சிறு, நடுத்தர வணிகங்கள் ஆன்லைனில் செயல்பட உதவும் ’கூகுள் மை பிசினஸ்’
சிறு-குறு வணிகங்கள் மொபைல் சார்ந்த எளிமையான முறையில் ஆன்லைனில் வர உதவிட, ’கூகுள் இந்தியா’ அறிமுகப்படுத்தியுள்ள இச்செயலி நிறுவனங்களுக்கான எளிமையான இலவச டூல் ஆக விளங்கும் என்று கூகுள் இந்தியா ஷாலினி கிரீஷ் தெரிவிக்கிறார்.
சிறு மற்றும் நடுத்தர வணிகங்கள் (SMBs) தொழில்நுட்பத்துடன் ஈடுகொடுத்துச் செல்வதில் எப்போதும் கடும் சவால்களை சந்தித்து வருகிறது. தொழில்நுட்ப அறிவு தேவைப்படும் என்கிற பயம் மட்டுமல்லாது டிஜிட்டல்மயமாவதற்கு அதிகம் செலவிட நேரிடும் என்கிற பயமும் அவர்களிடையே நிலவி வருகிறது.
வணிகம் தொடர்பான தயாரிப்புகள் அல்லது தகவல்களைத் தேடும் நுகர்வோர் எப்போதும் முன்னணி தேடல்பொறியான கூகுள் தளத்தையே பயன்படுத்துவர். எனவே இந்தியாவில் உள்ள சிறு மற்றும் நடுத்தர வணிகங்களுடன் தொடர்பில் இருந்து அவர்கள் ஆன்லைனில் மாற கூகுள் உதவுவதில் ஆச்சரியம் ஏதுமில்லை.
கூகுள் தற்போது அறிமுகப்படுத்தியுள்ள கூகுள் மை பிசினஸ் (GMB) சிறு மற்றும் நடுத்தர வணிகங்கள் தங்களது விவரங்களை முறையாக நிர்வகித்து வாடிக்கையாளர் தொடர்பை மேம்படுத்திக்கொள்ள உதவுகிறது. இந்தச் செயலி இந்த நிறுவனங்களுக்கான எளிமையான இலவச டூல் ஆகும்.
கூகுளில் பட்டியலிடப்பட்டுள்ளவற்றைக் கொண்டு இந்நிறுவனங்கள் தங்களது டிஜிட்டல் பயணத்தைத் துவங்கி கூகுள் தேடல் மற்றும் கூகுள் மேப்ஸில் தங்களது வணிக நடவடிக்கைகளை நிகழ்நேர அடிப்படையில் நிர்வகிக்க இந்தச் செயலி உதவுகிறது. இந்தப் புதிய செயலி வணிகங்கள் தங்களது தகவல்களை புதுப்பித்துக்கொள்ளவும், வாடிக்கையாளர்களுடன் உரையாடவும், புதிய வாடிக்கையாளர்களைப் பெறவும் உதவுகிறது.
இதுவரை 23 மில்லியனுக்கும் அதிகமான இந்திய சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் ஆன்லைனில் செயல்பட கூகுள் மேப்ஸ் மற்றும் ஜிஎம்பியைப் பயன்படுத்திக்கொண்டுள்ளது.
வணிகங்கள் ஆன்லைனில் வளர்ச்சியடைய உதவவேண்டும் என்பதே இந்நிறுவனத்தின் நோக்கம். அதை மேலும் வலுப்படுத்தும் முயற்சியே இந்தப் புதிய ஜிஎம்பி செயலி என்கிறார் கூகுள் இண்டியா, மார்கெட்டிங் சொல்யூஷன்ஸ் இயக்குனர் ஷாலினி கிரீஷ். அவர் மேலும் கூறுகையில், ”வணிகங்கள் கூகுளில் நிகழ்நேர அடிப்படையில் தங்களது செயல்பாடுகளை வழங்கி, தங்கள் விவரங்களை ஈர்க்கத்தக்க வகையில் உருவாக்கி, வாடிக்கையாளர்களுடன் தொடர்பில் இருக்க உதவும் வகையில் இந்தப் புதிய செயலி அமைந்துள்ளது,” என்றார்.
