‘அதிக சம்பளம் வாங்கும் இந்தியர்’: HCL டெக் சி.இ.ஓ.வின் மிரள வைக்கும் சம்பள உயர்வு - எவ்வளவு தெரியுமா?
நிறுவனத்தின் ஆண்டு அறிக்கையின்படி, சிஇஒ சி.விஜய்குமார், சுமார் ஆண்டுக்கு 18.3 மில்லியன் அமெரிக்க டாலர், அதாவது, ரூ.176.47 கோடி சம்பளமாகப் பெற்றுள்ளார். இது முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 66.98 சதவீதம் அதிகமாகும்.
HCL டெக் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியும் நிர்வாக இயக்குநருமான சி.விஜயகுமார், தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக முன்னணி ஐந்து போட்டி நிறுவனங்களின் தலைமைச் செயல் அதிகாரிகளை பின்னுக்குத் தள்ளி, அதிக சம்பளம் பெறும் ஐ.டி. சேவை நிறுவன சி.இ.ஓ.வாகத் திகழ்கிறார். நிறுவனத்தின் ஆண்டு அறிக்கையின்படி,
அவர் சுமார் 18.3 மில்லியன் அமெரிக்க டாலர் (தற்போதைய நாணய மாற்று விகிதப்படி ரூ.176.47 கோடி) சம்பளமாகப் பெற்றுள்ளார். இது முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 66.98 சதவீதம் அதிகமாகும்.
முன்னணி ஐ.டி. சேவை நிறுவனங்களின் தலைமைச் செயல் அதிகாரிகளில், டி.சி.எஸ். நிறுவனத்தின் சி.இ.ஓ. கே. கீர்த்திவாசன் 2025-26 நிதியாண்டில் ரூ.28 கோடியும், இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் சி.இ.ஓ. சலில் பரேக் ரூ.82.6 கோடியும், விப்ரோ நிறுவனத்தின் ஸ்ரீனிவாஸ் பல்லியா ரூ.49.6 கோடியும், எல்.டி.எம். நிறுவனத்தின் வேணு லம்பு ரூ.27.26 கோடியும் சம்பளமாகப் பெற்றுள்ளனர். டெக் மஹிந்திரா நிறுவனத்தின் சி.இ.ஓ. மோகித் ஜோஷி சுமார் ரூ.67.5 கோடியும் சம்பளமாகப் பெற்றுள்ளனர்.
விஜயகுமாரின் ஆண்டு சம்பளத்தில் 2.48 மில்லியன் அமெரிக்க டாலர் அடிப்படை சம்பளமாகவும், 2 மில்லியன் டாலர் செயல்திறன் அடிப்படையிலான போனஸாகவும் உள்ளது. மேலும், நீண்டகால ஊக்கத்தொகையின் கீழ் 3.94 மில்லியன் டாலர் ரொக்கத் தொகையும், 2025-26 நிதியாண்டில் பயன்படுத்தப்பட்ட ஆர்.எஸ்.யூ.க்களின் சலுகை மதிப்பாக 9.4 மில்லியன் டாலரும் வழங்கப்பட்டுள்ளது. இதுதவிர, சுமார் 0.31 மில்லியன் டாலர் மதிப்பிலான பலன்கள், சலுகைகள் மற்றும் கொடுப்பனவுகளும் இதில் அடங்கும்.
விஜயகுமார் அமெரிக்காவில் வசித்து வருகிறார். அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாண சட்டங்களின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள, ஹெச்.சி.எல். நிறுவனத்தின் முழு உரிமையிலான துணை நிறுவனமான ஹெச்.சி.எல். அமெரிக்கா இன்க். நிறுவனத்திடமிருந்து அவர் தனது ஊதியத்தைப் பெறுகிறார்.
ஹெச்.சி.எல்.டெக் நிறுவன ஊழியர்களின் சராசரி ஊதியத்துடன் ஒப்பிடுகையில், விஜயகுமாரின் ஊதிய விகிதம் சுமார் 291.9 மடங்காக உள்ளது. ஜூன் 30 நிலவரப்படி, ஹெச்.சி.எல்.டெக் நிறுவனத்தின் மொத்த பணியாளர் எண்ணிக்கை சுமார் 2,27,181 ஆக இருந்தது.
“நிறுவனத்தின் பணியாளர்கள் பல்வேறு நாடுகளில் பணியாற்றி வருகின்றனர். எனவே, அனைத்து சர்வதேச ஊழியர்களின் ஊதியமும், 2026 மார்ச் 31 நிலவரப்படி நடைமுறையில் இருந்த அந்தந்த நாட்டின் இந்தியாவுக்கான கொள்முதல் சக்தி சமநிலை (PPP) மாற்று விகிதத்தைப் பயன்படுத்தி இந்திய ரூபாய் மதிப்பாக மாற்றப்பட்ட பின்னரே, ஊழியர்களின் சராசரி ஊதியம் கணக்கிடப்பட்டுள்ளது,” என்று ஹெச்.சி.எல்.டெக் தனது ஆண்டு அறிக்கையில் விளக்கம் அளித்துள்ளது.

