நீங்களும், நண்பரும் ஒரே நேரத்தில் பதவி உயர்வுக்கு போட்டியிடும் நிலை வந்தால், எப்படி சமாளிப்பது?
பணியிடத்தில் நண்பர்கள் இருப்பது செயல்திறன் மற்றும் ஈடுபாட்டை அதிகரிக்கும் என்றே ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இருப்பினும், வார்ட்டன் ஆய்வாளர்கள் ஜூலியானா பில்லேமர் மற்றும் நான்சி ராத்பார்ட் நடத்திய சமீபத்திய ஆய்வு, பணியிடத்தில் நண்பர்களை பெற்றிருப்பதற்கு ஒரு இருண்ட பக்கமாக இருக்கலாம் என தெரிவிக்கிறது. அதிலும் குறிப்பாக நட்புக்கு சிறந்ததாக தோன்றுவது நிறுவன நலனுக்கு எதிராக அமைந்தால் இது இன்னும் தீவிரமாக இருப்பதாக தெரிவிக்கிறது.
இந்த உதாரணத்தை பாருங்கள்: லதா மற்றும் ஆண்ட்ரிஸ் ஆகிய இருவர் ஒரே குழுவில் ஐந்தாண்டுகளாக பணியாற்றி நல்ல நண்பர்களாக இருப்பதாக வைத்துக்கொள்வோம். பணி சவால்களை எதிர்கொள்ளும் போதெல்லாம் அவர்கள் பரஸ்பரம் உதவிக்கொண்டு, ஆதரவாக இருந்துள்ளனர். வார இறுதியில் அவர்கள் குடும்பங்களுடன் செலவிட்டுள்ளனர். இருவருமே நெருங்கிய நண்பர் சகாவாக இருப்பது குறித்து மகிழ்ச்சி அடைந்தனர்.
அண்மையில், லதா மற்றும் ஆண்ட்ரீஸ் இடையே நெருக்கடியான தருணம் உண்டானது. மேலதிகாரி லதாவிடம், இருவருமே பதவி உயர்வுக்கு பரிசீலிக்கப்படுவதாகவும், யாருக்கு அது கிடைத்தாலும் அவர்கள் கீழ் மற்றவர் பணியாற்ற வேண்டும் என தெரிவித்தார். இந்த வாய்ப்பு குறித்து இருவருமே உற்சாகம் அடைந்தாலும், அவர்கள் சங்கடமாகவும் உணர்ந்தனர். அவர்கள் உறவு எப்போதுமே பரஸ்பர தன்மை கொண்டதாக இருந்துள்ளதே தவிர போட்டி மிக்கதாக அல்ல. மேலும் இருவருக்குமே பதவி உயர்வை பெற விரும்புவதற்கான காரணங்கள் இருந்தன.
லதாவின் வயதான பெற்றோர்கள் அவருடன் வசிக்கத்துவங்கியுள்ளதால், அவர் அண்மையில் பெரிய வீடு வாங்கியிருந்தார். எனவே வீட்டுக்கடன் பொறுப்பு இருக்கிறது. மூன்று குழந்தைகளை தனியே வளர்க்கும் தகப்பனான ஆண்ட்ரிசை பொருத்தவரை, இந்த பதவி உயர்வு என்பது, வாடிக்கையாளர்கள் சந்திப்புப் பயணங்களை குறைத்துக் கொண்டு, குழு நிர்வாகத்தில் கவனம் செலுத்த உதவும் என்பதால் தன் குழந்தைகளுடன் அதிக நேரத்தை செலவிட வழிவகுக்கும்.
பல சுற்று நேர்காணல்களுக்கு பிறகு லதா இதற்கு தேர்வானார். ஆண்ட்ரிஸ் ஏமாற்றமாக உணர்ந்தார். அவர் லதாவுக்கு பதவி கிடைத்ததால் மகிழ்ந்தாலும் அவரது சுய கவுரவம் பாதிக்கப்பட்டது. அவரது நெருக்கமான நண்பர் மேலாளர் என்பது, புதிய சங்கடத்தை ஏற்படுத்தி அவர்கள் இணைந்து பணியாற்றுவதை பாதித்தது.
