்த விளைபொருட்களை வைத்து தலைமுடி எண்ணெய், பல்பொடி போன்ற இயற்கைப் பொருட்களை தயாரித்து விற்பனை செய்யும் ‘வசீகர வேதா’ நிறுவனத்தை தனது 50 வயதில் துவங்கிய விஜயா, இன்று மாதம் 2.5 லட்ச ரூபாய் மட்டுமல்ல பெரிய அளவிலான சமூக அங்கீகாரம் மற்றும் மரியாதையும் சம்பாதித்துள்ளார்.
தஞ்சாவூரின் அருகில் கிராமத்தில் பிறந்து, திருமணமாகி வீட்டை வழிநடத்தும் House Wife ஆக இருந்த விஜயா, தனது 50 வயதை எட்டும் தருணத்தில் தொழிலைத் துவங்கி, இன்று லட்சங்களில் வருமானம் ஈட்டும் பெண் தொழில்முனைவோராக உருவெடுத்துள்ளார்.
தோட்டத்தில் கிடைத்த விளைபொருட்களை வைத்து தலைமுடிக்குத் தேய்க்கும் எண்ணெய், பல்பொடி போன்றவற்றை தயாரித்து விற்பனை செய்தபோது 2014ல் விஜயாவுக்கு கிடைத்த வருமானம் என்னேவோ வெறும் 4,000 ரூபாய் தான். ஆனால், அவர் துவங்கிய ‘வசீகர வேதா’ (Vaseegrah Veda) எனும் நிறுவனம் இன்றைக்கு அவருக்கு சம்பாதித்துக் கொடுப்பதோ மாதம் 2.5 லட்சம் மட்டுமல்ல பெரிய அளவிலான சமூக அங்கீகாரமும், மரியாதையும்.
நம்பிக்கையையும், விடாமுயற்சியையும் ஆயுதமாகக் கொண்டு சாதித்த விஜயா, இன்று தன்னைப்போல பல தொழில்முனைவோர்களை உருவாக்கி மாற்றங்களை விதைத்து வருகிறார்.
விஜயா மகாதேவன், தான் கடந்து வந்த பயணத்தையும், ஆண்டுக்கு 60 லட்சம் டர்ன்ஓவர் கடந்துள்ள ‘வசீகர வேதா’ தொழில் குறித்தும் நம்மிடம் மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டார்.

வசீகர வேதா குழுவுடன் விஜயா மகாதேவன்
இயற்கையான பொருட்கள் பயன்படுத்த பிடிக்கும்!
விஜயா மகாதேவன் தஞ்சாவூரின் பெரியகோவிலில் இருந்து இரண்டு கிலோ மீட்டர் தொலைவிலுள்ள சீனிவாசபுரத்தைச் சேர்ந்தவர். கணவர் ஆசிரியராக பணியாற்றி வந்தார், கொஞ்சம் விவசாயம் செய்து வருகிறார்கள். என் மகன்களான ஸ்ரீகார்த்திகேயன், சுரேந்தர் BE முடித்துள்ளனர். B.A தமிழ் முடித்துள்ள விஜயா, வீட்டை பராமரித்துக்கொள்ளும் சாதாரண House wife–ஆகத்தான் இருந்ததாக கூறினார்.
”சிறு வயது முதலே எனக்கு அதிக ரசாயனம் கொண்ட சோப், ஷாம்பு உள்ளிட்டவை பயன்படுத்தப்பிடிக்காது. இதனால், கடுக்காய், ஆவரம்பூ, கருவேப்பிள்ளை போன்ற பல இயற்கை விளைபொருட்களைக் கொண்டு குளியல்பொடி; கடுக்கா, கிராம்பு, வேலம்பட்டை போன்றவற்றில் பல்பொடி, கருவேப்பிள்ளை செக்கு தேங்காய் எண்ணெய், என எங்கள் பகுதியில் கிடைக்கும் பொருட்கள், எங்கள் தோட்டத்தில் விளைவித்த பொருட்களைக் கொண்டு முடி வளருவதற்கான எண்ணெய் தயாரித்து நாங்கள் பயன்படுத்தி வந்தோம்,” என்றார்.
