‘2032க்குள் இந்தியாவில் மின்சார வாகன விற்பனை 12 மடங்கு உயர்ந்து 30மில். யூனிட்களை எட்டும்’ - அறிக்கையில் தகவல்!
2025ஆம் ஆண்டில் இந்தியாவின் மொத்த வாகன விற்பனையில் மின்சார வாகனங்களின் பங்கு 9.5 சதவீதமாக உயர்ந்துள்ளது. 2024ஆம் ஆண்டில் இது 8.1 சதவீதமாக இருந்தது. இது இந்திய வாகனத் துறை மின்மயமாக்கலுக்கான மாற்றத்தை தொடர்ந்து நோக்கிச் செல்கிறது என்பதற்கான முக்கிய அறிகுறியாகக் கருதப்படுகிறது.
2032ஆம் ஆண்டுக்குள் இந்தியாவின் மின்சார வாகன (EV) சந்தை 12 மடங்கு வளர்ச்சி பெற்று 3.04 கோடி யூனிட்களை எட்டும் என்று இந்திய எரிசக்தி சேமிப்பு கூட்டணி (IESA) மற்றும் Customized Energy Solutions இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கை தெரிவித்துள்ளது.
அந்த அறிக்கையின்படி, தேசிய மின்சார வாகன இலக்கு (NEV) அடிப்படையிலான அதிவேக வளர்ச்சி சூழலில், இந்திய மின்வாகனச் சந்தை வேகமாக விரிவடையும். 2024ஆம் ஆண்டில் 20 லட்சம் யூனிட்களாக இருந்த ஆண்டு விற்பனை, 2025ஆம் ஆண்டில் 26 லட்சம் யூனிட்களாக உயர்ந்துள்ளது. இது சுமார் 26 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
எரிபொருள் விலை உயர்வு காரணமாக மின்சார வாகனங்களின் செலவுக் போட்டித்திறன் அதிகரித்துள்ளது. மேலும், அதிகளவில் அறிமுகமாகும் எஸ்யூவி (SUV) மாடல்கள் மற்றும் புதிய தயாரிப்புகள் நுகர்வோர் மத்தியில் மின்சார வாகனங்களின் வரவேற்பையும் சந்தை வளர்ச்சியையும் அதிகரித்துள்ளதாக அறிக்கை கூறுகிறது.
2025ஆம் ஆண்டில் இந்தியாவின் மொத்த வாகன விற்பனையில் மின்சார வாகனங்களின் பங்கு 9.5 சதவீதமாக உயர்ந்துள்ளது. 2024ஆம் ஆண்டில் இது 8.1 சதவீதமாக இருந்தது. இது இந்திய வாகனத் துறை மின்மயமாக்கலுக்கான மாற்றத்தை தொடர்ந்து நோக்கிச் செல்கிறது என்பதற்கான முக்கிய அறிகுறியாகக் கருதப்படுகிறது.

2025ஆம் ஆண்டில் விற்பனையான மின்சார வாகனங்களில் இருசக்கர வாகனங்கள் (E2W) 60.1 சதவீத பங்குடன் முதலிடத்தில் உள்ளன. மூன்றுசக்கர வாகனங்கள் (E3W) 31.6 சதவீத பங்கைப் பெற்றுள்ளன. இந்த இரண்டு பிரிவுகளும் சேர்ந்து, விற்பனையான சுமார் 25 லட்சம் மின்சார வாகனங்களில் 91 சதவீதத்திற்கும் அதிகமான பங்கைக் கொண்டுள்ளன.
அதே நேரத்தில், மின்சார கார்கள் மற்றும் பிற நான்கு சக்கர வாகனங்களின் (E4W) சந்தைப் பங்கு 7.7 சதவீதமாக உயர்ந்துள்ளது. இது மின்சார பயணியர் வாகனங்களின் பயன்பாடு வேகமாக அதிகரித்து வருவதை காட்டுகிறது. மின்சார பேருந்துகள் மொத்த விற்பனையில் 0.2 சதவீதமும், மின்சார லாரிகள் 0.4 சதவீதமும் பங்களித்துள்ளன. அரசின் கொள்முதல் திட்டங்கள் மற்றும் வணிகப் போக்குவரத்து நிறுவனங்களின் உறுதிப்பாடுகள் இதற்கு முக்கிய காரணமாகக் கூறப்பட்டுள்ளன.