பணி நண்பரும், நீங்களும் பதவி உயர்வுக்கு காத்திருந்தால் அல்லது, உங்களில் ஒருவர் வெற்றி பெற்று மற்றவர் தோல்வி அடையக்கூடிய போட்டி சூழலில் நீங்கள் என்ன செய்வீர்கள்?
முதலில், உணர்வு சமநிலை தேவை
உங்கள் பணி வாழ்க்கையில் எதிர்கொள்ளக்கூடிய பதவி உயர்வுகளில் இது ஒன்று மட்டுமே என நினைவில் கொள்ளுங்கள். மரங்கள் மீது கவனம் செலுத்தி, காடுகளை கவனிக்காமல் இருந்து விடவேண்டாம். உணர்ச்சியமயமான சூழலில் இப்படி நடக்க வாய்ப்பு அதிகம்.
நீங்கள் மன அழுத்தத்தோடு அல்லது கவலையாக உணரும் போது, காரணம் மற்றும் தர்க்கம் எதிர்மறை தாக்கம் பெறுவதாக மூளை ஸ்கேன் ஆய்வு தெரிவிக்கிறது. கொஞ்சம் பின்னே அடியெடுத்து வைத்து, சரியான பார்வை பெறுவதும், பரந்த நோக்கில் பார்ப்பதும் உதவும். எப்படியும், உங்களை மதிக்கும், விரும்பும், புரிந்து கொள்ளும் மேலாளரை பெறுவது என்பது, உங்களோடு ஒத்து போகாமல் இருக்கக் கூடிய அறிமுகம் இல்லாதவரை விட சிறந்தது தானே.
மேலதிகாரியுடனான நம் உறவுடன் இதய ஆரோக்கியம் தொடர்பு கொண்டுள்ளது என்பதை ஆய்வுகள் உணர்த்தும் நிலையில், நீங்கள் விரும்பும், உங்களை விரும்பும் மேலதிகாரியை பெறுவது சாதகமானது தான். உங்களை புரிந்து கொண்டு, பாராட்டக்கூடிய மேலதிகாரி உங்கள் பணி முன்னேற்றத்திறகு உதவுவார். உதாரணமாக, ஆண்ட்ரிசுக்கு, லதா எப்போதும் தனக்காக பேசுவார் எனத்தெரியும்.
சரியான பார்வை, பதவி உயர்வைவிட நட்பு முக்கியமானது என உணந்து கொள்ள உதவும். உணவு மற்றும் உறைவிடத்திற்கு அடுத்தபடியாக சமூக தொடர்புகள் முக்கியமானவை என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
நம்முடன் பணியாற்றுபவர்களுடன் நல்லவிதமான சமூக உறவு கொண்டிருந்தால் பணியில் நாம் அதிக ஈடுபாடும் மகிழ்ச்சியும் கொள்கிறோம். (அதிக சம்பளம் பெறுவதைவிட இது மகிழ்ச்சியானது).
அதேம் நேரத்தில் தனிமை என்பது நம்முடைய உளவியல் மற்றும் உடல் ஆரோக்கியத்தை பாதிக்கக் கூடியது. இதை லோன்லினஸ்; ஹியூமன் நேச்சர் அண்ட் தி நீட் பார் சோசியல் கனெக்ஷன் புத்தகத்தின் இணை ஆசிரியரான உளவியல் வல்லுனர் ஜான் கேசியோபோ தனது ஆய்வு மூலம் நிரூபித்திருக்கிறார். அதிக செயல்திறன் மற்றும் களைத்துப்போவதை குறைப்பது உள்ளிட்ட பல நலன்களை பணியிடத்தில் நண்பர்கள் நமக்கு தொழில்நோக்கிலும், தனிப்பட்ட முறையிலும் அளிக்கின்றனர்.
பதவி உயர்வு தொடர்பான தனது ஏமாற்றத்தை மட்டும் நினைத்துக்கொண்டிருக்காமல் ஆண்ட்ரிஸ் லதாவுக்காக மகிழ்வதை நினைத்துப்பார்க்கலாம். இழந்ததை நினைத்துப் பார்ப்பதைவிட சமூக தொடர்பு முக்கியமானது.
