‘இந்தியாவின் மின்சார வாகன மாற்றம், நிலையான தொழில்துறை சூழலை உருவாக்கும்’ - அமைச்சர் பூபேந்தர் யாதவ்
இந்தியாவின் மின்சார வாகனப் பயன்பாட்டு மாற்றம் என்பது, உற்பத்தியை ஊக்குவித்து, பசுமை வேலைவாய்ப்புகளை உருவாக்கி, 2047-ஆம் ஆண்டிற்குள் 'விக்ஷித் பாரத்' என்ற தொலைநோக்குப் பார்வையை ஆதரிக்கும் ஒரு நிலையான தொழில்துறை சூழலமைப்பைக் கட்டமைப்பதாகும் என்று சுற்றுச்சூழல் அமைச்சர் பூபேந்தர் யாதவ் கூறினார்.
இந்தியாவின் மின்சார வாகன (EV) மாற்றம் என்பது ஒரு தொழில்நுட்பத்தை மற்றொரு தொழில்நுட்பத்தால் மாற்றுவது மட்டுமல்ல; உற்பத்தித் துறையை வலுப்படுத்தி, பசுமை வேலைவாய்ப்புகளை உருவாக்கி, 2047-க்குள் பிரதமர் நரேந்திர மோடி முன்வைத்துள்ள ‘விக்சித் பாரத்’ இலக்கை அடைய உதவும் நிலையான தொழில்துறை சூழலை உருவாக்குவதே இதன் நோக்கம் என்று மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் பூபேந்தர் யாதவ் தெரிவித்துள்ளார்.
அசோசேம் (ASSOCHAM) ஏற்பாடு செய்திருந்த “மின்சார இயக்கம்: விக்சித் பாரத்திற்கான இந்தியாவை மின்சார இயக்க மையமாக உருவாக்குதல்” என்ற மாநாட்டின் தொடக்க விழாவில் அவர் பேசினார்.
அப்போது பேசிய யாதவ், “மின்சார இயக்கத்தை விரைவுபடுத்தும் இந்தக் காலகட்டத்தில், பசுமை வளர்ச்சி, வலுவான உள்கட்டமைப்பு, வெளிப்படையான நிர்வாகம் மற்றும் நீண்டகால சுற்றுச்சூழல் நிலைத்தன்மையை உறுதி செய்யும் சுற்றுச்சுழல் பொருளாதாரம் ஆகியவற்றில் நமது கவனம் தொடர்ந்து இருக்க வேண்டும்” என்று கூறினார்.
மேலும், சுற்றுச்சூழல் அனுமதி நடைமுறைகளை எளிமைப்படுத்துதல், PARIVESH தளத்தின் மூலம் அனுமதி வழங்கும் செயல்முறைகளை டிஜிட்டல் மயமாக்குதல், ஒழுங்குமுறை இணக்கத் தேவைகளை சீரமைத்தல் மற்றும் தொழில் செய்வதற்கான எளிமையை மேம்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு சீர்திருத்தங்களை அரசு மேற்கொண்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
“சுற்றுச்சூழல் பாதுகாப்பு தரங்களை எந்த வகையிலும் பாதிக்காமல், இந்த சீர்திருத்தங்கள் முதலீடுகளை வேகமாக ஈர்க்கவும், பொறுப்பான வளர்ச்சியை உறுதி செய்யவும் உதவுகின்றன” என்று அவர் கூறினார்.
தொழில்துறை நிறுவனங்கள், கொள்கை வடிவமைப்பாளர்கள் மற்றும் கல்வி, ஆராய்ச்சி நிறுவனங்கள் இணைந்து புதுமைகளை மையமாகக் கொண்ட சூழலை உருவாக்க வேண்டும் என்றும், அதன் மூலம் இந்தியாவை தூய்மையான இயக்கத் தொழில்நுட்பங்களுக்கான உலகளாவிய மையமாக மாற்ற முடியும் என்றும் யாதவ் வலியுறுத்தினார்.
“சுற்றுச்சூழலும் பொருளாதாரமும் ஒன்றோடொன்று இணைந்து முன்னேற வேண்டும். கூட்டு முயற்சிகள் மூலம் நிலையான உற்பத்தி, பசுமை இயக்கம் மற்றும் காலநிலை பொறுப்புணர்வுள்ள வளர்ச்சியில் இந்தியா உலகின் முன்னணி நாடாக உருவெடுக்க முடியும்” என்று அவர் தெரிவித்தார்.
