புராணங்களில் புனித நதியாக சொல்லப்பட்ட 'கூவம்' ஆறு, இன்று சாக்கடையாக மாறியது எப்படி?

பாரம்பரிய ஆர்வலர்கள் அடங்கிய குழு கூவத்தை குறித்த பல வியக்கத்தக்க தகவல்களை சேகரித்துள்ளனர்...

புராணங்களில் புனித நதியாக சொல்லப்பட்ட 'கூவம்' ஆறு, இன்று சாக்கடையாக மாறியது எப்படி?

Friday June 16, 2017,

5 min Read

வங்காள விரிகுடாவில் கலக்கும் மிகக்குறுகிய ஆறுகளில் ஒன்றான கூவம் தற்போது ஒரு சாக்கடையாகவே பார்க்கப்படுகிறது. இது மீட்க முடியாத பகுதியாகவும் கருதப்படுகிறது. ஆன்மீக பயண வலைபக்கமான ‘ஆலயம் கண்டேன்’ என்கிற பக்கத்தின் மூலம் பிரபலமான வலைப்பதிவாளரான பத்மப்ரியா பாஸ்கரன். இவர் கூவம் ஆற்றை ஒட்டிய பகுதிகளில் உள்ள வரலாற்று கோயில்களைத் தேடும் பணியில் ஈடுபடத்துவங்கியபோது அதன் கரையில் பல தகவல்கள் புதைந்திருந்ததை அவர் அறியவில்லை.

பத்மப்ரியா, பாரம்பரிய ஆர்வலர்கள் அடங்கிய குழுவில் ஒருவராவார். மூன்று வருடங்களுக்கு முன்னால் இணைந்த இந்தக் குழுவினர்கள் பாலாற்றை ஒட்டிய பகுதிகளில் இருக்கும் வரலாற்றுப் பொக்கிஷங்கள் குறித்த விவரங்களை சேகரிப்பதற்காக ஒன்றிணைந்தனர். இவர்களால் வார இறுதியில் மட்டுமே ஆய்வில் ஈடுபட முடிந்தது. அத்துடன் இந்தக் குழுவினர்கள் முழுமையான நிபுணத்துவம் பெறாத பயிற்சியாளர்களாக இருந்ததால் மிகப்பெரிய ஆறான பாலாற்றை ஆராய்ச்சிக்கு எடுத்துக்கொள்ள முடியவில்லை. இதனால் கலாச்சார ஆய்வு குறித்த ப்ராஜெக்டிற்கு கூவம் பகுதியை தேர்ந்தெடுத்தனர்.

அடையாறு, கூவம், கொசஸ்தலையாறு என சென்னை வழியாகச் செல்லும் அனைத்து ஆறுகளும் மிகப்பெரிய பாலாறு நதி அமைப்பைச் சார்ந்ததே ஆகும். அனைத்து ஆறுகளும் நீர்வரத்திற்கு பெரும்பாலும் பருவமழையைச் சார்ந்தே உள்ளது. அதிகப்படியான மணல் சுரண்டல்களாலும் தொழிற்சாலைகளின் மாசு காரணமாகவும் மிகப்பெரிய ஆறான பாலாறு மோசமான நிலையில் உள்ளது. இதன் காரணமாக அதன் கிளை நதிகளும் பாதிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் ஓடும் கூவம் ஆறின் ஒரு பகுதி
சென்னையில் ஓடும் கூவம் ஆறின் ஒரு பகுதி

கூவத்தின் வரலாறு மற்றும் புவியியல் குறித்த புரிதல்

மெட்ராஸ் நகரம் செயிண்ட் ஜார்ஜ் கோட்டையைச் சுற்றியே வளர்ச்சியடைந்தது. ஏனெனில் நதி கடலைச் சந்திக்கும் புள்ளியில் செயிண்ட் ஜார்ஜ் கோட்டை அமைந்திருந்ததால் கடல்வழி மற்றும் உள்நாட்டு மார்க்கங்களை அதிகபட்சம் பயன்படுத்திக்கொள்ளும் வாய்ப்பு இருந்தது. பிரிட்டிஷ் நிர்வாகியான ஃப்ரான்சிஸ் டே மற்றும் முகவர் ஆண்ட்ரூ கோகன் ஆகியோர் 1600-களில் வணிக மையத்தை நிறுவ திட்டமிட்டனர். அப்போது அவர்களது இந்த முயற்சி கோரமண்டல் கடற்கரையை ஒட்டி ஒரு வலுவான பிரிட்டிஷ் குடியேற்றத்தின் வளர்ச்சியைத் தூண்டும் என்று அவர்கள் சற்றும் எதிர்பார்க்கவில்லை.

