உங்கள் டீம் லீடர் ‘போலி’ தலைவரா? - அறிந்திட 5 அறிகுறிகள்!
உண்மையான தலைமைக்கும், அதன் மேலோட்டமான போலித்தனத்திற்கும் இடையிலான வித்தியாசத்தை அடையாளம் காணக் கற்றுக்கொள்வதே நமக்கான சவாலாகும்.
தலைமை பொறுப்பில் இருக்கும் எவரும் அதை தனது தகுதியால் பெற்றிருப்பார்கள் என்றும், அந்தப் பதவி ஞானம், நேர்மை மற்றும் ஊக்குவிக்கும் திறனுடன் வரும் என்றும் நாம் அனைவரும் நம்ப விரும்புகிறோம். ஆனால் உண்மை என்னவென்றால், உயர்மட்டத்தில் இருக்கும் ஒவ்வொரு நபரும் உண்மையான தலைமையைப் பெற்றிருப்பதில்லை.
சிலர் முகமூடியை நம்பும்படியாக அணிந்துகொள்கிறார்கள். ஆனால், அதற்குப் பின்னால் ஆழமோ, உண்மைத் தன்மையோ அல்லது அவர்கள் வழிநடத்தும் நபர்கள் மீது உண்மையான அக்கறையோ இருப்பதில்லை. இத்தகைய தலைவர்கள் கொடுப்பதை விட அதிகமாகப் பிடுங்குபவர்கள். இவர்கள் தங்கள் குழுவினரை மனச்சோர்வடையச் செய்து, நிறுவனங்களை பலவீனப்படுத்துகிறார்கள்.
உண்மையான தலைமைக்கும், அதன் மேலோட்டமான போலித்தனத்திற்கும் இடையிலான வித்தியாசத்தை அடையாளம் காணக் கற்றுக்கொள்வதே நமக்கான சவாலாகும்.

உங்கள் டீம் லீடர் ஒருவரின் தலைமைப் பண்பு உண்மையானது அல்ல என்பதை வெளிப்படுத்தும் 5 தெளிவான அறிகுறிகள் இதோ:
1. தனிப்பட்ட லாபத்துக்காக பயன்படுத்திக் கொள்பவர்கள்
உண்மையான தலைவர்கள் மற்றவர்களை உயர்த்துவார்கள். போலித் தலைவர்கள் தனக்கு கீழ் உள்ளவர்களை பலிகடா ஆக்குவார்கள்.
இவர்கள் ஒத்துழைப்பை வளர்ப்பதற்குப் பதிலாக, புகழ் அல்லது வஞ்சகம் மூலம் தங்களுக்கு முதலில் லாபம் தரும் முடிவுகளைப் பெற மற்றவர்களை பயன்படுத்தி கொள்வார்கள். குழுவின் தேவைகள் அவர்களுக்கு இரண்டாம் பட்சம்தான். நிறுவனத்தின் இலக்குகள் என்பது பேசுவதற்கு வசதியான தலைப்புகள் மட்டுமே.
இத்தகைய தலைமை நம்பிக்கையற்ற கலாச்சாரத்தை உருவாக்குகிறது. காலப்போக்கில், பணியிடம் என்பது குழு வேலையாக இல்லாமல், வெறுமனே பிழைப்பதற்கான இடமாக மாறிவிடுகிறது.
2. தொடர் கவன ஈர்ப்பு
உண்மையான தலைமை என்பது முடிவுகளைப் பற்றியதே தவிர, கைதட்டல்களைப் பற்றியது அல்ல. போலித் தலைமை இதற்கு நேர்மாறானது.
இந்தத் தலைவர்கள் எப்போதும் அங்கீகாரத்திற்காக ஏங்குவதை நீங்கள் கவனிப்பீர்கள். குழுவின் வெற்றிக்கான புகழைத் தானே எடுத்துக்கொள்வது, சுயப்புகழ்ச்சி மூலம் உரையாடல்களை ஆக்கிரமிப்பது அல்லது தான் ‘தவிர்க்க முடியாதவர்’ என்று காட்டிக்கொள்ளத் தனது பிம்பத்தை வடிவமைப்பது என இவர்கள் முயல்வார்கள். இவர்களின் நோக்கம் முன்னேற்றத்தில் இல்லை, பாராட்டில் மட்டுமே உள்ளது.
ஒரு தலைவர் நல்லது செய்வதை விட, நல்லவராகத் தெரிவதில் அதிக கவனம் செலுத்தும்போது, குழுவின் வளர்ச்சி தவிர்க்க முடியாமல் தேங்கிவிடும். கூட்டு முயற்சிக்கு கிடைக்க வேண்டிய வெளிச்சத்தை ஒரு தனிநபரின் ஈகோ அபகரித்துக் கொள்கிறது.

