தற்செயலாக தொழில்முனைவர் ஆன கே.கணேஷ் ‘ஸ்டார்ட்அப் ஐகான்’ ஆன வெற்றிக் கதை!
9 வயதில் தன் தந்தையை இழந்து, டெல்லி அரசாங்க குடியிருப்பில், தமிழ் வழிக்கல்விப் பள்ளியில் படித்த கே.கணேஷ், ஒரு தொழில்முனைவோர் மட்டுமல்ல. இந்தியாவின் தொழில்முனைவுப் பயணத்திற்கே ஒரு புதிய இலக்கணத்தை வகுத்த முன்னோடி ஆன கதை இது.
இந்திய ஸ்டார்ட்அப் உலகின் ‘ஐகான்’ என்று போற்றப்படும் கே.கணேஷ், வெறுமனே ஒரு தொழில்முனைவோர் மட்டுமல்ல. இந்தியாவின் தொழில்முனைவுப் பயணத்திற்கே ஒரு புதிய இலக்கணத்தை வகுத்த முன்னோடி என்று அவரை சொல்லலாம்.
பிக் பாஸ்கெட் (BigBasket), போர்ட்டியா மெடிக்கல் (Portea Medical), ப்ளூஸ்டோன் (BlueStone), ஹோம்லேன் (HomeLane) மற்றும் ட்யூட்டர்விஸ்டா (TutorVista) போன்ற பல வெற்றிகரமான நிறுவனங்களின் பின்னணியில் இருக்கும் இவர், தனது வெற்றிப் பயணத்தை ‘தற்செயல் தொழில்முனைவோர்’ (Accidental Entrepreneur) என்றே குறிப்பிடுகிறார்.
எளிய பின்னணியும் சீரிய முயற்சியும்
கணேஷின் கதை ஒரு வழக்கமான வெற்றிக் கதை அல்ல.
“9 வயதிலேயே என் தந்தையை இழந்தேன். என் தாயார் அரசாங்க குடியிருப்பில் எங்களை வளர்த்தார். நான் டெல்லியில் ஒரு தமிழ் வழிக் கல்விப் பள்ளியில்தான் படித்தேன்...” என்று அவர் தனது கடந்த காலத்தைப் பற்றி நெகிழ்ச்சியுடன் பேசுகிறார்.
1990-களில், துணிகர முதலீட்டாளர்கள் இல்லை, ஏஞ்சல் முதலீட்டாளர்கள் இல்லை. முதல் தலைமுறை தொழில்முனைவோர் என்ற கருத்தே இல்லை. இதுவே தனது பயணத்தை ‘தற்செயல்’ என்று அவர் கூறக் காரணம்.
ஹெச்.சி.எல் நிறுவனத்தில் பணிபுரிந்தபோது, கணேஷ் ஒரு நடைமுறைச் சிக்கலை எதிர்கொண்டார். அதாவது, பல விற்பனையாளர்களிடம் இருந்து கணினிகளை நிர்வகிப்பதில் இருந்த குழப்பம். இதற்கு ஒற்றைத் தீர்வு தேவை என்பதை உணர்ந்தார். அவரது நண்பர்கள் சிலருடன் சேர்ந்து வெறும் ரூ.84,000 மூலதனத்துடன் ஒரு கணினி பராமரிப்பு சேவையைத் தொடங்கினார்.

தொலைநோக்குப் பார்வையுடன் அல்லாமல், அன்றாடத் தேவைக்காகத் தொடங்கிய இந்தச் சிறு தொழில், ஒரு மூன்று தசாப்தங்களுக்கான முதல் பொறியாக அமைந்தது. பிற்காலத்தில் இந்த நிறுவனம் ஐ-கேட் (iGate) நிறுவனத்திடம் வெற்றிகரமாக விற்கப்பட்டது.
“எங்களை அன்று ‘கணினி மெக்கானிக்ஸ்’ என்றுதான் அழைத்தனர். ஆனால், அந்த சிரமம்தான் எங்களின் முதல் வாய்ப்பிற்கு வழிவகுத்தது,” என்கிறார் கணேஷ்.