குடியேற்றம் அதிகரிக்க அதிகரிக்க தண்ணீர்க்கான தேவையும் அதிகரிக்கவே செய்தது. மெட்ராஸுக்கு நதி நீர் விநியோகம் வடமேற்கு மார்க்கமாக மட்டுமே செய்யப்பட்டது. அப்போது அடையாறு ஆற்றின் நீரை பயன்படுத்த முடியவில்லை. ஏனெனில் செம்பரம்பாக்கம் ஏரியின் உபரிநீரால் உருவான அடையாறு ஆறு நகரத்தின் தெற்குப் பகுதியிலேயே பாய்ந்தது. இதன் காரணமாக மாநிலங்களுக்கிடையேயான நீர் பகிர்வு ஒப்பந்தம் கையெழுத்தாவதற்கு முன் நகரத்தின் ஒட்டுமொத்த நீர் தேவைக்கும் கொசஸ்தலையாறு மற்றும் கூவம் ஆற்றை மட்டுமே மாநிலம் நம்பியிருந்தது.

ஆறு முற்றிலுமாக நாசமடைவதற்கு தொழிற்சாலை மற்றும் சுற்றுபுற கழிவுகளைத்தான் அனைவரும் காரணம் காட்டுகின்றனர். இருப்பினும் நகராட்சி நீர் விநியோகத்தை குற்றம் சாட்டுகிறார் நாவலாசிரியர் மற்றும் வரலாற்றாசிரியரான வெங்கடேஷ் ராமகிருஷ்ணன். 

மாசு மற்றும் அசுத்தம் நிறைந்த கூவம் ஆறு
மாசு மற்றும் அசுத்தம் நிறைந்த கூவம் ஆறு
”மெட்ராஸ் மிகப்பெரிய மாநகரமாக உருவாகக்கூடும் என்பதால் கூவம் மற்றும் கொசஸ்தலையாற்றின் வரத்தை பிரிட்டிஷ் விரும்பவில்லை. இருந்தும் இறுதியில் அவ்வாறே நடந்துவிட்டது” என்றார் வெங்கடேஷ். 

தாமரைப்பாக்கம் அணை 1868-ல் கட்டப்பட்டது. சென்னையின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய ரெட் ஹில்ஸ் நீர்தேக்கத்திற்கு தண்ணீரை திசை திருப்புவதற்காக இந்த அணை கட்டப்பட்டது. தண்ணீர் ஈர்ப்பினால் திறந்த சேனல் வாயிலாக சோழவரம் மற்றும் ரெட் ஹில்ஸ் நீர்தேக்கங்களை சென்றடைந்தது. இறுதியாக கீழ்பாக்கம் வாட்டர் வொர்க்ஸை வந்தடைந்தது.

கொசஸ்தலையாற்றிலிருந்து பிரிந்து கூவம் முற்றிலும் சாராமல் பகுதியாக சார்ந்திருக்கும் கிளையாறாக பாயும் புள்ளிதான் இன்று பூண்டி நீர்தேக்கமாக உள்ளது. கொசஸ்தலையாற்றை தடுத்து அருகிலிருக்கும் நீர்தேக்கத்தில் நீரை தக்கவைக்க தீர்மானிக்கப்பட்டது. கொசஸ்தலையாற்றிலிருந்து கணிசமான அளவு நல்ல தண்ணீர் கூவம் பெற்றுவந்தது. கொசஸ்தலையாற்றை தடுப்பதால் கூவத்திற்கு வரும் நீர் வரத்து குறையும். எனவே 1940-களில் கேசவரத்தில் அணை கட்டியதிலிருந்து தண்ணீர் தேவை காரணமாக கூவத்தின் நீர் வரத்து முடக்கப்பட்டது.

”1941 முதல் 1949 வரை 4.5 லட்சம் மக்கள் மெட்ராஸிற்கு குடிபெயர்ந்தனர். மெட்ராஸில் குடிநீர் தேவை அதிகரித்ததன் காரணமாக கூவம் மற்றும் கொசஸ்தலையாற்றிற்கான நீர் வரத்தில் சமரசம் செய்யப்பட்டது. பூண்டி திட்டம் தோல்வியடைந்திருந்தால் சென்னையின் வளர்ச்சி வேறுவிதமாக இருந்திருக்கும்.” என்றார் வெங்கடேஷ்.