மின்சார வாகனங்களின் பயன்பாடு அதிகரிப்பதோடு, பேட்டரிகளின் சராசரி திறனும் உயர்ந்து வருவதால், மொத்த பேட்டரி தேவை 2025ஆம் ஆண்டின் 19 கிகாவாட் மணி (GWh) அளவிலிருந்து 2032ஆம் ஆண்டில் 362 ஜிகாவாட் மணியாக உயரும், என்று அறிக்கை கணித்துள்ளது.
2024ஆம் ஆண்டில் 13 ஜிகாவாட் மணியாக இருந்த பேட்டரி தேவை, 2025ஆம் ஆண்டில் சுமார் 19 கிகாவாட் மணியாக உயர்ந்துள்ளது. இதில் நான்கு சக்கர மின்சார வாகனங்கள் 40 சதவீத பேட்டரி தேவையுடன் முதலிடத்தில் உள்ளன. மூன்றுசக்கர வாகனங்கள் 27 சதவீதமும், இருசக்கர வாகனங்கள் 23 சதவீதமும் பங்காற்றுகின்றன.
விற்பனையில் குறைந்த பங்கு மட்டுமே இருந்தாலும், பெரிய அளவிலான பேட்டரிகள் பயன்படுத்தப்படுவதால் மின்சார பேருந்துகள் மொத்த பேட்டரி தேவையில் 7.8 சதவீத பங்களிப்பைக் கொண்டுள்ளன. மின்சார இலகு, நடுத்தர மற்றும் கனரக சரக்கு வாகனங்களின் பயன்பாடு அதிகரித்து வருவதால், லாரிகளின் பேட்டரி தேவை 1.9 சதவீதமாக பதிவாகியுள்ளது.
இந்தியாவின் மின்சார வாகன உதிரிபாக சந்தையின் மதிப்பு 2025ஆம் ஆண்டில் ரூ.41,000 கோடியாக இருந்தது. வழக்கமான வளர்ச்சி (BAU) சூழலில், இது 2032ஆம் ஆண்டில் ரூ.3,02,000 கோடியாக உயரும் என்றும், இந்தக் காலகட்டத்தில் ஆண்டுக்கு சராசரியாக 38 சதவீத கூட்டு வளர்ச்சி விகிதம் (CAGR) பதிவாகும், என்றும் அறிக்கை தெரிவித்துள்ளது.
2025ஆம் ஆண்டில் உதிரிபாக சந்தையில் பேட்டரி தொகுப்புகள் 52 சதவீத பங்குடன் ஆதிக்கம் செலுத்துகின்றன. அதனைத் தொடர்ந்து மோட்டார்கள் 22 சதவீதம், இன்வெர்ட்டர்கள் 12 சதவீதம், பேட்டரி மேலாண்மை அமைப்புகள் (BMS) 11 சதவீதம் மற்றும் DC-DC கன்வெர்ட்டர்கள் 3 சதவீத பங்கைக் கொண்டுள்ளன.
இந்தியாவில் மோட்டார் மற்றும் கட்டுப்பாட்டு அமைப்புகளின் உள்நாட்டு உற்பத்தி தற்போது 30 முதல் 40 சதவீதம் வரை மட்டுமே உள்ளது. இன்வெர்ட்டர் உற்பத்திச் சங்கிலி இன்னும் பெருமளவில் இறக்குமதியைச் சார்ந்துள்ளது. அதேபோல், BMS மென்பொருள் திறன் மேம்பட்டிருந்தாலும், அதற்கான வன்பொருள் உள்நாட்டு உற்பத்தி இன்னும் பின்தங்கிய நிலையில் இருப்பதாக அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.
2025 முதல் 2032 வரை உருவாகவுள்ள ரூ.2.61 லட்சம் கோடி மதிப்பிலான கூடுதல் சந்தை வாய்ப்பில், பவர் எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் டிரைவ்டிரெய்ன் ஒருங்கிணைப்பு துறைகளில் உள்நாட்டு உற்பத்தித் திறனை முன்கூட்டியே உருவாக்கும் நிறுவனங்களே அதிக பலன் அடைவார்கள் என்றும் அந்த அறிக்கை குறிப்பிட்டுள்ளது.

