2.2 மில்லியன் டாலர் நிதி திரட்டி உலக அளவில் விரிவாக்கம் செய்யும் ஐஐடி மெட்ராஸ் டீப்டெக் ஸ்டார்ட்-அப் ‘Blurgs AI’
பாதுகாப்பு, கடல்சார் செயல்பாடுகள், துறைமுகங்கள், கப்பல் கட்டும் தளங்கள் மற்றும் மீன்வளத் துறைகளுக்கான செயற்பாட்டு நுண்ணறிவை வழங்கும் ‘பிளர்க்ஸ் ஏஐ,’ நிகழ்நேரக் கண்காணிப்பு, ஒழுங்குமுறை இணக்கம் மற்றும் செயல்திறன் மேம்பாட்டை உறுதிசெய்கிறது.
இந்தியாவை தலைமையிடமாகக் கொண்ட ஆழ்தொழில்நுட்ப (Deep Tech) நிறுவனமான 'பிளர்க்ஸ் ஏஐ' (Blurgs AI), பாதுகாப்பு, தேசிய பாதுகாப்பு மற்றும் வணிக கடல்சார் சந்தைகளுக்கான தனது செயற்கை நுண்ணறிவு (AI) சார்ந்த நுண்ணறிவு தளங்களை உலகளவில் விரிவுபடுத்துவதற்காக 2.2 மில்லியன் அமெரிக்க டாலர் நிதியை திரட்டியுள்ளது.
பாதுகாப்பு, கடல்சார் செயல்பாடுகள், துறைமுகங்கள், கப்பல் கட்டும் தளங்கள் மற்றும் மீன்வளத் துறைகளுக்கான செயற்பாட்டு நுண்ணறிவை வழங்கும் பிளர்க்ஸ் ஏஐ; நிகழ்நேரக் கண்காணிப்பு, ஒழுங்குமுறை இணக்கம் மற்றும் செயல்திறன் மேம்பாட்டை உறுதிசெய்கிறது.
இந்த நிதி திரட்டும் சுற்றுக்கு, பிரவேகா வென்ச்சர்ஸ் மற்றும் ஷாஸ்த்ரா வி.சி. ஆகியவை தலைமை வகித்தன. மேலும், சூரஜ் நிலின் மற்றும் யஷ்வந்த் மதுசூதன் உள்ளிட்ட ஏஞ்சல் முதலீட்டாளர்களும் இதில் பங்கேற்றனர்.

Blurgs AI நிறுவனர்கள்- டாக்டர் அவினாஷ் கோரி, மற்றும் ரோஷன் ராஜ் மொஹந்தி
பிளர்க்ஸ் ஏஐ, உருவாக்கிய தளங்கள், பாதுகாப்பு, சர்வதேச கடல்சார் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்புத் துறைகளில் செயல்படும் முக்கிய அமைப்புகளால் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இவற்றில் இந்தியக் கடற்படை, இந்தியக் கடற்கரைக் காவல்படை, பாரத் எலெக்ட்ரானிக்ஸ், டீ.ஆர்.டி.ஓ, மும்பை துறைமுக ஆணையம், துபாய் மரிடைம் சிட்டி மற்றும் தி நேச்சர் கன்சர்வன்சி ஆகியவை அடங்கும். குறிப்பிடத்தக்க வகையில், நிறுவனம் எந்த நிறுவன முதலீட்டையும் பெறுவதற்கு முன்பே இந்த வாடிக்கையாளர் வலையமைப்பை உருவாக்கியிருந்தது.
பிளர்க்ஸ் ஏஐ, இரண்டு ஒன்றுக்கொன்று துணைபுரியும் துறைகளில் செயல்படுகிறது. வணிகக் கடல்சார் துறையில், அதன் தளங்கள் துறைமுகங்கள், கப்பல் படைகள், கப்பல் கட்டும் தளங்கள் மற்றும் மீன்வளத் துறைகளுக்கு நிகழ்நேரக் கண்காணிப்பு, ஒழுங்குமுறை இணக்கம் மற்றும் செயல்திறன் மேம்பாட்டை வழங்குகின்றன.
பாதுகாப்பு மற்றும் தேசிய பாதுகாப்புத் துறைகளில், அதே தொழில்நுட்ப திறன் அச்சுறுத்தல் கண்டறிதல், எதிரி கண்காணிப்பு மற்றும் பல்வேறு தளங்களில் தொடர்ச்சியான சூழ்நிலை விழிப்புணர்வை வழங்குகிறது.
நிறுவனர்களைப் பற்றி...
பிளர்க்ஸ் ஏஐ, நிறுவனத்தை, ஐஐடி-மதராஸ் முன்னாள் மாணவர்களான ரோஷன் ராஜ் மொஹந்தி மற்றும் டாக்டர் அவினாஷ் கோரி ஆகியோர் நிறுவியுள்ளனர்.
இணை நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரியான (CEO) ரோஷன் ராஜ் மொஹந்தி,
“இந்தியாவில் உருவாக்கி உலகிற்கு வழங்குவோம், என்ற நோக்கத்துடன் செயல்பட்டு வருகிறோம். உலகத் தரத்திலான ஆழ்தொழில்நுட்ப தளங்களை இந்தியாவிலிருந்தே உருவாக்கி, விரிவுபடுத்தி, வழிநடத்த முடியும் என்பதை நிரூபித்து வருகிறோம்,” என்றார்.