திருப்புமுனை தருணங்கள்:
தொழில்நுட்பம் சூடுபிடித்த காலத்தில், கணேஷ் ‘கஸ்டமர் அஸெட்’ என்ற மின்னஞ்சல் நிறுவனத்தைத் தொடங்கினார். 3 மில்லியன் டாலர் முதலீட்டைப் பெற்றாலும், வாடிக்கையாளர்களை பெறுவதற்கு முன்பே ‘டாட்காம்’ வீழ்ச்சி தலைவிரித்தாடத் தொடங்கியது. நிறுவனம் மூடப்படும் அபாயத்தில் இருந்தபோது, கணேஷ் ஒரு தீர்க்கமான முடிவை எடுத்தார்.
மின்னஞ்சல் ஆதரவு என்ற தனது அசல் திட்டத்தில் இருந்து விலகி, அதை குரல்வழி பி.பி.ஓ (Voice-based BPO) மாதிரியாக மாற்றினார். இந்த துணிச்சலான திருப்புமுனையே இறுதியில் ‘ஃபர்ஸ்ட் சோர்ஸ்’ (FirstSource) என்ற இன்று பொதுப் பட்டியலில் இருக்கும் நிறுவனமாக மாறியது.
அதன்பின்னர், அவர் ‘மார்க்கெடிக்ஸ்’ (Marketics) என்ற தரவு பகுப்பாய்வு நிறுவனத்தைத் தொடங்கினார். கோக் மற்றும் பி&ஜி போன்ற உலகின் முன்னணி நிறுவனங்களுக்கு சேவை வழங்கிய இந்த நிறுவனம், ‘கே.பி.ஓ’ அல்லது ‘டேட்டா சயின்ஸ்’ போன்ற வார்த்தைகள் புழக்கத்திற்கு வருவதற்கு முன்பே தரவு பகுப்பாய்வில் முன்னோடியாக நின்றது.
“இன்று அனைவரும் ஏஐ பற்றி பேசுகிறார்கள். அன்று நாங்கள் அதை புள்ளியியல் மாதிரிகள் (statistical modeling) என்று அழைத்தோம், உண்மையில் அதைக் கொண்டு பிரச்சினைகளைத் தீர்த்தோம்,” என்று அவர் குறிப்பிடுகிறார்.
கணேஷ் மற்றும் அவரது மனைவி மீனா, ஸ்ரீனி ராகவன் ஆகியோருடன் இணைந்து ‘ட்யூட்டர்விஸ்டா’ (TutorVista) என்ற கல்வித் தொழில்நுட்ப நிறுவனத்தை நிறுவினார். இந்திய ஆசிரியர்களை அமெரிக்க மாணவர்களுடன் ஆன்லைன் மூலம் இணைக்கும் இந்தத் தனித்துவமான முயற்சி, இந்தியாவில் EdTech துறைக்கு ஒரு புதிய வழியைத் திறந்தது.
இந்த நிறுவனம் பிற்காலத்தில் பியர்சன் நிறுவனத்திற்கு விற்கப்பட்டது. இதுதான் கே.கணேஷின் வாழ்க்கையின் மிக முக்கியமான கட்டமான ‘க்ரோத்ஸ்டோரி’ (GrowthStory) என்ற தனித்துவமான புதிய முயற்சியைத் தொடங்க அடித்தளமிட்டது.
“எனக்கு 50 வயதானபோது, மீண்டும் ஒரு நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக இருக்க நான் விரும்பவில்லை. துணிகர முதலீட்டு நிதியைத் தொடங்கவும் எனக்கு விருப்பமில்லை. ஆனால், எனக்கு பங்குதாரராகத் தொடர்ந்து இருக்க வேண்டும் என்று ஆசை,” என்கிறார் கணேஷ்.
