2026 Google இந்திய ஆக்சிலரேட்டர் திட்டத்தில் தேர்வான 20 Ai ஸ்டார்ட்அப்’கள்!
இந்தத் திட்டம் பெங்களூருவில் நடைபெற்ற நேரடி Bootcamp நிகழ்வுடன் தொடங்கியுள்ளதாகவும், அடுத்த மூன்று மாதங்களில் தயாரிப்பு மேம்பாடு, தொழில்நுட்ப கட்டமைப்பு மதிப்பாய்வு மற்றும் நிபுணர்களின் வழிகாட்டுதல் ஆகியவற்றின் மூலம் ஸ்டார்ட்அப்கள் உலகளாவிய சந்தைக்குத் தயார்படுத்தப்படுவார்கள்.
இந்தியாவின் செயற்கை நுண்ணறிவு (AI) ஸ்டார்ட்அப் சூழல், பொதுப் பயன்பாட்டிற்கான பெரிய மொழி மாதிரிகளை (Large Language Models) தாண்டி, குறிப்பிட்ட தொழில்துறைகளின் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கும் சிறப்பு AI அமைப்புகள் நோக்கி நகர்ந்து வருவதை வெளிப்படுத்தும் வகையில், 2026 ஆம் ஆண்டுக்கான Google for Startups Accelerator India திட்டத்திற்கு 20 இந்திய AI-முதன்மை ஸ்டார்ட்அப்களை கூகுள் தேர்வு செய்துள்ளது.
ஆரம்ப கட்டத்தில் உள்ள நிறுவனங்களுக்கு ஆதரவு வழங்கும் தனது முயற்சியின் ஒரு பகுதியாக, சுகாதாரம், காலநிலை தொழில்நுட்பம், நிதிச் சேவைகள், உற்பத்தித் துறை மற்றும் டெவலப்பர் கருவிகள் போன்ற பல்வேறு துறைகளில் தயாரிப்புகளை உருவாக்கும் நிறுவனங்களுக்கு கூகுள் இந்தத் திட்டத்தின் மூலம் தொழில்நுட்ப வழிகாட்டுதல் வழங்குகிறது.
இந்தியாவில் கூகுளின் ஆக்சிலரேட்டர் திட்டங்கள் தொடங்கப்பட்டு 10 ஆண்டுகள் நிறைவடையும் நிலையில் நடைபெறும் இந்த மூன்று மாத, பங்குகளைப் பெறாத (Equity-free) திட்டத்திற்காக சுமார் 2,500 விண்ணப்பங்களில் இருந்து 20 நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. தேர்வான நிறுவனங்களுக்கு கூகுளின் AI தொழில்நுட்ப தளம், தொழில்நுட்ப ஆலோசனைகள், நிபுணர்களின் வழிகாட்டுதல் உள்ளிட்ட வசதிகள் வழங்கப்பட்டு, ஆரம்ப கட்ட தயாரிப்புகளை வணிக ரீதியாக வெற்றிகரமாக அறிமுகப்படுத்த உதவப்படும்.
AI வளர்ச்சியின் புதிய கட்டத்தை இந்தக் குழு பிரதிபலிப்பதாகவும், அடிப்படை AI மாதிரிகளை உருவாக்குவதைக் கடந்தும், பல நிறுவனங்கள் தன்னிச்சையாக செயல்படும் Agentic AI அமைப்புகளை உருவாக்கி வருவதாகவும் கூகுள் தெரிவித்துள்ளது. மேலும், உரை, படம், ஒலி உள்ளிட்ட பல்வேறு தரவுகளை ஒருங்கிணைத்து செயல்படும் Multimodal AI தொழில்நுட்பத்திலும் பல ஸ்டார்ட்அப்கள் கவனம் செலுத்தி வருகின்றன.
