வாட்ஸ் அப் பயனர் பெயர் (user name) அம்சத்திற்கு மத்திய அரசு தடை - Meta-வுக்கு நோட்டீஸ்!
புதன்கிழமை வெளியிடப்பட்ட நோட்டீஸில், இந்த புதிய அம்சம் ஆன்லைன் மோசடிகள், பிஷிங் தாக்குதல்கள், “டிஜிட்டல் அரெஸ்ட்” மோசடிகள் மற்றும் ஆள்மாறாட்ட குற்றங்களை அதிகரிக்கும் அபாயம் இருப்பதாக அரசு தெரிவித்துள்ளது.
வாட்ஸ்அப்பில் அறிமுகப்படுத்தப்பட உள்ள “Username” -பயனர்பெயர், எனும் அம்சம் தொடர்பாக மத்திய அரசு கடும் கவலை வெளியிட்டுள்ள நிலையில், மெட்டா நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பி, ஆலோசனைகள் நிறைவடையும் வரை அந்த அம்சத்தை இந்தியாவில் அறிமுகப்படுத்த வேண்டாம் என்று உத்தரவிட்டுள்ளது.
புதன்கிழமை வெளியிடப்பட்ட நோட்டீஸில், இந்த புதிய அம்சம் ஆன்லைன் மோசடிகள், பிஷிங் தாக்குதல்கள், “டிஜிட்டல் அரெஸ்ட்” மோசடிகள் மற்றும் ஆள்மாறாட்ட குற்றங்களை அதிகரிக்கும் அபாயம் இருப்பதாக அரசு தெரிவித்துள்ளது. மேலும், இந்த அம்சம் குறித்து தொடர்புடைய ஆவணங்களுடன் மூன்று நாட்களுக்குள் விரிவான விளக்கத்தை அளிக்குமாறும் மெட்டாவுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. நோட்டீஸில்,
“இந்த அம்சம் ஆன்லைன் மோசடிகள், பிஷிங், டிஜிட்டல் அரெஸ்ட் மோசடிகள் மற்றும் ஆள்மாறாட்டத் தாக்குதல்களின் எண்ணிக்கையை குறிப்பிடத்தக்க அளவில் அதிகரிக்கக்கூடும். தீய நோக்கமுள்ள நபர்கள் பாதிக்கப்பட்டவர்களை தொடர்புகொண்டு ஏமாற்றுவதற்கு இது வழிவகுக்கலாம்,” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், “உண்மையான நபர்கள், பொது அதிகாரிகள், வங்கிகள் மற்றும் அரசு அமைப்புகளின் பெயர்களை ஒத்த பயனர் பெயர்களை உருவாக்குவதன் மூலம் ஆள்மாறாட்டம் மற்றும் அடையாள மோசடிகளுக்கு இந்த அம்சம் உதவக்கூடும்,” என்றும் அரசு எச்சரித்துள்ளது.
இந்த அம்சம் இணையக் குற்றங்களை அதிகரிக்கக்கூடும் என்பதால், தகவல் தொழில்நுட்பச் சட்டம் மற்றும் அதனுடன் தொடர்புடைய விதிகளின் கீழ் ஏன் நடவடிக்கை எடுக்கக் கூடாது என்பதையும் விளக்குமாறு அரசு கேட்டுள்ளது.
மேலும், முக்கிய சமூக ஊடக இடைத்தரகராக (Significant Social Media Intermediary) செயல்படும் வாட்ஸ்அப், தகவல் தொழில்நுட்பச் சட்டம் மற்றும் 2021-ஆம் ஆண்டு தகவல் தொழில்நுட்ப விதிகளின் கீழ் தேவையான பொறுப்புகளை பின்பற்ற வேண்டிய கடமையில் இருப்பதாகவும் நினைவூட்டியுள்ளது.
நோட்டீஸில், தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் பிரிவு 79, இடைத்தரகர்களின் பொறுப்புகளை வகுக்கும் விதிகள் 3 மற்றும் 4, அடையாளத் திருட்டு மற்றும் கணினி வளங்களைப் பயன்படுத்தி ஆள்மாறாட்டம் செய்து ஏமாற்றுதல் தொடர்பான பிரிவுகள் 66C மற்றும் 66D ஆகியவை மேற்கோள் காட்டப்பட்டுள்ளன. மேலும்,
“இந்த புதிய அம்சம் குறித்த விரிவான விளக்கத்தை, தொடர்புடைய ஆவணங்களுடன், நோட்டீஸ் பெற்ற மூன்று நாட்களுக்குள் சமர்ப்பிக்க வேண்டும்,” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதோடு, “இந்த விவகாரத்தில் அரசின் திருப்திக்குரிய வகையில் ஆலோசனைகள் நிறைவடையும் வரை புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தக் கூடாது,” என்றும் மெட்டாவுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இதற்கு பதிலளித்த வாட்ஸ்அப், இந்த அம்சம் இன்னும் செயல்பாட்டிற்கு வரவில்லை என்றும், இந்த ஆண்டின் பிற்பகுதியில் படிப்படியாக அறிமுகப்படுத்தப்படும், என்றும் தெரிவித்துள்ளது.