”என் தங்கையின் மகள் சிங்கப்பூரில் வசித்து வருகிறார். 2017ம் ஆண்டு அவர் எங்கள் வீட்டில் நான் பயன்படுத்தும் பொருட்களைப் பார்த்த போது, இவற்றை சிங்கப்பூரில் விற்பனை செய்தால் நல்ல வருமானம் கிடைக்கும் சிறிய ஒரு பாக்கெட் 3 டாலருக்கும் அதிகமாக விற்பனையாகும் எனக்கூறினார். அப்போது, வீட்டில் தானே இருக்கிறோம், இதை ட்ரை செய்து பார்ப்போம், நமக்குத் தெரிந்த வேலைதான் என நினைத்து, இயற்கையான பல்பொடி, முடி வளர எண்ணெய், குளியல் பொடி போன்றவற்றை தயாரித்தேன். இது தான் என் தொழிலின் துவக்கம்,’’ என்கிறார் அவர்.

வெறும் 8000 ரூபாய் முதலீட்டில் துவங்கிய தொழில்!
இன்று 60 லட்சம் Turnover செய்யும் ‘வசீகர வேதா’ எனும் பெரும் தொழிலை வெறும் 8,000 ரூபாய் முதலீட்டில் துவங்கியதாகத் தெரிவிக்கிறார் விஜயா மகாதேவன்.
‘‘சிங்கப்பூர் அனுப்புவதற்கான பொருட்களை தயாரிக்க, எங்கள் தோட்டத்தில் விளைவித்த கருவேப்பிள்ளை, தேங்காய், ஆவாரம்பூ, செம்பருத்தி போன்றவற்றை வைத்து, சில பொருட்களை விலைக்கு வாங்கினேன். 8 ஆயிரம் ரூபாயில் தலைக்குத் தேய்க்கும் மூலிகை இயற்கை எண்ணெய், குளியல் பொடி, பல்பொடி தயாரித்து விட்டேன்.”
அப்போது, இந்தப்பொருட்களுக்கு ஒரு பெயர் வைக்க நினைத்த போது, குளியல் பொடி போன்றவற்றை உபயோகப்படுத்தி வசீகரமாக இருக்க வேண்டும், அதற்கு நான் தயாரிக்கும் பொருட்கள் வேதமாக இருக்கும் என நினைத்து ‘வசீகர வேதா’ பெயர் வைத்து விட்டேன்.
துரதிருஷ்டவசமாக என் தங்கை மகள் சிங்கப்பூர் கொண்டு செல்ல முயன்ற போது அந்தப்பொருட்கள் எடை, சர்டிபிகேசன் என பல காரணங்கள் சொல்லி ஏர்போட்டிலேயே நிறுதப்பட்டது. நான் ஆசையாக தயாரித்த பொருட்கள் வீட்டிற்கே திரும்ப வந்துவிட்டது.
அப்போது துவண்டு போகாமல் முதலீட்டையாவது எடுத்துவிடலாம் எனத்தோன்றியது. என் மகன்களின் டியூசன் சென்டர், பள்ளி ஆசிரியர்கள், என் நண்பர்கள் என மற்றவர்களுக்கு எல்லாம் கொடுக்க ஆரம்பித்தேன், சில பொருட்களை மிகக்குறைந்த விலைக்கு விற்பனை செய்யத்துவங்கினேன். பயன்படுத்தியவர்கள் எல்லாம் மீண்டும் பொருட்களை கேட்கத் துவங்கிவிட்டனர்,’’ என்கிறார்.
‘‘ஆச்சரியம் என்னவென்றால் 8000 ரூபாய் முதலீடு செய்து குறைந்த விலைக்கு சில மாதங்களில் அனைத்தையும் விற்பனை செய்ததில், 12 ஆயிரம் ரூபாய் கிடைத்தது. முதலீடு போக 4000 ரூபாய் லாபமாக கிடைத்ததை நினைத்து மகிழ்ச்சியாக இருந்தது,’’ என்கிறார் விஜயா.
இந்த சிறிய லாபம் தான் தொழிலை விரிவுபடுத்துவதற்கான நம்பிக்கையை ஏற்படுத்தியதாகக்கூறும் அவர்,
"சிறிய லாபம் என்றாலும், வீட்டில் முடங்கிக் கிடக்கும் என்னைப்போன்ற 50 வயதான பெண்ணுக்கு இது பெரும் லாபம். லாபம் என்பதைத் தாண்டி வயதானாலும் நம்மாலும் சாதிக்க முடியும், இதைத் தொழிலாக மாற்றி நமக்கென தனியொரு அடையாளத்தை உருவாக்க முடியுமென்ற நம்பிக்கை பிறந்தது,’’ என்கிறார்.
