உலகளவில் 2 டெர்பி வென்றுள்ள ‘இந்தியாவின் டாப் பெண் ஜாக்கி’ சில்வா ஸ்டோராய்!
உலகளவில் இரண்டு டெர்பி வென்றுள்ள ஒரே பெண் ஜாக்கி சில்வா ஸ்டோராய், இந்தியாவில் குதிரையேற்ற விளையாட்டுப் பிரிவு பற்றிய கண்ணோட்டத்தை விரிவாக பகிர்ந்துகொண்டிருக்கிறார்.
உலகளவில் இரண்டு டெர்பி வென்றுள்ள ஒரே பெண் ஜாக்கி சில்வா ஸ்டோராய்.
இந்தியாவின் முன்னணி குதிரையேற்ற பள்ளியில் தலைமைப் பொறுப்பில் இருக்கிறார். இந்தியாவில் இந்த விளையாட்டு அதிக முக்கியத்துவம் பெற்று வருகிறது என்கிறார் சில்வா.
சில்வா இத்தாலியில் பிறந்த இந்தியர். இவர் பெங்களூரு Embassy International Riding School (EIRS) இயக்குநர். இருபதாண்டுகளுக்கும் மேலாக இந்தப் பள்ளியுடன் இணைந்து செயல்பட்டு வருகிறார். இங்கு பணியாற்றிய சமயத்தில்தான் 2018ம் ஆண்டு ஆசிய விளையாட்டு போட்டியில் பதக்கம் வென்ற ஃபவுத் மிர்சாவின் வளர்ச்சியை கவனித்தார்.
கிட்டத்தட்ட இருபதாண்டுகளுக்குப் பிறகு 2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் குதிரையேற்ற விளையாட்டிற்குத் தேர்வான முதல் இந்திய வீரர் என்கிற பெருமை ஃபவுத் மிர்சாவிற்கு உண்டு. மிர்சாவிற்கு பெங்களூரு Embassy International Riding School ஆதரவளிக்கிறது.
இந்தியாவில் குதிரையேற்றப் பிரிவு, இந்த விளையாட்டு பற்றிய கண்ணோட்டம், இந்தியாவின் அடுத்த குதிரையேற்ற சாம்பியன்களுக்கான பயிற்சி என பல்வேறு விஷயங்களை தொலைபேசி வாயிலாக பகிர்ந்துகொண்டார் சில்வா.

சில்வா ஸ்டோராய் - இயக்குநர், Embassy International Riding School
இந்திய பெண் ஜாக்கி சில்வா ஸ்டோராய்
சமீபத்திய ஆண்டுகளில் குதிரையேற்ற விளையாட்டின் வளர்ச்சி மெச்சத்தக்க வகையில் இருப்பதாகத் தெரிவிக்கிறார் சிவா. இருப்பினும், வார்ம்பிளட் (Warmblood) குதிரைகள் பற்றாக்குறை போன்ற ஏராளமான சாவல்களும் இதில் இருப்பதாக சுட்டிக்காட்டுகிறார்.
“வார்ம்பிளட் குதிரைகள் வாங்கவேண்டுமானால் வெளிநாடுகளுக்கு சென்றுதான் வாங்க முடியும். அல்லது வெளிநாட்டில் வாங்கியவர்கள் விற்கும்போது வாங்கிக்கொள்ளலாம். இவற்றை வாங்குவது அத்தனை எளிதல்ல,” என்கிறார்.