உணர்ச்சியை கட்டுப்படுத்துங்கள்
பதவி உயர்வு தேர்வு என்பது உங்கள் மீதான தீர்ப்பு அல்ல. பதவி உயர்வு என்பது பல நேரங்களில் மனம் போனதாக, குறிப்பிட்ட சூழல் சார்ந்ததாக இருக்கலாம். எல்லா நேரங்களிலும் அது ஒரு பதவிக்கு மிகவும் சிறந்தவரை தேர்வு செய்வது அல்ல.
உதாரணமாக, தொழில்நுட்பத் திறனை விட உறவுகள் காரணமாகவே மக்கள் பணியில் முன்னேறுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. எல்லாவிதமான முடிவுகளிலும் அரசியல் முக்கியப் பங்கு வகிப்பது நமக்கு தெரிந்தது தான்.
பிரபலமான கலாச்சார உளவியல் வல்லுனரான, ஹசெல் மார்கஸ், தன்னுடைய கிலாஷ்: ஹவ் டு திரைவ் இன் எ மல்டிகல்சுரல் வேர்ல்ட், புத்தகத்தில், அமெரிக்கா அல்லது பல ஐரோப்பிய நாடுகளைப்போன்ற தனிநபர் நாடுகளைசேர்ந்தவர் நீங்கள் எனில், நீக்கள் (தவறுதலாக) உங்கள் வெற்றி அல்லது தோல்விக்கு முழு பொறுப்பு என நினைத்துக்கொள்கிறீர்கள். கிழக்காசிய நாடுகளை போன்ற கூட்டு சமூகத்தைச் சேர்ந்தவர்கள், ஒட்டுமொத்த பார்வை கொண்டுள்ளனர்.
வெற்றி அல்லது தோல்வி அடைவது என்பது, உங்கள் தகுதி தவிர வேறு பல விஷயங்களைக் கொண்டது என புரிந்து கொள்கின்றனர். பதவி உயர்வு அளிப்பது அல்லது மறுப்பது என்பது, உங்கள் திறன் சார்ந்ததாக இல்லாமல், உங்கள் கட்டுப்பாட்டுக்கு வெளியே உள்ள அம்சங்களால் கூட அமையலாம்.
தகவல் தொடர்பு, திட்டமில் முக்கியம்
பதற்றத்தை தணிக்க உங்கள் நண்பருடன் சூழல் பற்றிப் பேசுங்கள். உங்கள் அசெளகர்யம் குறித்து பேசுங்கள். இந்த பணிச் சூழல், நட்பை பாதிக்காமல் இருப்பதற்கான உறுதி பற்றி பேசுங்கள்.
ஆண்ட்ரிஸ் மற்றும் லதா, தங்கள் பணி உறவு எப்படி இருக்கும் என்பது குறித்து மற்றும் அதிகார சமநிலையின்மை எப்படி தங்கள் தனிப்பட்ட உறவை பாதிக்க அனுமதிக்காமல் இருப்பது என்று குறித்து பேசுவதன் மூலம் பலன் பெறலாம். முடிவு எடுக்கப்படுவதற்கு முன் கூட, என்ன நடக்கூடும் என்பது பற்றியும், தங்கள் உறவை எப்படி தக்க வைத்துக்கொள்வது என்பது பற்றியும் பேசலாம்.
பணியிடத்தில் நண்பர்கள் இருப்பதன் சாதகங்களை மறுக்க முடியாது. ஆனால் சிக்கலான சூழல்களும் உருவாகலாம். நிறுவனத்தின் என்ன நடக்கிறது என்பதை மீறி நட்பை காத்துக்கொள்வதே முக்கியம்.
இந்த கட்டுரை முதலில் www.hbrascend.org வெளியானது. எச்.பி.ஆர் டிசெண்ட், மாணவர்கள் மற்றும் ஆரம்ப நிலை தொழில்முறையினருக்கான டிஜிட்டல் கல்வி துணைவனாகும்.
தமிழில்: சைபர்சிம்மன்