‘நான் முதன்முதலாக தயாரித்த பொருட்களை விற்பனை செய்த பின், மீண்டும் தயாரிப்பு துவங்கிய போது ஒரு யோசனை வந்தது. நாம் எப்படி இயற்கையான முறையில் ஆவாரம்பூ, செம்பருத்தி, தேங்காய் போன்றவற்றை சாகுபடி செய்கிறோம்; அதில், எப்படியெல்லாம் நாம் பொருட்களை தயாரிக்கிறோம் என வாடிக்கையாளர்கள் தெரிந்துகொள்ள வேண்டுமென நினைத்தேன். இதற்காக யூடியூப், இன்ஸ்டாகிரம் போன்றவற்றில் கணக்கு துவங்கினேன்.
இவற்றை வீடியோவாக எடுத்து நாங்கள் பதிவு செய்து கொண்டிருந்தபோது, புனே, டெல்லி, மகாராஷ்டிரா என பல வடமாநிலங்களில் இருந்து தான் அதிக ஆதரவு கிடைத்தது.
சிலர் எனது பொருட்களை பயன்படுத்திவிட்டு அதன் ரிசல்ட்களை வீடியோவாக எனக்கு அனுப்பினர். அவற்றை சமூக வலைதளங்களில் பதிவேற்றிய போது நல்ல வரவேற்பு கிடைத்து, தலைக்கு எண்ணெய் வேண்டும், முகத்திற்கு பொடி வேண்டும், சீக்காய் போன்ற குளியல் பொடி, சோப்பிற்கு பதிலாக மாவு போன்றவை வேண்டுமென கேட்டதை மகிழ்ச்சியுடன் பகிர்ந்தார்..
நான் அவர்கள் கேட்கும் பொருட்களை எல்லாம் தயாரித்துக் கொடுத்த போது, அதிக ஆர்டர்கள் குவிந்தன. இந்தியா முழுவதிலும் இருந்து டிமாண்ட் அதிகமானது. 2019ம் ஆண்டுவாக்கில் நான் தொழிலை விரிவுபடுத்த நினைத்தேன். 2020ம் ஆண்டில் Prime Minister's Employment Generation Programme (PMEGP) திட்டத்தில் சிறுகுறு தொழில்முனைவோருக்கான கடன் கிடைத்தது.
“சொந்த இடத்தில் சிறிய தொழிற்சாலை அமைத்தேன். எங்கள் வீட்டின் அருகேயுள்ள இரண்டு தெருக்களில் உள்ள என் தோழிகள், வயதானவர்கள், படிக்காத பெண்கள், படித்துவிட்டு வேலையில்லாத பெண்கள் என சில பெண்களை வேலைக்கு அழைத்தேன். அவர்களுடன் இணைந்து அதிக ஆர்டர்களுக்கு பொருட்களை அனுப்பும் வேலையை துவங்கினேன். வெறும் 8000 ரூபாயில் துவங்கிய தொழில் மெல்ல மெல்ல வளர்ச்சி அடைந்தது,’’

64 பொருட்கள் 60 லட்சம் டர்ன்ஓவர்
‘‘என் தோட்டத்தில் 10 பேர், தொழிற்சாலையில் 11 பேர், மார்கெட்டிங்கில் மட்டுமே 40 பேர் பணியாற்றி வருகின்றனர். இதற்குக்காரணம் என் மகன்களின் சர்ப்போர்ட் தான்.
தொழிற்சாலை துவங்கியதும் நிறைய பொருட்கள் தயாரிக்க வேண்டி வந்தது. பலருக்கும் பொருட்கள் கொரியரில் அனுப்புவது, ஆர்டர் எடுப்பது, அதை ஃபாலோ செய்வது, என பல சிக்கல்கள் எழுந்தன.
அப்போது, BE முடித்துவிட்டு சாப்ட்வேர் துறையில் அனுபவம் கொண்டிருந்த என் மகன் ஸ்ரீகார்த்திகேயன், வேலையை விட்டுவிட்டு, முழு நேரமாக எங்கள் நிறுவனத்திற்கான மொபைல் ஆப், பில்லிங் சாப்ட்வேர், ஆர்டர்களை ஃபாலோ செய்வதற்கான ஆப், இணையதளத்தை உருவாக்கினார். அதில், ஏ.ஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இணையதளத்தில் சாட்பாட் மூலம் வாடிக்கையாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் வகையில் உருவாக்கினார். இதனால், ஆர்டர்கள் எடுப்பது, அதை தவறின்றி பேக் செய்வது, டெலிவரி அனுப்புவது என அனைத்து வேலைகளும் சுலபமானது.