எஸ்எம்பி ஸ்டோரி உடனான நேர்காணலில் ஷாலினி கிரீஷ் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் ஆன்லைனில் செயல்படவேண்டிய அவசியம் குறித்தும் அதற்கான எளிய தொழில்நுட்பத் தீர்வுகளை கூகுள் இந்தியா வழங்குவது குறித்தும் பகிர்ந்துகொண்டார். ஷாலினி 13 ஆண்டுகளுக்கும் மேலாக கூகுள் நிறுவனத்துடன் இணைந்துள்ளார். இவர் இதற்கு முன்பு சாவ் பாவ்லோ பகுதியில் இருந்தார். அங்கு லத்தீன் அமெரிக்காவின் கூகுள் மார்கெட்டிங் சொல்யூஷன்ஸ் குழுவிற்கு தலைமையேற்றார். 2013-ம் ஆண்டு ஷாலினி இந்தியா திரும்பினார். வட அமெரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து உட்பட உலகளவிலான வாடிக்கையாளர் அனுபவக் குழுவிற்கு (இந்திய செயல்பாடுகள்) இயக்குனராக பொறுப்பேற்றார்.
உரையாடலில் இருந்து சில பகுதிகள்:
எஸ்எம்பி ஸ்டோரி: இந்தியாவில் கடந்த இரண்டாண்டுகளாக சிறு மற்றும் நடுத்தர வணிகங்களுடன் பணியாற்றிய நிலையில் உங்களுக்கு இந்தப் பிரிவு குறித்து எத்தகைய நுண்ணறிவு கிடைத்தது?
ஷாலினி கிரீஷ்: இந்தியாவில் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களை ஆன்லைனில் செயல்படவைக்கும் முயற்சிகளை இரட்டிப்பாக்கி வருகிறோம். அவர்களுக்கு எது தடையாக இருக்கிறது என்பதை நாங்கள் முதலில் புரிந்துகொள்ள வேண்டியிருந்தது. அவர்கள் ஏன் ஆன்லைனில் செயல்படுவதில்லை?
இந்தியாவில் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் அதிகம் உள்ளது. இந்த எண்ணிக்கை 58 மில்லியனாக இருப்பதாக சமீபத்திய அறிக்கை தெரிவிக்கிறது. நாங்கள் இரண்டாண்டுகளுக்கு முன்பு கேபிஎம்ஜி உடன் ஆய்வு மேற்கொண்டோம். கிட்டத்தட்ட 70 சதவீத எஸ்எம்பி-க்கள் ஆன்லைனில் செயல்படுவதில்லை என்பதை இந்த ஆய்வு முடிவின் மூலம் தெரிந்துகொண்டோம். இவர்களுக்கு இ-மெயில் முகவரி கூட இல்லை. இணைய சுற்றுச்சூழல் சிறப்பாக வளர்ச்சியடைந்து நுகர்வோர் ஆன்லைனில் அதிகம் இணையும் நம்மைப் போன்ற நாட்டில் இந்த எண்ணிக்கை மிகவும் அதிகமாகும்.
இரண்டு முக்கியத் தடைகள் இருப்பதை உணர்ந்தோம். முதலில் இதற்கான செலவு அதிகம் என அவர்கள் கருதுகின்றனர். இதற்காக பணத்தை செலவிட அவர்கள் விரும்புவதில்லை. அடுத்ததாக ஆன்லைனில் செயல்பட தொழில்நுட்ப நிபுணத்துவம் அவசியம் என கருதுகின்றனர்.