3. தன்னம்பிக்கை எனும் போர்வை
தன்னம்பிக்கைக்கும் அகந்தைக்கும் இடையே ஒரு மெல்லிய கோடு உள்ளது. போலித் தலைவர்கள் பெரும்பாலும் அதில் தடுமாறுகிறார்கள்.
தங்களுடைய பதவி மட்டுமே தங்களுக்கு மரியாதை, விசுவாசம் மற்றும் அபிமானத்தைப் பெற்றுத் தரும் என்று அவர்கள் நம்புகிறார்கள். திறமை மற்றும் பணிவு மூலம் நம்பிக்கையைப் பெறுவதற்குப் பதிலாக, அதை அவர்கள் அதிகாரமாக ஆணையிடுகிறார்கள்.
பொதுவெளியில் அவர்கள் தங்களை உறுதியானவர்களாகக் காட்டிக் கொள்ளலாம், ஆனால் மூடிய கதவுகளுக்குப் பின்னால், ஒரு குழுவை வழிநடத்தத் தேவையான திறன்களும் ஞானமும் அவர்களுக்கு இருப்பதில்லை.
இதன் ஆபத்து நுட்பமானது, ஆனால் உண்மையானது. இந்த மனப்போக்கு நச்சு கலாச்சாரத்திற்கு வழிவகுக்கிறது. குழு உறுப்பினர்கள் தாங்கள் குறைத்து மதிப்பிடப்படுவதாகவும், தங்கள் குரல் கேட்கப்படுவதில்லை என்றும் உணர்ந்து இறுதியில் வேலையில் ஈடுபாடற்றவர்களாக மாறுகிறார்கள்.
4. பொறுப்புக்கூறலில் இருந்து தப்பித்தல்
போலித் தலைமையின் தெளிவான அடையாளங்களில் ஒன்று பொறுப்பேற்க மறுப்பதாகும். விஷயங்கள் தவறாகப் போகும்போது, இந்தத் தலைவர்கள் மற்றவர்கள் மீது விரல் காட்டவும், பழியை மாற்றவும் அல்லது தவறுகளை மறைக்கவும் துடிக்கிறார்கள். இவர்களின் இயல்பு பிரச்சனையைத் தீர்ப்பது அல்ல, தங்களைத் தற்காத்துக் கொள்வது மட்டுமே.
இந்தத் தவிர்ப்பு நம்பிக்கையை அழிக்கிறது. கடினமான காலங்களில் தங்கள் தலைவர் தங்களுக்கு ஆதரவாக நிற்கமாட்டார் என்று தெரிந்த குழு, விரைவில் ஊக்கத்தை இழக்கிறது. மோசமான விஷயம் என்னவென்றால், இது ஒரு பயமான சூழலை உருவாக்குகிறது. தோல்வி அடைந்தால் தலைவர் தங்களை பலிகடா ஆக்கிவிடுவார் என்று தெரிவதால் மக்கள் ரிஸ்க் எடுக்கத் தயங்குகிறார்கள்.

5. மாயத் தோற்றம்
இறுதியாக, போலித் தலைவர்கள் மாயத் தோற்றத்தை உருவாக்குவதில் வல்லவர்கள். அவர்கள் ஒரு தலைவரைப் போலவே நடக்கலாம், பேசலாம் மற்றும் உடை அணியலாம். ஆனால், தொலைநோக்கு பார்வை, நேர்மை மற்றும் நிதானத்தை வழங்குவதில் அவர்கள் தோல்வி அடைகிறார்கள். இவர்களின் வார்த்தைகள் செயல்களுடன் ஒத்துப் போகாது. இவர்களின் உத்திகளில் ஆழம் இருக்காது. இவர்களின் வாக்குறுதிகள் பகட்டாக இருக்கும், ஆனால் செயல்பாடுகள் குறைவாக இருக்கும்.
இந்த மேலோட்டமான தலைமைப் பண்பு ஆரம்பத்தில் வியக்க வைக்கலாம், ஆனால் அழுத்தம் வரும்போது அது சிதைந்துவிடும். சாராம்சம் இல்லாத வசீகரம் என்பது வெறும் வெற்றுக் கூடு என்பதை குழு விரைவில் உணர்ந்து கொள்கிறது.
தலைமை என்பது பதவிகள், அதிகாரம் அல்லது மெருகூட்டப்பட்ட பிம்பங்களைப் பற்றியது அல்ல. இது சேவை, பொறுப்பு மற்றும் உண்மைத் தன்மை பற்றியது.
போலித் தலைவர்கள் இறுதியில் வெளிச்சத்திற்கு வருவார்கள், ஆனால் அதற்குள் அவர்கள் ஏமாற்றமடைந்த குழுக்களையும் வீணடிக்கப்பட்ட திறமைகளையும் விட்டுச் சென்றிருப்பார்கள். எனவே, ஆரம்பத்திலேயே இந்த அறிகுறிகளை அடையாளம் காணக் கற்றுக்கொள்வது சிறந்தது.
மூலம்: ஆஸ்மா கான்
Edited by Induja Raghunathan