மேலும், இரண்டாவது மகன் சுரேந்தர் BE Civil முடித்திருந்தாலும் அவருக்கு விவசாயத்தில் ஆர்வம் என்பதால், அவரும் வேலையை விட்டுவந்து முழுநேரமாக எங்களுக்கு தேவையான மூலப்பொருட்களை எங்கள் தோட்டத்தில் விளைவித்து எடுப்பது, வெளியில் வாங்கும் பணிகளை செய்து கொடுக்கிறார்.
செம்பருத்தி, கடுக்காய், சீகக்காய், ரோஸ் பவுடர், முருங்கை பவுடர், முகத்திற்கான பொடி, குளியல் பொடி, தலைக்கு தேய்க்கும் எண்ணெய் என, ஆண், பெண், குழந்தைகளுக்கான பல பொருட்களை உருவாக்கினோம். மரச்செக்கு அமைத்து செக்கில் ஆட்டிய எண்ணெயும் தயாரிக்கிறோம். நானே ஒவ்வொரு பொருளாக தயாரித்து அதை பயன்படுத்திப்பார்த்து புதிதாக பொருட்களை உருவாக்கத்துவங்கினேன்.’’
‘‘வாடிக்கையாளர்களின் தேவைக்கேற்ப ஒவ்வொன்றாக தயாரிக்கத்துவங்கி இன்று 64 பொருட்களை தயாரித்து விற்பனை செய்து வருகிறோம்.’’
‘தொடர்ச்சியாக பொருட்கள் தயாரிப்பில் ஈடுபடுவதால், இயற்கையான பொருட்கள் தயாரிப்பது குறித்து படிப்பும் வேண்டும் என்பதற்காக, கோவை வேளாண் பல்கலை நடத்தும் ஆறு மாத சான்றிதழ் படிப்பான ‘Herbal Formulation and Technology’ முடித்துள்ளார் விஜயா.
நான் ஆரம்பம் முதலே பல பொருட்களை பொடியாக்கி மூலிகைகள், இயற்கை பொருட்களை அதன் தன்மையிலேயே இயற்கையாக கொடுத்து வந்தேன். ஆனால், இந்த சான்றிதழ் படிப்பு முடித்த போது பலரும் ரசாயனம் பயன்படுத்துகிறார்கள், பொடியை பேஸ்ட் போல மாற்ற வேண்டுமென்றால் அதற்கு நாம் ரசாயனங்கள் பயன்படுத்த வேண்டிய கட்டாயத்தை கற்றுக்கொண்டேன்.
”இதனால், நான் பேஸ்ட் போன்ற பொருட்களை தயாரிப்பதை தவிர்த்து, ரசாயனமின்றி வெறும் பொடியாக மட்டுமே தருகிறேன். முகம், தலைமுடி, உடல் என குளியல் பொடி, தலைக்கான பொடி என அனைத்துமே பொடியாகத்தான் இருக்கும். அதை வாடிக்கயாளர்கள் நீரில் கலந்து பயன்படுத்தலாம். இப்படி எந்த வகையிலும் ரசாயனத்தை நான் ஊக்குவிப்பதில்லை,” என்கிறார்.
தயாரிப்பு, விற்பனை என துவக்கத்தில் நிறையபேர் தேவைப்பட்ட நிலையில், நாங்கள் ஒரு திட்டத்தை துவங்கியுள்ளோம். கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள் மாலை நேரங்களில் எங்களுக்காக வந்து ஆப், இணையதளம் உள்ளிட்டவற்றை பராமரித்து, அதை டெவலப் செய்து வருகிறார்கள், இவர்களுக்கு தொழிலை கற்றுக்கொடுத்து சம்பளமும் வழங்கி வருகிறோம்,’ என்கிறார் அவர்.

‘தோல் கொடுப்போம் தொழில்முனைந்திடு’ திட்டம்!