எஸ்எம்பி ஸ்டோரி: நீங்கள் தெரிந்துகொண்டதை எவ்வாறு நடைமுறைப்படுத்தினீர்கள்?
ஷாலினி கிரீஷ்: சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களிடையே காணப்படும் மற்றொரு மிகப்பெரிய தடை நேரம் போதாமை. இதில் பெரும்பாலான நிறுவனங்கள் ஒற்றை நிறுவனரின் தலைமையில் இயங்கி வருகிறது. நிறுவனரே அனைத்து பணிகளிலும் ஈடுபடவேண்டிய நிலை இருக்கும். இவர்களில் பெரும்பாலானோர் பணி முடிந்து கிடைக்கும் நேரங்களில் எங்களது கல்வி செயலி ப்ரைமரை பயன்படுத்துவதைத் தெரிந்து கொண்டோம்.
இந்தூரைச் சேர்ந்த Tsar Watches நிறுவனம் இரண்டாண்டுகளுக்கு முன்பு ஒற்றை நிறுவனரால் துவங்கப்பட்டது. இந்நிறுவனம் இந்தியாவில் மர வாட்ச்களை உற்பத்தி செய்து சில்லறை முறையில் விற்பனை செய்து வருகிறது. அவரது வணிக வளர்ச்சிக்கு உதவக்கூடிய தொழில்நுட்பம் குறித்து தெரிந்துகொள்ள எவ்வாறு நேரம் ஒதுக்குகிறார் என்று கேட்டோம். மாலை நேரங்களில் ப்ரைமரில் சில பாடங்களைப் படிப்பதாகவும் பின்னர் அடுத்த நாளைக்கான உத்தியை தயார்படுத்துவதாகவும் தெரிவித்தார்.
முதலில் மொபைலில் வடிவமைக்கப்படுவதையும் எளிய முறையில் இருப்பதையுமே இந்நிறுவனங்கள் விரும்புகின்றன.
மற்ற சந்தைகளைச் சென்றடையவேண்டும் என்கிற ஆர்வம் அனைவருக்குமே இருந்தது. குறிப்பாக அருகாமையில் இருக்கும் கடைகளைச் சென்றடைய விரும்புகின்றனர்.
எஸ்எம்பி ஸ்டோரி: சில எடுத்துக்காட்டுகளைச் சொல்லமுடியுமா?
ஷாலினி கிரீஷ்: Tsar Watches போலவே Ram Asrey என்கிற இருநூறாண்டு பழமையான ஸ்வீட் கடை ஒன்று லக்னோவில் உள்ளது. இவர்கள் ஏற்கெனவே இருக்கும் வாடிக்கையாளர்களுடனும் புதிய வாடிக்கையாளர்களுடனும் தொடர்பில் இருக்க ஜிஎம்பி செயலியைப் பயன்படுத்தினர். பில் கிளிண்டன், அமிதாப்பச்சன் போன்றோர் இவர்களது நட்சத்திர க்ளையண்டுகளாகும். இரண்டாண்டுகளுக்கு முன்பு இவர்கள் மின்வணிகத்தில் ஈடுபடவில்லை. இன்று டிஜிட்டல் வாயிலான வளர்ச்சியை எதிர்நோக்கியுள்ளனர்.
Tsar Watches, Ram Asrey ஆகிய இரண்டு வணிகங்களும் தங்களது வளர்ச்சிக்கு இரு வேறு உத்திகளைப் பயன்படுத்துகிறது. Tsar Watches ஆன்லைனில் செயல்படத் துவங்கியது. தற்போது சில்லறை ஸ்டோர்களுடன் இணைந்து ஆஃப்லைனில் வளர்ச்சியடைய எதிர்நோக்கியுள்ளது. பாரம்பரிய ஸ்டோரான Ram Asrey டிஜிட்டலில் வளர்ச்சியடைய உள்ளது.
