பங்குச் சந்தையில் நுழைவது எப்படி? | Step-by-Step கைடன்ஸ்
அண்மைக் காலமாக பங்குச் சந்தையில் முதலீடு செய்ய மக்கள் அதிக ஆர்வம் காட்டி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில், பங்குச் சந்தையில் இணைவது எப்படி என்பது குறித்து தெளிவாகப் பார்ப்போம்.
அண்மைக் காலமாக பங்குச் சந்தையில் முதலீடு செய்ய மக்கள் அதிக ஆர்வம் காட்டி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்தியாவில் கடந்த பிப்ரவரி மாதம் மட்டும் சுமார் 11.3 லட்சம் பேர் பங்குச் சந்தையில் புதிதாக முதலீட்டாளர்களாக இணைந்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
தேசிய பங்குச்சந்தை வெளியிட்டுள்ள அறிக்கையின்படி பதிவு செய்யப்பட்ட முதலீட்டாளர்களின் எண்ணிக்கை மட்டும் சுமார் 11 கோடியை கடந்துள்ளது. கடந்த 2024 பிப்ரவரியில் இந்த எண்ணிக்கை 9 கோடியாக இருந்தது. ஒரே ஆண்டில் சுமார் 2 கோடி முதலீட்டாளர்கள் அதிகரித்துள்ளனர்.
சரி, பங்குச்சந்தையில் இணைவது எப்படி என்பது குறித்து விரிவாகவும் தெளிவாகவும் பார்ப்போம்.
சர்வதேச பொருளாதார சூழலுக்கு ஏற்ப பங்குச் சந்தையில் வர்த்தகம் ஏற்றம் மற்றும் இறக்கம் காண்பது வழக்கம். முதலீட்டாளர்கள் பங்குகளின் விலை ஏறும்போது கைவசம் இருக்கும் பங்குகளை விற்பனை செய்வார்கள். அதுவே, விலை குறையும்போது பங்குகளை வாங்குவார்கள். சந்தை நிலவரத்தை கூட்டி கழித்து பார்த்து முதலீட்டாளர்கள் இதை மேற்கொள்வார்கள்.
சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால். பங்கு வர்த்தகத்தில் ஈடுபடும் ஒவ்வொருவரும் ‘லக்கி பாஸ்கர்’ படத்தில் வரும் பாஸ்கர் கதாபாத்திரம் போலத்தான்.
கடந்த இரண்டு தசாப்தங்களாக பங்குச்சந்தை முதலீடு சார்ந்த ஆர்வம் மக்களிடையே அதிகரித்து வருகிறது. தங்கள் முதலீடு மூலம் நல்ல ரிட்டர்ன் எடுக்க வேண்டுமென மக்கள் எதிர்பார்க்கின்றனர். இருந்தாலும் பங்கு வர்த்தக முதலீட்டின் ஆரம்ப கட்டம் என்பது சற்றே சவாலானது. இதோடு பங்குச் சந்தையில் எப்படி முதலீடு செய்வது என்ற அடிப்படையை அறிய வேண்டியதும் அவசியம்.
பங்குச் சந்தை வர்த்தகம்
உள்நாடு மற்றும் வெளிநாட்டு நிறுவனங்கள், பொதுத் துறை மற்றும் தனியார் துறை நிறுவனங்கள், தனி நபர்கள் என பலரும் இயங்கும் இடம்தான் பங்குச் சந்தை. இங்கு நிறுவனங்கள் பங்குகளை வெளியிடும். அதை முதலீட்டாளர்கள் வாங்குவதும், விற்பனை செய்வதும் வழக்கம்.
பங்கு விற்பனையை அனுமதிப்பது, கண்காணிப்பது மற்றும் முறைபடுத்தும் தளமாக பங்குச்சந்தை உள்ளது. ஒரு நிறுவனத்தின் பங்குகள் பங்கு வர்த்தகத்தில் ஈடுபட பங்குச்சந்தையில் பட்டியலிடப்படவேண்டும். இந்தியாவில் இதற்கு செபியின் அனுமதி அவசியம். பங்குச்சந்தையில் பட்டியலிடப்படும் நிறுவனங்களின் பங்குகளை தான் முதலீட்டாளர்கள் வாங்கவும், விற்கவும் முடியும்.
இந்தியாவில் பங்குகளை பரிமாற்றும் சந்தைகளில் மும்பை பங்குச் சந்தை மற்றும் தேசிய பங்குச் சந்தை என இரண்டு பங்குச் சந்தைகள் செயல்பட்டு வருகிறது. இந்த சந்தைகளின் மூலமாக தான் பங்கு முதலீட்டார்கள் இந்தியாவில் பங்குகளை வாங்கவும், விற்கவும் முடியும்.

பங்குச் சந்தையில் நுழைவது எப்படி?
