'இந்தியாவின் ஐஐடி கிராமம்' - வருடாவருடம் நூற்றுக்கணக்கான ஐஐடியன்களை உருவாக்கும் இந்த கிராமம் எங்கு இருக்கிறது?
ஐஐடி 2025 தேர்வு முடிவுகள் வெளியாகி நாடு முழுவதும் கொண்டாட்டங்களையும், மாணவர்களுக்கு புதிய லட்சியங்களை உருவாக்கியுள்ள நிலையில், ஒரு கிராமம் அசாத்திய வெற்றியால் தனித்து நிற்கிறது. கிட்டத்தட்ட 30 ஆண்டுகளாக எண்ணற்ற ஐஐடியன்களை உருவாக்கி 'ஐஐடி தொழிற்சாலை' என்று பெயர் பெற்ற கிராமத்தை பற்றி தெரியுமா?
ஐஐடி 2025 தேர்வு முடிவுகள் வெளியாகி நாடு முழுவதும் கொண்டாட்டங்களையும், மாணவர்களுக்கு புதிய லட்சியங்களையும் உருவாக்கியுள்ள நிலையில், ஒரு கிராமமே அசாத்திய வெற்றியால் தனித்து நிற்கிறது. ஏனெனில், பீகாரில் உள்ள பட்வா டோலி கிராமத்தை சேர்ந்த 40 மாணவர்கள், இந்த ஆண்டு மதிப்புமிக்க ஐஐடி நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர். ஆனால், இது ஒன்றும் புதிதல்ல... கிட்டத்தட்ட 30 ஆண்டுகளாக எண்ணற்ற ஐஐடியன்களை உருவாக்கி 'ஐஐடி தொழிற்சாலை', 'ஐஐடி கிராமம்' என்று பெயர் பெற்றுள்ளது இந்த கிராமம்.
இந்த செய்தி ஆனது, ஜோஹோ நிறுவனரான ஸ்ரீதர் வேம்பு-வை வெகுவாக கவர்ந்துள்ளது. அவரது எக்ஸ் ஊடகப் பதிவில், பீகாரில் திறமைக்குப் பஞ்சமில்லை என்றும், ஆர்வமுள்ள தொழில்முனைவோர்களே இதை "கவனித்தில் கொள்ளுங்கள்" என்றும் வலியுறுத்தி உள்ளார்.

"ஐஐடி தொழிற்சாலை"- ஆன கிராமம்...
பீகாரின் கயா மாவட்டத்தில் உள்ள பட்வா டோலி கிராமத்திலிருந்து ஆண்டுத்தோறும் எண்ணற்ற மாணவர்கள் ஐஐடி-க்கு படையெடுக்கின்றனர். கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்கும் மேலாக, அக்கிராமத்து மாணவர்கள் ஐஐடி கனவை நிறைவேற்றி வருகின்றனர். சுமார் 20,000 மக்கள் வசிக்கும் இந்த கிராமம், ஒரு காலத்தில் ஜவுளி நெசவுக்குப் பெயர் பெற்று, "பீகாரின் மான்செஸ்டர்" என்று அழைக்கப்பட்டது. இப்போது ஒவ்வொரு ஆண்டும் டஜன் கணக்கான பொறியாளர்களை உருவாக்குவதில் குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற்றதன் காரணமாக "ஐஐடியர்களின் கிராமம்" என்று அழைக்கப்படுகிறது.
ஒவ்வொரு வீட்டிலும் குறைந்தது ஒரு பொறியியல் பட்டதாரியாவது இருக்கின்றனர். பெரும்பாலான குடும்பங்கள் இன்னும் நெசவைச் சார்ந்து உள்ளன. ஆனால், அவர்களின் குழந்தைகள் கல்வி மூலம் புதிய உயரங்களை எட்டி வருகின்றனர்.
மாற்றத்திற்கு வித்திட்ட முதல் ஐஐடி தேர்ச்சி!
1991ம் ஆண்டு, அக்கிராமத்தை சேர்ந்த ஜிதேந்திர பட்வா, ஐஐடி நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற்று, அக்கிராமத்திலிருந்து ஐஐடிக்கு சென்ற முதல் மாணவரானார். அதுவே, கிராமத்தின் இன்றைய மாற்றத்திற்கான தொடக்கமாகும். அவரது வெற்றி கிராமத்தில் உள்ள மாணவர்களை ஈர்த்தது. அவரை போன்றே ஐஐடியில் படிப்பதை இலக்காக கொண்டு, அவரை இஸ்பிரேஷன் நாயகானக்கினர்.
அதன் விளைவாய், இன்று பல ஆண்டுகள் கழித்தும் அக்கிராமத்து மாணவர்கள் அவர் அமைத்து வைத்த பாதையில் நடந்து வருகின்றனர். தற்போது அமெரிக்காவில் வசித்து வரும் ஜிதேந்திரா, 'விரிக்ஷ் சன்ஸ்தான்' என்ற தன்னார்வ அமைப்பின் மூலம் அவரது கிராமத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு ஆதரவளித்து வருகிறார். மாணவர்களுக்கு கல்வி மீது ஆர்வம் இருப்பினும், பொருளாதார சிக்கல் பின்னடைவாகவே உள்ளது.
பொருளாதாரத் தடைகள் கல்விக்கான அணுகலைத் தடுக்காமல் இருப்பதை உறுதி செய்வதற்காக, அக்கிராமத்தின் முன்னாள் ஐஐடி மாணவர்களால் 2013ம் ஆண்டு "விருக்ஷா வேத சங்கிலி" எனும் ஒரு நூலக மாதிரி உருவாக்கப்பட்டது. அவர்கள் JEE முதன்மைத் தேர்வுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு இலவசப் பயிற்சியை வழங்குகிறார்கள்.