போபாலில் உள்ள ராஜூஸ் டீ ஸ்டால் மற்றொரு வணிகமாகும். இது ஜிஎம்பி-யைப் பயன்படுத்தி, அதில் 17,000 ரெவ்யூக்களைக் கொண்டுள்ளது.
எஸ்எம்பி ஸ்டோரி: சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் ஆன்லைனில் செயல்பட உதவும் வகையில் எத்தகைய முயற்சிகளை எடுத்துள்ளீர்கள்?
ஷாலினி கிரீஷ்: தொழில்நுட்ப சுற்றுச்சூழல் நமது பொருளாதாரத்திற்கும் இந்தியாவின் ஜிடிபி-க்கும் முக்கியம் என்கிற நிலையில் எங்களால் இயன்ற முயற்சிகளை மேற்கொள்ள விரும்புகிறோம். எனவே சமீபத்தில் மறு அறிமுகம் செய்யப்பட்ட கூகுள் மை பிசினஸ் போன்ற ஒரு சில முயற்சிகளை இரண்டாண்டுகளுக்கு முன்பு மேற்கொண்டோம். விலை அதிகம் என்கிற சிக்கலை இது தீர்த்துவைக்கிறது. டிஜிட்டல் அன்லாக்ட் (Digital Unlocked) நாங்கள் அறிமுகப்படுத்திய மற்றொரு முயற்சியாகும். இது சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு ஆஃப்லைன் மற்றும் ஆன்லைன் பயிற்சி மாட்யூல் வாயிலாக டிஜிட்டல் திறன் வழங்க உதவும் முயற்சியாகும். கடந்த இரண்டாண்டுகளில் 3,60,000-க்கும் அதிகமான சிறு வணிகங்களுக்கு பயிற்சியளிக்கப்பட்டுள்ளது.
ப்ரைமர் (Primer) டிஜிட்டல் மார்க்கெட்டிங் திறன் பயிற்சியளிக்க வடிவமைக்கப்பட்ட இலவச மொபைல் செயலி ஆகும். இந்த செயலி 6.2 மில்லியனுக்கும் அதிகமான முறை பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளது. மேலும் ஜிஎம்பி உடனான வலைதளங்கள் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் இலவசமாக மொபைல் கொண்டு இயங்கும் வலைதளத்தை உடனடியாக உருவாக்கிக்கொள்ள உதவுகிறது. 10 பிராந்திய மொழிகளைக் கொண்டுள்ளது. 8,00,000-க்கும் அதிகமான இந்திய வணிகங்கள் ஏற்கெனவே இதைப் பயன்படுத்தி வருகின்றன.
எஸ்எம்பி ஸ்டோரி: ஜிஎம்பி-யை மறு அறிமுகம் செய்வதற்கான அவசியம் ஏன் ஏற்பட்டது?
ஷாலினி கிரீஷ்: ஒரு வணிகம் ஆன்லைனில் செயல்படத் துவங்கிய உடனேயே அது மும்முரமாக செயல்படுகிறது என்பது பொருள் இல்லை. தொடர்ந்து சிறப்பாக ஆன்லைனில் செயல்பட உதவும் வகையில் எங்களது செயலியை மீண்டும் வடிவமைத்துள்ளோம். இதன் மூலம் வணிகங்கள் நிகழ்நேர அடிப்படையில் அவர்களது வாடிக்கையாளர்களுடன் செயலியில் தொடர்ந்து தொடர்பில் இருக்கலாம். அத்துடன் ஸ்மார்ட் கேம்பெயின் என்கிற சேவையையும் அறிமுகப்படுத்தியுள்ளோம். இதில் வணிகங்கள் எளிமையான மூன்று நடவடிக்கைகளைப் பின்பற்றி தங்களது விளம்பரங்களை வெளியிடலாம்.
ஆங்கில கட்டுரையாளர் : தீப்தி நாயர் | தமிழில் : ஸ்ரீவித்யா