இந்த குதிரைகளுக்கு எளிதாக பயிற்சியளிக்கலாம். அமைதியான சுபாவம் கொண்டது. சில ஆண்டுகளுக்கு முன்பு EIRS இந்த வகை குதிரைகளை இனப்பெருக்கம் செய்யத் தொடங்கியது. தற்போது இந்த குதிரைகளுக்கு நான்கு முதல் ஐந்து வயதாகிவிட்டன. குதிரைப்பந்தயம் நடக்கும் இடத்திற்குள் சீறிப்பாய இவை தயாராகிவிட்டன.
“இந்த விளையாட்டில் வளர்ச்சியடைய அதிக எண்ணிக்கையில் வார்ம்பிளட் குதிரைகள் அவசியம். இவற்றை EIRS இனப்பெருக்கம் செய்யத் தொடங்கியிருக்கிறது. இதுபோன்ற முயற்சியை மற்றவர்களும் எடுக்கத் தொடங்கினால் பந்தயத்திற்கு அதிக குதிரைகள் கிடைக்கும். புரொஃபஷனல் ரீதியாக இந்த விளையாட்டைக் கொண்டு செல்ல இப்படிப்பட்ட முயற்சி உதவும். நல்ல குதிரைதான் குதிரைப்பந்தய வீரருக்கு முக்கியம்,” என்கிறார் சில்வா.
வார்ம்பிளட் குதிரைகளுக்கு இவ்வளவு தட்டுப்பாடு இருந்தாலும்கூட குழந்தைகள் குதிரையேற்ற விளையாட்டில் கலந்துகொள்ள ஊக்குவிக்கும் வகையில் பெற்றோர் அதிக தொகையை செலவிடவும் தயாராக இருக்கின்றனர், என்கிறார். 10-21 வயதுடையவர்களுக்காக ஆசிய விளையாட்டுகளும் ஜூனியர் தேசிய சாம்பியன்ஷிப் போட்டிகளும் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.
இளம் குதிரையேற்ற வீரர்கள் கடுமையாக உழைத்து, முழு ஈடுபாட்டுடன் முயற்சி செய்தால் நிச்சயம் வெற்றியடையமுடியும் என்று சில்வா நம்பிக்கையளிக்கிறார்.
பெங்களூருவில் பிறந்த 30 வயது ஃபவுத், கடுமையாக உழைத்த காரணத்தினாலேயே பதக்கம் வெல்லமுடிந்தது என்கிறார். 1982-ம் ஆண்டிற்குப் பிறகு ஆசிய விளையாட்டு போட்டிகளில் குதிரையேற்ற விளையாட்டுப் போட்டி பிரிவில் முதல் முறையாக பதக்கம் வென்றவர் என்கிற பெருமை இவருக்கு உண்டு.
இந்தியாவில் குதிரையேற்ற பயிற்சிப் பள்ளிகள் அதிகரித்து வருகின்றன. சென்னை, ஹைதராபாத், பாண்டிச்சேரி போன்ற முக்கிய நகரங்களில் சிறந்த பயிற்சிப் பள்ளிகள் செயல்படுகின்றன.
“குழந்தைகள் குதிரையேற்ற விளையாட்டின் அடிப்படைகளைக் கற்றுக்கொள்ள பயிற்சி பள்ளிகள் உதவுகின்றன. இந்த அடிப்படைப் பயிற்சிகளை முறையாகக் கற்றுக்கொண்டால் மட்டுமே இதில் கைதேர்ந்தவர்கள் ஆகமுடியும்,” என்கிறார் சில்வா.

EIRS இந்த அடிப்படை பயிற்சிகளை சரியாகக் கற்றுக்கொள்வதை வலியுறுத்துகிறது. ஒவ்வொரு மாணவரும் ஒரு கிரேட் முடித்த பிறகு மதிப்பீடு செய்யப்படுகிறது. அதன் பிறகே அவர்கள் அடுத்த கிரேடிற்கு அனுப்பப்படுகின்றனர்.
“மாணவர்கள் வெற்றி பெறவேண்டும் என்று பெற்றோர் அதிக அழுத்தம் கொடுக்கிறார்கள். பெற்றோர்களுக்கு பயிற்சியளிக்கவேண்டிய சூழல்தான் நிலவுகிறது. பெற்றோர்களின் நோக்கம் நல்லதாக இருப்பினும் இப்படிப்பட்ட அழுத்தத்தை அவர்கள் தரப்பில் கொடுக்கும்போது அது பலனளிப்பதில்லை. குழந்தைகள் தாமாகவே முன்வந்து கடினமாக உழைக்கும்போது நிச்சயம் உயரத்தை எட்டுவார்கள்,” என்கிறார் சில்வா.
துருக்கி, இரான், அப்கானிஸ்தான், பாகிஸ்தான் என பல்வேறு நாடுகள் பயணித்த பிறகு இந்தியா வந்தடைந்த சில்வா எத்தனையோ சமூக தடைகளைத் தகர்த்தெறிந்தார். 1993ம் ஆண்டு முதல் குதிரை பந்தயப் போட்டியில் புரொஃபஷனலாக பங்கேற்கத் தொடங்கினார். இவரது பயணம் இந்தியாவில் குதிரையேற்ற விளையாட்டில் ஈடுபட விரும்புவோருக்கு ஊக்கமளிக்கிறது.
சில்வா 1996ம் ஆண்டு முதல் குதிரையேற்ற விளையாட்டு பயிற்சிப் பள்ளியை நடத்தி வருவதுடன் இந்தியாவில் கிட்டத்தட்ட பத்தாண்டுகளுக்கு முன்பு Equestrian Premier League (EPL) தொடங்கப்படுவதற்கும் பொறுப்பேற்றுள்ளார். பெருந்தொற்று பரவல் காலத்திலிருந்து இதன் கிளப் எண்ணிக்கை 20-க்கும் மேல் அதிகரித்துள்ளது.
முன்னாள் ஜாக்கியான சில்வா இன்றளவும் குதிரையேற்றம் செய்யத் தவறுவதில்லை. இருந்தபோதும் பந்தய மைதானம் செல்வதை நிறுத்திக்கொண்டார்.
குதிரையேற்ற பயிற்சி மேற்கொள்வோர் பரிவுடன் நடந்துகொள்ளவேண்டும். குதிரையுடன் நல்ல இணைப்பை ஏற்படுத்திக்கொள்ளவேண்டும். இவையே அவர் வழங்கும் முக்கிய ஆலோசனைகள்.
ஆங்கிலத்தில்: ரேகா
25 ஆண்டுகள்; 75,000 வழக்குகள்: இவரே ‘இந்தியாவின் முதல் லேடி ஜேம்ஸ் பாண்ட்’