வெறும் தொழில்முனைவோராக பணம் மட்டும் சம்பாதிக்காமல், பலருக்கும் எடுத்துக்காட்டாகவும், வழிகாட்டியாகவும் வலம் வருகிறார் விஜயா.
‘‘எனக்கு 58 வயதாகிறது இந்த ஒரு தசாப்த தொழில் அனுபவத்தில் பல தடைகள், சறுக்கல்களை சந்தித்து இன்று லாபகரமாக தொழில் செய்து வருகிறேன். துவக்கத்தில் ஆர்டர்கள் கிடைக்காமல் தொழிலின் எதிர்காலம் குறித்த பயத்திலும், தொடர்ச்சியாக விடாப்பிடியாக நான் நம்பிக்கையாக தொழில் செய்து வந்தேன். இன்று வெற்றி பெற்று இந்தத்தொழில் மூலம் சமூகத்தில் எனக்கென ஒரு தனி அடையாளம், பெரிய அளவிலான அங்கீகாரம், தற்சார்பு பொருளாதாரம், என அனைத்தும் கிடைத்துள்ளது.
“நான் 50 வயதை நெருங்கும் போது தான் தொழில் என்பது எனக்கு சாத்தியமானது. ஆனால், இளம் தலைமுறை ஆரம்பத்திலேயே என்னைப்போல தொழில்முனைவோராக மாற வேண்டும், விவசாயிகள் தாங்கள் விளைவித்த பொருட்களை மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்களாக மாற்றி வாழ்வில் வளர்ச்சியடைய வேண்டும் என்பது தான் எனது நோக்கம். இதற்காக நானும் என் மகன்களும் சேர்ந்து உருவாக்கியது தான், ‘தோல் கொடுப்போம் தொழில்முனைந்திடு’ என்ற திட்டம்.”
இதில், வாரந்தோறும் சனிக்கிழமை எங்கள் தொழிற்சாலையில் இலவச பயிற்சியளித்து வருகிறோம். இந்த பயிற்சியில் நாங்கள் எப்படி தொழில் செய்கிறோம், லேபில் அச்சிடுவது, பேக்கிங் இயந்திரம் வாங்குவது, என தொழில் சார்ந்து அனைத்தையும் அனைவருக்கும் இலவசமாக கற்றுத்தந்து வருகிறோம்.
பலரும் கேட்பார்கள் ‘தொழில் ரகசியத்தை வெளியில் சொன்னால் உங்களது ஆர்டர்கள் போய்விடாதா?’ என்று. என்னை நம்பி என் பொருட்களை பயன்படுத்தும் தற்போது இருக்கும் இந்த வாடிக்கையாளர்களே போதும், பெரிய அளவில் அனைவரையும் ஈர்த்து சம்பாதிக்க வேண்டுமென எனக்கு பெரிய ஆசையும் இல்லை, என்கிறார்.
இருப்பினும், தற்போதைய கஸ்டமர்களை வைத்தே ஆண்டிற்கு 60 லட்சம் ரூபாய் turnover எடுத்து வருகிறோம். நானும் என் மகன்களும் சேர்ந்து மாதம் 2.5 லட்சத்திற்கும் மேல் லாபமாக மட்டுமே சம்பாதிக்கிறோம். இதுவே எங்களுக்குப்போதும். இதுவரை எங்கள் தொழிற்சாலை, ஆன்லைனில் பொருட்கள் விற்பனை செய்து வந்த நாங்கள், சிங்கப்பூரில் ஒரு கடையில் tieup அங்கேயும் ஒரு கடையை துவங்கியுள்ளோம்,’’ என்கிறார் மகிழ்ச்சியுடன்.
பெண் தொழில்முனைவோர்களுக்கு சில அறிவுரைகளை முன்வைக்கும் விஜயா,
‘‘பெண்களே... துவங்குவது மட்டும் தான் நம் வாழ்வில் பெரும் சிக்கல். ஒன்றை துவங்கி நம்பிக்கையுடன் அதைச் செய்து வந்தால் வெற்றி நிச்சயம். ஒரு தொழிலை துவங்க பெரிய அளவில் பணம் வேண்டும் எனக்காத்திருந்தால் நம்மால் துவங்கவே முடியாது. முதலில் இருப்பதை வைத்துத் துவங்கினால் போதும், அதுவே நம் முயற்சியைப் பொறுத்து பெரிதாகும்,’’ என்பதுடன் முடித்துக் கொண்டார் அவர்.