வாட்ஸ்அப் செய்தித் தொடர்பாளர் ஒருவர்,
“ஆள்மாறாட்டத்தைத் தடுக்க, முக்கிய பிரபலங்கள், அரசு அமைப்புகள், பொதுமக்கள் அறிந்த பிரபலங்கள் மற்றும் சரிபார்க்கப்பட்ட மெட்டா கணக்குகளுக்கான பயனர் பெயர்கள் அவர்களது உரிமையாளர்களால் மட்டுமே பயன்படுத்தப்படுமாறு பாதுகாக்கப்பட்டுள்ளன. அவற்றை ஒத்த பெயர்களும் தடுக்கப்பட்டுள்ளன,” என்றார்.
மேலும், “வாட்ஸ்அப்பைப் பயன்படுத்த தொலைபேசி எண் கட்டாயமாகவே இருக்கும். பயனர்பெயர்களின் மூலம் நடைபெறும் மோசடிகளைத் தடுக்க பல அடுக்கு பாதுகாப்பு அமைப்புகளை உருவாக்கியுள்ளோம்,” என்றும் அவர் கூறினார்.
அதோடு, “மற்றவர்கள் உங்களுக்கு செய்தி அனுப்ப உங்கள் சரியான பயனர்பெயரைத் தெரிந்திருக்க வேண்டும். புதிய நபர்களை தொடர்புகொள்ளும் எண்ணிக்கைக்கு வரம்பு விதிக்கப்படும். பயனர்பெயர்களை தொடர்ந்து யூகித்து முயற்சிப்பதைத் தடுக்கும் அமைப்புகளும், ஆள்மாறாட்டம் மற்றும் தவறான பயன்பாட்டை கண்டறிந்து நீக்கும் தொழில்நுட்பங்களும் செயல்படும்,” என்று விளக்கினார்.
முதல் முறையாக பயனர்பெயர் மூலம் செய்தி அனுப்பும் நபர் புதிய கணக்கா, தொடர்புப் பட்டியலில் உள்ளவரா, பொதுக் குழுக்களில் உறுப்பினரா அல்லது வேறு நாட்டைச் சேர்ந்தவரா என்பதை பயனர்களுக்கு காட்டப்படும் என்றும் வாட்ஸ்அப் தெரிவித்துள்ளது.
“இந்த அம்சம் அறிமுகமான பிறகு, யாராவது முதன்முறையாக உங்கள் பயனர்பெயர் மூலம் தொடர்புகொண்டால், அவர் புதிய கணக்கா, உங்கள் தொடர்புப் பட்டியலில் உள்ளவரா, உங்களுடன் பொதுவான குழுக்களில் உள்ளவரா அல்லது வேறு நாட்டைச் சேர்ந்தவரா என்பதை காண்பிப்போம். அதன் அடிப்படையில் பதிலளிக்க வேண்டுமா என்பதை நீங்கள் முடிவு செய்யலாம்,” என்று நிறுவனம் கூறியுள்ளது.
இந்தியாவில் 50 கோடிக்கும் அதிகமான பயனர்களைக் கொண்ட வாட்ஸ்அப், தனது மிகப்பெரிய சந்தையில் இந்த அம்சத்தை அறிமுகப்படுத்தத் திட்டமிட்டிருந்தது. பயனர்கள் தங்களது தொலைபேசி எண்ணை பகிராமல் தொடர்புகொள்ளும் வசதியை வழங்கும் நோக்கில் இந்த அம்சம் உருவாக்கப்பட்டதாக நிறுவனம் கூறி வருகிறது.
இந்நிலையில், இணையப் பாதுகாப்பு நிபுணர்கள் மற்றும் தொழில்முனைவோர்கள் பலரும் இந்த அம்சம் குறித்து கவலை தெரிவித்துள்ளனர். ஒத்த பயனர்பெயர்களை பயன்படுத்தி மோசடிகள் நடைபெற வாய்ப்பு இருப்பதாக அவர்கள் எச்சரித்துள்ளனர்.
விஜய் சேகர் சர்மா தனது சமூக வலைதளப் பதிவில்,
“ஒத்த ஒலியுடைய பயனர்பெயர்கள் ஆள்மாறாட்டம் மற்றும் மோசடிகளுக்கான புதிய வாயிலாக மாறக்கூடும்,” என்று குறிப்பிட்டார்.
அதேபோல், ஜஸ்வீர் சிங் பயனர் தனியுரிமையையும் பொறுப்புக்கூறலையும் வாட்ஸ்அப் எவ்வாறு சமநிலைப்படுத்தப் போகிறது என்ற கேள்வியை எழுப்பியுள்ளார்.
வாட்ஸ்அப்பின் பயனர்பெயர் அம்சம் தனியுரிமையை மேம்படுத்தும் முயற்சியாகக் கூறப்பட்டாலும், அது இணைய மோசடிகளுக்கான புதிய வழிகளைத் திறக்குமா என்ற கேள்வி தற்போது இந்திய அரசும் தொழில்நுட்ப வட்டாரங்களும் தீவிரமாக ஆராயும் முக்கிய விவகாரமாக மாறியுள்ளது.