கூகுள் இந்தியாவின் துணைத் தலைவர் மற்றும் நாட்டின் மேலாளரான ப்ரீதி லோபானா கூறுகையில்,
"இந்தியாவின் ஸ்டார்ட்அப் சூழல், தன்னிச்சையாக செயல்படும் AI பணிச்சூழல்கள் (Agentic Workflows) மற்றும் மிக முக்கியமான நடைமுறை சவால்களைத் தீர்க்க வடிவமைக்கப்பட்ட Physical AI அமைப்புகள் என்ற புதிய எல்லையை நோக்கி முன்னேறி வருகிறது. கூகுள் ஆக்சிலரேட்டர் திட்டங்களின் ஒரு தசாப்த பயணத்தை நாம் கொண்டாடும் இந்த நேரத்தில், 2026 இந்தியக் குழு இந்த தொழில்நுட்ப மாற்றத்தின் முன்னோடிகளை பிரதிநிதித்துவப்படுத்துகிறது," என்றார்.
மேலும் அவர், "கூகுளின் தொழில்நுட்ப ஆதரவு, இந்திய ஸ்டார்ட்அப்கள் உலகளவில் வளர்ச்சியடையவும், இந்தியாவின் IndiaAI Mission மற்றும் டிஜிட்டல் பொருளாதார இலக்குகளுக்கு ஏற்ப அவர்களின் திறன்களை வலுப்படுத்தவும் உதவும்," என்று தெரிவித்தார்.
தேர்வான நிறுவனங்களில் நீதித்துறை தொழில்நுட்பத்தில் கவனம் செலுத்தும் Adalat AI, சுகாதாரத் துறையில் செயல்படும் Aikenist மற்றும் FlexifyMe, காலநிலை தொழில்நுட்ப நிறுவனங்களான Aurassure மற்றும் Fitsol, நிதித் தொழில்நுட்ப நிறுவனங்களான Dodo Payments மற்றும் OnFinanceAI, உற்பத்தித் துறை தானியக்க நிறுவனமான Jidoka, தொழில்துறை அணியக்கூடிய சாதனங்களை உருவாக்கும் Proxgy, டெவலப்பர் உள்கட்டமைப்பு நிறுவனங்களான CraftifAI, H2Loop AI, Pipeshift, PotpieAI, TartanHQ, CreateOS by NodeOps உள்ளிட்ட பல நிறுவனங்கள் இடம்பெற்றுள்ளன. இதைத் தவிர, இணையப் பாதுகாப்பு, இசை உருவாக்கம் மற்றும் நிறுவனங்களுக்கான குரல் அடிப்படையிலான AI தொழில்நுட்பங்களில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களும் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
இந்தத் திட்டம் பெங்களூருவில் நடைபெற்ற நேரடி பூட்கேம்ப் (Bootcamp) நிகழ்வுடன் தொடங்கியுள்ளதாகவும், அடுத்த மூன்று மாதங்களில் தயாரிப்பு மேம்பாடு, தொழில்நுட்ப கட்டமைப்பு மதிப்பாய்வு மற்றும் நிபுணர்களின் வழிகாட்டுதல் ஆகியவற்றின் மூலம் ஸ்டார்ட்அப்கள் உலகளாவிய சந்தைக்குத் தயார்படுத்தப்படுவார்கள் என்றும் கூகுள் தெரிவித்துள்ளது.
உலகம் முழுவதும் AI ஸ்டார்ட்அப்’களுக்கு ஆதரவு அளிக்கும் போட்டி தீவிரமடைந்து வரும் நிலையில், Microsoft, Amazon, OpenAI உள்ளிட்ட முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களும் AI உருவாக்குநர்களுக்கான திட்டங்கள் மற்றும் முதலீடுகளை விரிவுபடுத்தி வருகின்றன.
அதேபோல், கிளவுட் சேவை வழங்குநர்களும் கணினி உள்கட்டமைப்பு, AI மாதிரிகள் மற்றும் தொழில்நுட்ப நிபுணத்துவத்தை வழங்குவதன் மூலம் போட்டியிட்டு வருகின்றனர். இந்தப் பின்னணியில், கூகுளும் தனது ஆக்சிலரேட்டர் திட்டங்கள் மற்றும் கிளவுட் ஆதரவு மூலம் AI-மையப்படுத்தப்பட்ட ஸ்டார்ட்அப் முயற்சிகளை தொடர்ந்து விரிவுபடுத்தி வருகிறது.