பாரம்பரியம் குறித்த ஆய்வு

வெங்கடேஷ் கூவம் ஆற்றை ஒட்டிய வரலாற்று நிகழ்வுகளில் கவனம் செலுத்தியது போல பத்மப்ரியா கூவத்தை ஒட்டிய பகுதிகளிலுள்ள கோவிகளில் கவனம் செலுத்தினார். கூவம் ஆற்றிற்கான ஒரு தனிப்பட்ட ’கூவ புராணம்’ உள்ளதை கண்டறிந்த இவர்களது குழுவினர் மெய்சிலிர்த்துப் போனார்கள். கூவத்தை ஒட்டிய கிராமங்கள் மற்றும் அடையாள கோயில்களை கண்டறிவதற்கு இந்தப் புராணம்தான் ஆரம்பப்புள்ளியாக அமைந்தது. ஒரு கிலோமீட்டர் சுற்றளவிற்குள் உள்ள கிராமங்கள், கோயில்கள், தொல்லியல் ஆய்வுகளில் ஆவணப்படுத்தப்பட்ட தகவல்கள் மற்றும் கல்வெட்டுகள் போன்றவை மட்டுமே ஆய்விற்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

”எங்களது தொகுப்புகள் வரலாறு, தொல்லியல், கல்வெட்டு ஆய்வுகள் போன்றவற்றால் உறுதிப்படுத்தப்பட்டதாக இருக்கவேண்டும் என்று விரும்பினோம். இதனால்தான் நாங்கள் புராண வழியை தேர்ந்தெடுக்கவில்லை.” என்றார் ப்ரியா. 

மெட்ராஸ் ப்ரெசிடென்ஸியின் டி வி மஹாலிங்கம் ஆராய்ந்த கல்வெட்டுகள் மற்றும் தென்னிந்திய வரலாற்று கல்வெட்டுகள் ஆகியவை இவர்களுக்கு வழிகாட்டியது. அத்துடன் தொல்லியல், வரலாறு ஆகிய பிரிவுகளைச் சேர்ந்த நிபுணர்கள் அவ்வப்போது உற்சாகப்படுத்தினர். 18 மாதங்கள் கிட்டத்தட்ட ஒரு யாத்திரை போன்றே கடந்தது. அவர்கள் கவனித்து அறிந்ததை குறிப்புகளாக தொகுக்க ஒரு வருடம் செலவிடப்பட்டது. அதற்குப் பிறகே ’தி காட்ஸ் ஆஃப் ஹோலி கூவம்’ (The Gods of Holy Cooum) உருவானது. கூவத்தின் அருகேயுள்ள முக்கிய கோயில்களை அதன் வரலாற்று மற்றும் கல்வெட்டு சார்ந்த முழுமையான தகவல்களுடன் பட்டியலிடுவதே இந்த புத்தகத்தின் நோக்கமாகும்.

கூவம் பகுதியின் விவசாயம் மற்றும் மோட்சம்

கோயில் கல்வெட்டுகளில் ஆறு குறித்த தகவல்களுடன் நதி நீர் மேலாண்மை குறித்தும் போதுமான தகவல்கள் பொறிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார் பத்மப்ரியா. உதாரணமாக சிவன்குடல் கோயிலில் சிவன் சன்னதியை சுற்றிலும் ஏரிகள் மற்றும் நீர்பாசன தொட்டிகள் குறித்து 12 கல்வெட்டுகள் உள்ளன. பெரம்பாக்கத்திலுள்ள கல்வெட்டுகளில் கிராம மக்கள் வருடந்தோறும் மிகுதியான அறுவடைக்காக ஆற்றிற்கு மரியாதை செலுத்த ஒன்றுகூடுவார்கள் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. 

”ஆறு மற்றும் அதன் சுற்றியுள்ள நிலப்பரப்புகள் மதிப்பிற்குரியதாக பார்க்கப்பட்டது என்பதை மறுப்பதற்கில்லை.” என்றார் அவர்.

சிவன் மூன்று அசுரர்களை கொல்வதற்கு சென்றபோது கடவுள் கணேசனுக்கு மரியாதை செலுத்த மறந்துவிட்டார். அதற்கு தண்டனையாக அவரது ரதம் கவிழ்ந்தது. அப்போது கவிழ்ந்த ரதத்தை சிவன் சமன்படுத்த முயற்சித்தபோது அவரது வில் வைக்கப்பட்டிருந்த இடத்திலிருந்து விருத்த க்‌ஷீரா நதி பெருக்கெடுத்து ஓடியது. பூமிக்கடியிலிருந்து சிவபெருமானின் பாதத்தை கழுவுவதற்காக உருவான நதி ‘பாலி’ என்று கூறப்பட்டது. பாலாற்றிலிருந்துதான் இந்த பெயர் உருவானதாகவும் அதன்பிறகே புனித கூவமாக உருவானதாகவும் கூறப்படுகிறது.