முதலீட்டாளர்களுக்கு நன்றி தெரிவித்து அவர் கூறுகையில்,
“கடல்கள் இன்று முன்பை விட அதிகமாக ஒன்றோடொன்று இணைக்கப்பட்டுள்ளன; போட்டி நிறைந்தவையாகவும் வணிக ரீதியாக முக்கியமானவையாகவும் மாறியுள்ளன. பாதுகாப்பு மற்றும் முக்கிய உள்கட்டமைப்புகளின் எதிர்காலம் நிகழ்நேர, நம்பகமான மற்றும் உறுதியான நுண்ணறிவைச் சார்ந்திருக்கும் என நாங்கள் நம்புகிறோம். நாடுகள், நிறுவனங்கள் மற்றும் சமூகங்கள் சிறந்த முடிவுகளை எடுக்க உதவும் ஆழ்தொழில்நுட்ப தளங்களை இந்தியாவில் இருந்து உருவாக்கி வருகிறோம்,” என்றார்.
இணை நிறுவனர் மற்றும் தலைமை அறிவியலாளரான (Chief Scientist) டாக்டர் அவினாஷ் கோரி, லண்டன் இம்பீரியல் காலேஜில் செயற்கை நுண்ணறிவில் முனைவர் பட்டம் பெற்றவர். உலக சந்தைகளுக்கான வலுவான AI சார்ந்த அறிவுசார் சொத்துக்களை உருவாக்கும் நிறுவனத்தின் தொழில்நுட்ப நோக்கத்தை அவர் வழிநடத்தி வருகிறார்.
அவர் கூறுகையில்,
“பிளர்க்ஸ் ஏஐ-யின் மைய நோக்கம் முக்கியமான முடிவெடுப்புகளில் அறிவியல் ஒழுங்கை பயன்படுத்துவதாகும். தகவல் இரைச்சலிலிருந்து உண்மையான சிக்னல்களை பிரித்தறிந்து, நிச்சயமற்ற சூழ்நிலைகளை பகுப்பாய்வு செய்து, சிக்கலான தரவுகளை செயல்படுத்தக்கூடிய நுண்ணறிவாக மாற்றுகிறோம். என்ன நடக்கிறது, அது ஏன் முக்கியம், அடுத்து என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை நம்பிக்கையுடன் புரிந்துகொள்ள முடிவெடுப்போருக்கு உதவுகிறோம்,” என்றார்.
முதலீட்டாளர்களின் கருத்து
முதலீட்டு முடிவுக்கான காரணத்தை விளக்கிய பிரவேகா வென்சர்ஸ் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில்,
“இந்தியாவின் கடற்கரை அதன் முக்கிய மூலோபாயச் சொத்துகளில் ஒன்றாகும். அது வர்த்தகப் பாதைகளையும் தேசிய உறுதியையும் வடிவமைக்கிறது. காலநிலை மாற்றம் மற்றும் மாறிவரும் புவிசார் அரசியல் சூழல் கடல்சார் நுண்ணறிவின் அவசியத்தை மேலும் அதிகரித்துள்ளது. துறைமுகங்கள், கப்பல் கட்டும் தளங்கள், மீன்வளம் மற்றும் பாதுகாப்பு உள்ளிட்ட பல துறைகளில் அரிதாகக் காணப்படும் ஆழமான தொழில்நுட்ப திறனுடன் பிளர்க்ஸ் ஏஐ, செயல்படுவது எங்களை கவர்ந்துள்ளது. இது உலகம் எதிர்நோக்கும் ஒரு பிரச்சினைக்கான இந்தியாவில் உருவாக்கப்பட்ட உலகத் தரத்திலான தொழில்நுட்பமாகும்,” என்றார்.
ஷாஸ்த்ரா வி.சி. நிறுவனத்தின் நிர்வாகக் கூட்டாளரான வசந்த் ராவ் கூறுகையில்,
“கடல்சார் உள்கட்டமைப்புகள் மென்பொருள் சார்ந்த அமைப்புகளாக வேகமாக மாறி வருகின்றன. ஆனால் தரவு பற்றாக்குறை அல்ல, முடிவெடுக்கும் நுண்ணறிவின் பற்றாக்குறையே மிகப்பெரிய சவாலாக உள்ளது. பல்வேறு சென்சார் மற்றும் செயல்பாட்டு தரவுகளை நிகழ்நேர முடிவெடுப்பு நுண்ணறிவாக மாற்றும் தளத்தை பிளர்க்ஸ் ஏஐ, உருவாக்கி வருகிறது. இது முக்கியமான சூழல்களில் வேகமான மற்றும் துல்லியமான முடிவுகளை எடுக்க உதவும்,” என்றார்.
இந்த நிதி திரட்டல், பிளர்க்ஸ் ஏஐ, நிறுவனத்தின் வளர்ச்சிப் பயணத்தில் முக்கியமான மைல்கல்லாகக் கருதப்படுகிறது. இந்த முதலீடு, நிறுவனத்தின் அடிப்படை தொழில்நுட்பத்தை வலுப்படுத்தவும், பணியாளர்களை விரிவுபடுத்தவும், துறைமுகங்கள், கப்பல் கட்டும் தளங்கள், மீன்வள மேலாண்மை மற்றும் கடல் பாதுகாப்பு உள்ளிட்ட வணிகக் கடல்சார் பயன்பாடுகளுக்கான தயாரிப்புகளை மேம்படுத்தவும் பயன்படுத்தப்படும்.
அதேசமயம், பாதுகாப்புத் துறைக்கான திறன்களை மேலும் வலுப்படுத்தி, கடல்சார் நுண்ணறிவுக்கான தேவை அதிகரித்து வரும் சர்வதேச சந்தைகளிலும் நிறுவனம் தனது செயல்பாடுகளை விரிவுபடுத்தத் திட்டமிட்டுள்ளது.