Photo Courtesy: The Hindu
நுழைவுத் தேர்வுக்கு தேவையான புத்தகங்களை வழங்குவதுடன், டெல்லி மற்றும் மும்பையைச் சேர்ந்த தன்னார்வ ஆசிரியர்களால் ஆன்லைன் வகுப்புகள் மூலம் இலவசக் கல்வியையும் வழங்குகின்றனர். தரமான கல்வி கிடைக்காத நிலையில், நிதி ரீதியாக நலிவடைந்த மாணவர்களின் தேவைகளை விருக்ஷா வேத சங்கிலி நிவர்த்தி செய்கிறது.
"சில குடும்பங்களால் அவர்களது குழந்தைகளை கிராமத்திற்கு வெளியே படிக்கவைக்க அனுப்ப முடியவில்லை. அவர்களுக்கு நிதி வசதி இல்லை. அதனால்தான் நாங்கள் விருக்ஷ் வேத சங்கிலியைத் தொடங்கி ஒரு நூலக மாதிரியை உருவாக்கினோம், அதில் நிதி ரீதியாக பலவீனமான குழந்தைகளுக்கு இலவச கல்வியை வழங்குகிறோம்," என்று விருக்ஷ் வேத சங்கிலித் தலைவர் துபேஷ்வர் பிரசாத் கடந்த ஆண்டு ANI-க்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார்.
பட்வாடோலி கிராமத்தில் இருந்து இந்த ஆண்டு ஜேஇஇ தேர்வில் தேர்ச்சி பெற்ற 40பேரில், முதன்மை மதிப்பெண் பெற்றவர்கள்: சரண்யா- 99.64 சதவீதம், அலோக்- 97.7 சதவீதம், சௌர்யா- 97.53 சதவீதம், யாஷ் ராஜ்- 97.38 சதவீதம், சுபம்- 96.7 சதவீதம், பிரதிக்- 96.35 சதவீதம், கேதன்- 96.00 சதவீதம், நிவாஸ்- 95.7 சதவீதம், கௌரிகா யாதவ்- 95.1 சதவீதம், சாகர் குமார்- 94.8 சதவீதம் ஆகியோர் நன்சதவீதத்தில் தேர்ச்சி பெற்று கிராமத்திற்கு பெருமைத் தேடி தந்துள்ளனர்.
அவர்களில் பெரும்பாலோர் விருக்ஷா சன்ஸ்தானில் படித்தவர்களாகும். இந்த மாணவர்களின் வெற்றி, அவர்களது குடும்பங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியையும், சமூகத்திற்கு பெருமையையும் அளித்துள்ளன. ஆனால், அவர்களின் கதைகள் கல்வியில் வெற்றியைப் பற்றியது மட்டுமல்ல, இடர்களை எப்படி சமாளிப்பது என்பதை பற்றியதாகும்.

2025-இல் ஐஐடி மெயின் தேர்வில் தேர்ச்சி பெற்ற பட்வா டோலி கிராமத்தைச் சேர்ந்த மாணவர்கள்
இந்த ஆண்டு கிராமத்தை சேர்ந்த 40 பேர் ஐஐடி நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ள செய்தி ஆனது, இந்தியாவின் முன்னணி மென்பொருள் நிறுவனமான ஜோஹோ நிறுவனரான ஸ்ரீதர் வேம்பு-வை வெகுவாக கவர்ந்துள்ளது. இது குறித்து அவரது எக்ஸ் சமூக ஊடகப் பதிவில்,
"பீகாரில் எவ்வளவு திறமைசாலிகள் இருக்கிறார்கள் என்பதை இந்த செய்தி காட்டுகிறது. ஆர்வமுள்ள தொழில்முனைவோர்களே, நீங்கள் 20 ஆண்டுகளில் தீவிரமாக வெற்றிபெற விரும்பினால், பீகாரில் உள்ள இளைஞர் திறமைக் குழுவை கவனியுங்கள்," என்று பதிவிட்டிருந்தார்.
அவரது பதிவிற்கு கருத்து தெரிவித்த ஒருவர், "பீகாரி இளைஞர்கள் 'தங்கச் சுரங்கம்'" என்று கூறினார். மற்றொருவர், மாநிலத்தில் ஒரு ஜோஹோ அலுவலகத்தை அமைக்க அவரை வலியுறுத்தினார். இன்னொரு பயனர், "சிறந்த திறமைசாலிகள், ஒரு வாய்ப்புக்காகவும் சில பயிற்சிக்காகவும் காத்திருக்கிறோம். மிகவும் கடின உழைப்பாளிகள்..." என்று பதிவிட்டிருந்தார்.
சமூகத்தால் வழிநடத்தப்படும் தொடர்ச்சியான முயற்சிகளும், கல்விக்கு அளிக்கப்படும் முக்கியத்துவமும், ஒரு பிராந்தியத்தின் எதிர்காலத்தை எவ்வாறு மாற்றும் என்பதற்கு இந்த கிராமத்தின் வெற்றி ஓர் உதாரணமாகும்.

