ஐஐடி மெட்ராசில் 'பரம் சக்தி’ சூப்பர் கம்ப்யூட்டர் அமைப்பு அறிமுகம்!
இந்தியாவில் சொந்தமாக வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட 3.1 பெட்டாபிளாப் ஆற்றல் கொண்ட 'பரம் சக்தி' சூப்பர் கம்ப்யூட்டர் அமைப்பை, மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப செயலாளர் எஸ்.கிருஷ்ணன் மெட்ராஸ் ஐஐடியில் அறிமுகம் செய்தார்.
இந்தியாவில் சொந்தமாக வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட 3.1 பெட்டாபிளாப் ஆற்றல் கொண்ட 'பரம் சக்தி' (Param Shakthi) சூப்பர் கம்ப்யூட்டர் அமைப்பை மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப செயலாளர் எஸ்.கிருஷ்ணன் மெட்ராஸ் ஐஐடியில் அறிமுகம் செய்தார்.
இந்தியாவிலேயே முழுவதும் உருவாக்கப்பட்ட சி- டிஏசி ருத்ரா வரிசை சர்வர்கள் கொண்டு, ஓபன் சோர்ஸ் இயங்குதளம் மூலம் இயங்கும் இந்த மென்பொருள் அமைப்பு, தொழில்நுட்ப தற்சார்பிற்கான இந்தியாவின் ஈடுபாட்டை உணர்த்துகிறது.
இதன் 3.1 பெட்டாபிளாப் (petaflop) ஆற்றல், நொடிக்கு 3.1 குவாட்ரில்லியன் கணக்குகளை போடும் திறனை குறிக்கிறது. இந்திய கல்வி சூழலில் உள்ள மிகவும் சக்தி வாய்ந்த கம்ப்யூட்டர் அமைப்புகளில் ஒன்றாக அமைகிறது.

ஆய்வாளர்கள் மிகவும் சிக்கலான பிரச்சனைகளுக்கு வேகமாக துல்லிய தீர்வு காண இந்த அளவுக்கு ஆற்றல் அவசியம். இது பல ஆண்டு சோதனை பணிகளை குறைக்கும். மேலும், இந்தியா ஏரோஸ்பேஸ், மெட்டிரியல்ஸ், காலநில மாதிரி, மருந்து கண்டுபிடிப்பு உள்ளிட்ட துறைகளில் சர்வதேச அளவில் போட்டியிட உதவும்.
என்.எஸ்.எம் பரம் சக்தியின் கீழ், பரம் ருத்ரா சூப்பர் கம்ப்யூட்டிங் தொகுப்பு, 24 மணி நேர மின்சக்திக்கான உள்கட்டமைப்பு ஒருங்கிணைப்பு, மேம்பட்ட கூலிங் அமைப்பு உள்ளிட்டவற்றை கொண்டுள்ளது. மேம்பட்ட கம்ப்யூட்டிங் வளர்ச்சிக்கான மையம் (C-DAC), உருவாக்கிய இந்த அமைப்பு தேசிய சூப்பர் கம்ப்யூட்டிங் திட்டத்தின் கீழ் நிதி பெற்றுள்ளது.
இந்த சூப்பர் கம்ப்யூட்டர் அமைப்பை, ஐஐடி மெட்ராஸ் இயக்குனர் வி.காமகோடி முன்னிலையில் மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப செயலாளர் எஸ்.கிருஷ்ணன், ஐஐடி மெட்ராசில் அறிமுகம் செய்தார். C-DAC இயக்குனர் ஜெனரல் இ.மகேஷ், அமைச்சக உயர் அதிகாரிகள், பேராசிரியர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
“தேசிய சூப்பர் கம்ப்யூட்டிங் திட்டத்தில் பல்வேறு வகை பயன்பாடுகள், திட்டங்களை ஊக்குவித்து வருகிறோம். ஏற்கனவே பல்வேறு கல்வி நிறுவனங்களில் 37 சூப்பர் கம்ப்யூட்டர்கள் நிறுவப்பட்டுள்ள நிலையில், மேலும் பல நிறுவப்பட உள்ள நிலையில், இந்த முயற்சிகள் இந்தியாவின் ஆய்வு மற்றும் புதுமையாக்க சூழலுக்கு உதவும்,” என்று மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப செயலாளர் எஸ்.கிருஷ்ணன் தெரிவித்தார்.
நவீன ஆய்வுகளில் அதி திறன் கம்ப்யூட்டிங் அமைப்புகளின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியவர் இந்த புதிய அமைப்பு ஏரோஸ்பேஸ் பொறியியல் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் கணக்கிடும் திறனை அதிகரிக்கும், என்றும் அவர் தெரிவித்தார்.

மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் நாட்டில் கம்ப்யூட்டிங் தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் டிஜிட்டல் புரட்சிக்கு பல ஆண்டுகளாக வழிகாட்டி வருகிறது. அனைத்து மைய நிதி பெறும் கல்வி நிறுவனங்களுக்கு இணைப்பு வசதி வழங்கும் தேசிய அறிவு வலைப்பின்னல் இத்தகய திட்டங்களில் ஒன்று,” என ஐஐடி மெட்ராஸ் யக்குனர் வி.காமகோடி தெரிவித்தார்.
ருத்ரா மேடையை உருவாக்கும் பயணம் பற்றி பகிர்ந்து கொண்ட C-DAC இயக்குனர் ஜெனரல் இ.மகேஷ் இந்தியாவில் உருவாக்கப்பட்ட கம்ப்யூட்டர் அமைப்புகளை ஆய்வாளர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும், என கேட்டுக்கொண்டார்.
Edited by Induja Raghunathan

