‘உலகின் மிக வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரம் மற்றும் முதலீட்டுக்கு உகந்த நாடு இந்தியா’ - நிர்மலா சீதாராமன்
இந்தியாவின் மிகப்பெரிய சந்தை அளவு, நீடித்த பொருளாதார வளர்ச்சி, இளம் மக்கள் தொகை, அதிகரித்து வரும் நுகர்வு மற்றும் வேகமாக வளர்ந்து வரும் மூலதனச் சந்தைகள் ஆகியவை கனடா முதலீட்டாளர்களுக்கு மிகச் சிறந்த வாய்ப்புகளை வழங்குவதாகக் கூறினார்.
உலகின் வேகமாக வளர்ந்து வரும் முக்கியப் பொருளாதாரமாக இந்தியா திகழ்வதாகவும், நீண்டகால முதலீட்டாளர்களுக்கு மிகப்பெரிய முதலீட்டு வாய்ப்புகளை வழங்குவதாகவும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
கனடாவின் டொரன்டோவில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த முக்கிய தொழிலதிபர்களிடையே பேசிய அவர், இந்தியாவின் மிகப்பெரிய சந்தை அளவு, நீடித்த பொருளாதார வளர்ச்சி, இளம் மக்கள் தொகை, அதிகரித்து வரும் நுகர்வு மற்றும் வேகமாக வளர்ந்து வரும் மூலதனச் சந்தைகள் ஆகியவை கனடா முதலீட்டாளர்களுக்கு மிகச் சிறந்த வாய்ப்புகளை வழங்குவதாகக் கூறினார்.

Credit: Nihar Apte
இது தொடர்பாக நிர்மலா சீதாராமன் கூறியதாவது,
இந்தியாவின் பொருளாதார மாற்றம் நீண்டகால அடிப்படையிலானது. வேகமான நகரமயமாக்கல், வளர்ந்து வரும் நடுத்தர வர்க்கம் மற்றும் உலகத் தரத்திலான டிஜிட்டல் உள்கட்டமைப்பு ஆகியவை பொருளாதாரத்தின் கிட்டத்தட்ட அனைத்துத் துறைகளிலும் புதிய வாய்ப்புகளை உருவாக்கி வருகின்றன, என்றார். மேலும்,
”இந்தியாவின் டிஜிட்டல் கட்டமைப்பு நிதி மற்றும் வர்த்தக சேவைகளை மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்கான செலவைக் கணிசமாகக் குறைத்துள்ளது. பரிவர்த்தனை அளவைப் பொறுத்தவரை, UPI உலகின் மிகப்பெரிய நிகழ்நேர பணப்பரிவர்த்தனை அமைப்பாகத் திகழ்கிறது. நிதி உள்ளடக்கம், செயல்திறன் மற்றும் புதுமையை மேம்படுத்துவதில் இது முக்கியப் பங்காற்றுகிறது, என்றார்.
பணம் செலுத்தும் சேவைகள் மட்டுமின்றி, அடுத்த தலைமுறை டிஜிட்டல் நிதி உள்கட்டமைப்பை உருவாக்குவதிலும் இந்தியாவுக்கும் கனடாவின் வங்கிகள், ஃபின்டெக் நிறுவனங்கள் மற்றும் ஒழுங்குமுறை அமைப்புகளுக்கும் இடையே குறிப்பிடத்தக்க ஒத்துழைப்பு வாய்ப்புகள் உள்ளன.
இந்தியா-கனடா பொருளாதார உறவில் கனடாவில் உள்ள இந்திய வம்சாவளியினர் இரு நாடுகளுக்கும் இடையிலான முக்கியமான பாலமாக உள்ளனர். அவர்கள் கனடாவின் நிறுவனங்களின் நிர்வாகக் குழுக்கள், பேக் ஸ்ட்ரீட்டின் வர்த்தகத் தளங்கள் மற்றும் ஓய்வூதிய நிதிகளின் இடர் மேலாண்மைக் குழுக்கள் என பல முக்கிய நிலைகளில் உள்ளனர்.
இந்தியா-கனடா இருதரப்பு உறவுகள் சமீப காலங்களில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை கண்டுள்ளன. பகிர்ந்து கொள்ளப்படும் ஜனநாயக மற்றும் பன்மைத்துவ மதிப்புகள், விரிவடைந்து வரும் பொருளாதார உறவுகள், உயர்மட்ட சந்திப்புகள் மற்றும் மக்களிடையே வலுவான தொடர்புகள் இந்த உறவுக்கு ஆதரவாக உள்ளன.
2025 ஜூன் மாதம் ஜி7 மாநாட்டின் போது பிரதமர் நரேந்திர மோடியும் கனடா பிரதமர் மார்க் கார்னியும் இருதரப்பு உறவுகளை மீண்டும் வலுப்படுத்துவதற்கு எடுத்த முடிவு, இரு நாடுகளின் எதிர்கால நோக்குடைய மூலோபாயக் கூட்டாண்மைக்கு அடித்தளமிட்டது. கனடா பிரதமரின் இந்த ஆண்டு இந்தியப் பயணத்தின்போது CEPA வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் தொடங்கப்பட்டதும், Cameco நிறுவனத்துடன் 2.6 பில்லியன் கனடிய டாலர் மதிப்பிலான யுரேனியம் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டதும் இந்த உறவை மேலும் முன்னெடுத்துள்ளன.
மேலும், புதுப்பிக்கப்பட்ட மூலோபாயக் கூட்டாண்மைக்கான விரிவான கொள்கை அடிப்படையாக ‘வசுதைவ குடும்பகம்’ ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. 2030ஆம் ஆண்டுக்குள் இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு வர்த்தகத்தை 70 பில்லியன் கனடிய டாலராக இருமடங்குக்கும் அதிகமாக உயர்த்துவதற்கான இலக்கும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இரு நாடுகளின் கூட்டாண்மை தற்போது முதலீட்டு மூலதனப் பரிவர்த்தனைகளைத் தாண்டி, ஆழமான நிறுவன ரீதியான ஒத்துழைப்பை நோக்கி நகர்ந்து வருகிறது. நவீன நிதிக் கூட்டாண்மையில் மூலதனச் சந்தைகள் ஒரு பரிமாணம் மட்டுமே என்றும், இந்தியா-கனடா இடையே விரிவான பொருளாதார மற்றும் நிதி ஒத்துழைப்புக்கு இன்னும் அதிக வாய்ப்புகள் உள்ளன, என நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