பங்குச் சந்தையில் சரியான உத்தியுடன் முதலீடு செய்வதன் மூலம் நல்ல பலனை பெறுவதற்கான அடிப்படை முயற்சியாக அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.
1) சிறந்த ஸ்டாக் புரோக்கரை தேர்வு செய்ய வேண்டும்: பங்கு வர்த்தகத்தில் சிறந்த ஸ்டாக் புரோக்கரை அடையாளம் காண வேண்டியது அவசியம். முதலீட்டாளர்களுக்கு சிறந்த சேவை வழங்கும் ஸ்டாக் புரோக்கராக இருக்க வேண்டும். அதோடு அவர்களது புரோக்கரேஜ் கட்டணம் உள்ளிட்டவற்றையும் அறிந்திருக்க வேண்டும்.
2) Demat மற்றும் Trading கணக்கு அவசியம்: பங்குச்சந்தை முதலீட்டில் ஈடுபட Demat மற்றும் டிரேடிங் கணக்கு அவசியம். இதில் Demat கணக்கில் முதலீட்டாளரின் பங்கு கையிருப்பு மின்னணு வடிவத்தில் இருக்கும், டிரேடிங் கணக்கு மூலம் பங்குகளை வாங்கவும், விற்கவும் முடியும். இந்த கணக்குகளை தொடங்க முதலீட்டாளர்கள் தங்களது ஸ்டாக் புரோக்கர்களை அணுகலாம். அதற்கான வழிகாட்டுதலை அவர்கள் வழங்குவார்கள்.
3) டிரேடிங் கணக்கில் நிதி சேர்க்க வேண்டும்: Demat மற்றும் டிரேடிங் கணக்குகளை தொடங்கியதும் முதலீட்டாளர்கள் டிரேடிங் கணக்கில் நிதி சேர்க்க வேண்டும். நெட் பேங்கிக், யுபிஐ உள்ளிட்ட வழிகளில் பணத்தை டிரேடிங் கணக்குக்கு மாற்றலாம். அதன் பின்னர் புரோக்கர் வழங்கிய டிரேடிங் தளத்தின் வழியாக லாக்-இன் செய்து பங்கு முதலீடு சார்ந்த பணிகளை தொடங்கலாம்.
4) முதலீடு செய்ய விரும்பும் பங்குகளை தேர்வு செய்ய வேண்டும்: முதலீட்டாளர்கள் தாங்கள் முதலீடு செய்ய விரும்பும் பங்கினை அடையாளம் காண வேண்டும். இதில் ஒரு நிறுவனத்தின் நிதி நிலை, சந்தை வாய்ப்பு மற்றும் வளர்ச்சி உள்ளிட்ட காரணிகளை ஆராய வேண்டும். மேலும், ஸ்டாக் புரோக்கர் வழங்கும் புள்ளிவிவரங்களையும் பார்க்கலாம்.
5) முதலீட்டுத் தொகையை தீர்மானிக்க வேண்டும்: ஒரு நிறுவனத்தில் எத்தனை பங்குகளை வாங்குகிறோம், அதற்கான முதலீட்டு தொகை எவ்வளவு என்பதை உறுதி செய்ய வேண்டும். ஒரே நிறுவனத்தில் அதிக தொகையை முதலீடு செய்யாமல் பல்வேறு நிறுவனங்களில் முதலீடு செய்யலாம். இது ரிஸ்கை குறைக்கும்.
6) பர்சேஸ் ஆர்டர்: இதன் பின்னர் முதலீட்டாளர்கள் பர்சேஸ் ஆர்டரை இறுதி செய்ய வேண்டும். இதில் பங்குகளின் எண்ணிக்கை, அதன் தொகை உள்ளிட்டவற்றை சரிபார்த்து பர்சேஸ் ஆர்டரை உறுதி செய்ய வேண்டும். அப்படி செய்வதன் மூலம் முதலீட்டாளர் வாங்கும் பங்குகள், அவரது Demat கணக்கில் வரவு வைக்கப்படும்.
7) கண்காணிக்க வேண்டும்: தொடர்ந்து தங்கள் முதலீட்டின் செயல்பாட்டை முதலீட்டாளர்கள் கண்காணிக்க வேண்டும். சந்தை நிலவரம், பங்குகளின் விலை, நிறுவனத்தின் செயல்பாடு போன்றவற்றை இதில் பார்க்க வேண்டும். இதன் மூலம் பங்கு வர்த்தக முதலீட்டில் பங்குகளை வாங்குவது அல்லது விற்பனை செய்வது போன்ற சரியான முடிவுகளை எடுக்க முடியும்.
பங்குச்சந்தை முதலீட்டில் ரிஸ்க் இருக்கின்ற காரணத்தால் மக்கள் தங்கள் ஆழமான ஆய்வு மற்றும் பொருளாதார வல்லுநர்களின் வழிகாட்டுதலை பெற வேண்டியது அவசியம்.
Edited by Induja Raghunathan