இந்தக் கருத்தின் அடிப்படையில் உருவானதுதான் ‘க்ரோத் ஸ்டோரி’. இது ஒரு தனித்துவமான வென்ச்சர் பில்டர் மாடல். நிறுவனர் குழுக்களுடன் இணைந்து நிறுவனங்களை உருவாக்கி, தொடக்கத்திலேயே மூலதனத்தை முதலீடு செய்து, நிறுவனர்களுக்கு முதல் நாளிலேயே 50% பங்குகளை வழங்கும் முறையை அவர்கள் கொண்டு வந்தனர். இது ஒரு பாரம்பரிய முதலீட்டு முறை அல்ல.

“இது ஒரு குடும்பத் தொழில் அல்ல. ஒவ்வொரு நிறுவனத்திற்கும் அதன் சொந்த நிர்வாகம், சொந்த அணி மற்றும் சொந்த முதலீட்டாளர்கள் உள்ளனர். மிகவும் கடினமான தருணங்களில் மட்டுமே நாங்கள் தலையிடுகிறோம்,” என்கிறார் அவர்.
இந்த மாதிரியின் விளைவுகள்தான் இன்று நாம் காணும் பிக் பாஸ்கெட், ப்ளூஸ்டோன், போர்ட்டியா, ஹோம்லேன் போன்ற பல்வேறு வெற்றிகரமான நிறுவனங்கள்.
நிரந்தர கற்றலும், நீண்ட கால இலக்கும்:
“எனக்கு வயதாகி விட்டது. ஆனாலும், ஏஐ கற்றுக்கொள்ள முயற்சிக்கிறேன்...” என்று தனது தற்போதைய பயணத்தைப் பற்றிப் பேசுகிறார் கணேஷ்.
எல்எல்எம்-கள் போன்ற புதிய தொழில்நுட்பங்கள் எவ்வாறு முழு ஆய்வுகளை மாற்றியமைக்கின்றன என்பதை அவர் ஆர்வத்துடன் கற்றுக் கொள்கிறார்.
“இது ஒரு வாய்ப்பு மட்டுமல்ல; இது நம்மை தக்கவைத்துக் கொள்வதற்கான வழி. உங்கள் வேலையில் நீங்கள் ஜெனரேட்டிவ் ஏ.ஐ.-யைப் பயன்படுத்தவில்லை என்றால், நீங்கள் போட்டித்தன்மை இல்லாதவராக மாறிவிடுவீர்கள்,” என்று எச்சரிக்கிறார்.

கணேஷ் ஒருபோதும் ஓய்வு பெறக் கூடிய நபர் அல்ல.
“ஒவ்வொரு 10 வருடங்களுக்கும் நான் என்னைப் புதுப்பித்துக் கொள்கிறேன். 50-ல் ஒரு வென்ச்சர் பில்டராக ஆனேன். 60-ல் ஒரு ஆசிரியராக மாறினேன். 70 என்ன கொண்டு வரும் என்று யாருக்குத் தெரியும்?” என்ற கேள்வியுடன் தனது பயணத்தைத் தொடர்கிறார்.
கணேஷ் அடைந்த வெற்றிகளை விட, அவரது நெறிமுறைகள்தான் மிகவும் உத்வேம் அளிக்கின்றன. துணிச்சலுடன் உருவாக்குங்கள், தாராளமாகப் பகிர்ந்து கொள்ளுங்கள், பணிவுடன் இருங்கள், மேலும் எப்போதும் நீண்ட கால இலக்கைக் குறித்து விளையாடுங்கள்.
குறுகிய கால வெற்றிகளைத் தேடும் இன்றைய உலகில் கே.கணேஷ் ஒரு அரிய நபர். அவர் மற்ற யூனிகார்னைத் துரத்தவில்லை, மாறாக, நீண்ட கால, அமைப்பு ரீதியான தாக்கத்தை ஏற்படுத்தும் நிறுவனங்களை உருவாக்குகிறார். ஆரம்பத்தில் ஒரு நோக்கத்துடன் தொடங்கி, பாதையில் உறுதியாக நின்று, ஆணவமின்றித் தன்னைப் புதுப்பித்துக் கொள்பவரே உண்மையான தலைவர்.
Edited by Induja Raghunathan

