மேற்கு ஆசிய நெருக்கடி: இந்திய MSME துறையைப் பாதுகாக்க மத்திய அரசு தீவிர ஆய்வு!
கூட்டத்தில், உலகளாவிய விநியோகச் சங்கிலி பாதிப்புகள் காரணமாக மூலப்பொருட்களின் கிடைக்கும் நிலை மற்றும் விலை உயர்வு, ஏற்றுமதி-இறக்குமதி நடவடிக்கைகள், எரிவாயு தொடர்பான சிக்கல்கள், போக்குவரத்து மற்றும் தளவாட சேவைகள், மேலும் MSME நிறுவனங்களின் செயல்பாட்டு மூலதனத் தேவைகள் உள்ளிட்ட அம்சங்கள் பரிசீலிப்பு.
மேற்கு ஆசியாவில் நிலவி வரும் நெருக்கடியால் இந்தியாவின் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் (MSME) பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்வதற்காக மத்திய அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை ஆய்வு செய்து வருகிறது.
இதற்காக, மத்திய குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறை அமைச்சர் ஜிதன் ராம் மாஞ்சி தலைமையில் செவ்வாய்க்கிழமை உயர்மட்ட ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. மேற்கு ஆசியாவின் தற்போதைய புவிசார் அரசியல் சூழ்நிலை இந்திய MSME துறையில் ஏற்படுத்தக்கூடிய தாக்கங்கள் குறித்து கூட்டத்தில் விரிவாக மதிப்பீடு செய்யப்பட்டது.
கூட்டத்தில், உலகளாவிய விநியோகச் சங்கிலி பாதிப்புகள் காரணமாக மூலப்பொருட்களின் கிடைக்கும் நிலை மற்றும் விலை உயர்வு, ஏற்றுமதி-இறக்குமதி நடவடிக்கைகள், எரிவாயு தொடர்பான சிக்கல்கள், போக்குவரத்து மற்றும் தளவாட சேவைகள், மேலும் MSME நிறுவனங்களின் செயல்பாட்டு மூலதனத் தேவைகள் உள்ளிட்ட அம்சங்கள் விரிவாக பரிசீலிக்கப்பட்டன.
மேற்கு ஆசியாவில் நிலைமை தொடர்ந்து மாறிக்கொண்டிருப்பதால், அதனை அதிகாரிகள் நெருக்கமாக கண்காணிக்க வேண்டும் என்றும், உலகளாவிய மாற்றங்களால் உருவாகக்கூடிய சவால்களை சமாளிக்க தேவையான உத்திகளை உடனுக்குடன் உருவாக்க வேண்டும் என்றும் அமைச்சர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
கூட்டத்தில் பேசிய அமைச்சர் ஜிதன் ராம் மாஞ்சி,
”இந்திய பொருளாதார வளர்ச்சியில் MSME துறையின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது என்று வலியுறுத்தினார். நாட்டின் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக விளங்கும் இந்தத் துறை, கோடிக்கணக்கான மக்களுக்கு வேலைவாய்ப்பை வழங்குவதோடு, உற்பத்தி மற்றும் ஏற்றுமதி வளர்ச்சியிலும் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கி வருவதாக,” அவர் தெரிவித்தார்.