சோழ அரசன் இரண்டாம் ராஜேந்திரனின் காலத்தில் கூவம் பகுதியின் கிராமத்தில் இருந்த திருவிற்கோலநாதர் கோயில் கல்வெட்டுகள் வளங்களின் பயன்பாடு குறித்தும் கூவம் குளத்திற்கான நீர் வர்த்திற்காக கால்வாய் கட்டுவதற்கு நிலம் ஒதுக்கப்படவேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதே பகுதியில் கிபி 1112 வருடம் முதல் குலோத்துங்கன் கால கல்வெட்டில் குளம் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு குறித்த தகவல்கள் காணப்படுகின்றன. திரிபுவனமாதேவி பேரேரி என்று அந்நாளில் அழைக்கப்பட்ட கூவம் குளத்தை பழுதுபார்க்கும் பணிகளுக்காக நெல் மற்றும் மீன்பிடி வரிகளின் தொகை அதிகரிக்கப்பட்டதாக கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன.

வாரனாசி, கயா போலவே கூவமும் மோட்ச ஷேத்திரங்களுக்கு ஒப்பானது என்று கேசவரத்திலுள்ள கைலாச ஈஸ்வரமுடைய மஹாதேவர் கோயிலிலுள்ள கல்வெட்டுகள் குறிப்பிடுகிறது. இன்று நம்மால் ஜீரணிக்க முடியாத விஷயமாக தோன்றினாலும் கூவம் ஆற்றில் குளிப்பது ஒருவர் பிறப்பு மற்றும் இறப்பு சுழற்சியிலிருந்து விடுபட உதவும் என்று நம்பப்பட்டது.

குளங்கள் மற்றும் நதிகள் குறைந்தது எப்படி?

திருவள்ளூர்-காஞ்சிபுரம் சுற்றுவட்டார கிராமங்கள் விவசாயத்திற்கு கூவத்துடன் இணைக்கப்பட்ட சிறு குளங்களையும் தனிப்பட்ட நீர்நிலைகளையும் அதிகம் சார்ந்திருந்தது. பாசனங்களுக்கு மட்டுமல்லாமல் நிலத்தடி ரீசார்ஜ்களிலும் குளங்கள் முக்கிய பங்கு வகித்தது. ஆனால் முந்தைய நிலப்பரப்பின் சுவடுகள் ஏதுமின்றி தற்போது குளங்கள் அனைத்தும் மறைந்துவிட்டன.

பல கோயில் குளங்களுக்கும் இதே நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கிறார் பத்மப்ரியா. 

”இருளஞ்சேரியிலுள்ள 11.2 ஏக்கர் பரப்பளவு கொண்ட கோயில் குளம் வற்றி அழியும் நிலையிலுள்ளது. அதேபோல் நேமம் பகுதியின் கோயிலிலுள்ள ஔஷத தீர்த்தத்தின் அளவும் நாட்கள் செல்லச் செல்ல பெருமளவு குறைந்து வருகிறது. இந்த இரண்டு கோயில் குளங்கள் மட்டுமல்லாது கூவத்தின் பெருவாரியான பகுதிகளுக்கும் இதே நிலைதான்.” என்றார் பத்மப்ரியா.
அளவு குறைந்து இன்று காணப்படும் ஒளஷத  தீர்த்தம்
அளவு குறைந்து இன்று காணப்படும் ஒளஷத  தீர்த்தம்

கூவத்தின் பெருமையை வரலாறும் கலாச்சாரமும் எடுத்துரைக்கும்போதிலும் தற்போதைய நிலை என்ன? அதன் உண்மையான பெருமையை திரும்பப்பெறுவதற்கான வாய்ப்புள்ளதா? 

இது குறித்து கேட்கையில் நிச்சயமாக இல்லை என்கிறார் வெங்கடேஷ். மறுசீரமப்பு முயற்சியும், நகர்புறங்களில் அதன் நீர்வரத்தை விடுவிப்பதும் நடைமுறைக்கு சாத்தியமில்லாதது. 

”நதியின் வரத்தை கட்டுப்படுத்துவதாக எடுக்கப்பட்ட தீர்மானம் நூறாண்டுகளுக்கு முந்தைய காலத்தில் எடுக்கப்பட்டது. நீர்வரத்தே இல்லாத நிலையில் அதை எவ்வாறு மறுசீரமைக்க இயலும்? இன்று நாம் காணும் கூவமானது தொழிற்சாலை கழிவுகளாலும் சுற்றுவட்டார கழிவுகளாலும் நிரம்புயுள்ளது. இவற்றை தடுப்பதால் கழிவுகள் மேலும் சேருவதை மட்டுமாவது கட்டுப்படுத்தலாம்.”

குறைந்தது இந்த நடவடிக்கையை மேற்கொண்டோமானல் நூறாண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து கூவத்தை நிரப்பியிருக்கும் சேறு மற்றும் துர்நாற்றத்தை இனி விடுவிக்கலாம்.

ஆங்கில கட்டுரையாளர் : சீதா கோபாலகிருஷ்ணன்