ISRO தனியார்மயமாக்கப்படவில்லை; விண்வெளித் துறையில் சீர்திருத்தங்களே செய்யப்படுகிறது - இஸ்ரோ திட்டவட்டம்
தனியார்மயமாக்கல் குறித்த கூற்றுக்களை இஸ்ரோ நிராகரித்தாலும், முதிர்ச்சியடைந்த ராக்கெட் மற்றும் செயற்கைக்கோள் உற்பத்தியைத் தொழில்துறையை நோக்கி நகர்த்தும் ஒரு விரிவான சீர்திருத்தத் திட்டத்தை அது ஏற்றுக்கொள்கிறது.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) தனியார்மயமாக்கப்படுவதாகவும், இந்தியாவின் விண்வெளித் திட்டத்தில் அதன் பங்கு குறைக்கப்படுவதாகவும் வெளியான தகவல்களை இஸ்ரோ திட்டவட்டமாக மறுத்துள்ளது. ராக்கெட் மற்றும் செயற்கைக்கோள் உற்பத்தியின் பெரும்பகுதியையும், எதிர்காலத்தில் ஏவுதல் நடவடிக்கைகளின் சில பகுதிகளையும் தனியார் நிறுவனங்களுக்கு மாற்றுவதற்கான திட்டங்கள் குறித்த செய்திகள் வெளியானதைத் தொடர்ந்து இந்த விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரோவைச் சேர்ந்த 9 ஊழியர் சங்கங்களும், இந்த மாற்றம் எந்த திசையில் செல்கிறது என்பது குறித்து இஸ்ரோ தலைவர் வி. நாராயணனிடம் அதிகாரப்பூர்வ விளக்கம் கோரியிருந்தன.
செப்டம்பர் 6-ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில், இந்த செய்திகள் “ஊகங்களையும் தவறான தகவல்களையும்” உருவாக்கியுள்ளதாக இஸ்ரோ தெரிவித்தது. இஸ்ரோவை தனியார்மயமாக்க முயற்சி நடப்பதாகவோ அல்லது அதன் முக்கியத்துவம் குறைக்கப்படுவதாகவோ கூறப்படுவது அடிப்படை ஆதாரமற்றது என்றும் தெரிவித்தது.
மேம்பட்ட விண்வெளி ஆராய்ச்சி, தொழில்நுட்ப மேம்பாடு, மூலோபாய மற்றும் தேசிய அளவிலான விண்வெளிப் பணிகள், விண்வெளி அறிவியல் மற்றும் ஆய்வு, முக்கியமான தொழில்நுட்பங்கள் ஆகியவற்றில் இஸ்ரோ தொடர்ந்து நாட்டின் முதன்மை நிறுவனமாக இருக்கும் என்றும் அது தெளிவுபடுத்தியுள்ளது.

எனினும், இதன் பின்னணியில் நடைபெறும் மாற்றம் உண்மையானது. அதை இஸ்ரோவின் தனியார்மயமாக்கல் என்று அழைப்பது தவறான புரிதலை ஏற்படுத்தக்கூடும். ஏற்கெனவே முதிர்ச்சி பெற்ற தொழில்நுட்பங்கள் மற்றும் வழக்கமான உற்பத்திப் பணிகளை தொழில்துறையிடம் ஒப்படைப்பதன் மூலம், இஸ்ரோவின் விஞ்ஞானிகள் மற்றும் பொறியாளர்கள் அடுத்த தலைமுறை தொழில்நுட்பங்கள் மற்றும் முன்னேற்றமான ஆராய்ச்சிகளில் அதிக கவனம் செலுத்த முடியும் என்பதே இந்த மாற்றத்தின் நோக்கம்.
“விண்வெளித் துறையில் தனியார் நிறுவனங்களின் பங்களிப்பு என்பது இஸ்ரோவின் பங்கைக் குறைப்பது அல்ல. இந்தியாவின் விண்வெளித் திட்டத்தின் அடுத்த தலைமுறை பணிகளில் இஸ்ரோ மேலும் வலுவாக கவனம் செலுத்தவும், ஏற்கெனவே முதிர்ச்சி பெற்ற தொழில்நுட்பங்கள் மற்றும் திறன்களை தொழில்துறை பெரிய அளவில் விரிவுபடுத்தவும் இது உதவுகிறது,” என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது.
இந்த விவகாரம் தொடர்பான உடனடி கவலைகள், இந்திய தேசிய விண்வெளி மேம்பாடு மற்றும் அங்கீகார மையமான IN-SPACe-ன் தலைவர் பவன் கோயங்காவின் கருத்துகளுக்குப் பிறகு எழுந்தன. எதிர்காலத்தில் வழக்கமான ஏவுகணை வாகன உற்பத்தியில் இருந்து இஸ்ரோ படிப்படியாக விலகி, ஆராய்ச்சி, மூலோபாயப் பணிகள் மற்றும் புதிய தொழில்நுட்பங்களில் அதிக கவனம் செலுத்தலாம் என்று கோயங்கா கூறியிருந்தார்.
மேலும், இந்தியா தனது விண்வெளி ஏவுதல்களின் எண்ணிக்கையை கணிசமாக அதிகரிக்க வேண்டிய அவசியம் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
“2030-ஆம் ஆண்டுக்குள் ஆண்டுக்கு 50 ஏவுதல்களை மேற்கொள்ளும் லட்சிய இலக்கை நாம் நிர்ணயித்துள்ளோம். இத்தகைய அளவிலான இலக்கை ஒரே ஒரு நிறுவனத்தால் மட்டுமே எட்ட முடியாது,” என்று செப்டம்பர் 6-ஆம் தேதி வெளியிட்ட பதிவில் கோயங்கா தெரிவித்தார்.
கடந்த ஆண்டு செப்டம்பரில், இஸ்ரோ, நியூஸ்பேஸ் இந்தியா லிமிடெட் (NSIL) மற்றும் IN-SPACe ஆகியவை, சிறிய செயற்கைக்கோள் ஏவுகலமான SSLV-ன் தொழில்நுட்பத்தை ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் (HAL) நிறுவனத்துக்கு மாற்றுவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. சிறிய செயற்கைக்கோள்களை ஏவுவதற்காக வடிவமைக்கப்பட்ட SSLV, அதிக எண்ணிக்கையில் உற்பத்தி செய்யவும் விரைவாக ஏவுதல்களை மேற்கொள்ளவும் ஏற்ற வகையில் உருவாக்கப்பட்டது. இதனை அதிக எண்ணிக்கையில் தொழில்துறை நிறுவனங்கள் தயாரிக்கும் வகையில் உருவாக்குவதே நோக்கம் என்று இஸ்ரோ தெரிவித்திருந்தது.
அதே நேரத்தில், இந்த ஆகஸ்ட் மாதத்திலும் SSLV-யின் மேம்படுத்தப்பட்ட முதல் நிலை குறித்து இஸ்ரோ சோதனைகளை மேற்கொண்டது. இதன் மூலம், உற்பத்தித் தொழில்நுட்பம் தொழில்துறைக்கு மாற்றப்பட்டாலும், தொழில்நுட்ப மேம்பாட்டுப் பணிகள் இஸ்ரோவில் தொடர்ந்து நடைபெறுவது தெளிவாகிறது.
PSLV உற்பத்தியும் படிப்படியாக தொழில்துறைக்கு மாற்றப்பட்டு வருகிறது. இஸ்ரோவின் 2025-26 ஆண்டு அறிக்கையின்படி, PSLV-XL ராக்கெட்டுகளை முழுமையாக உற்பத்தி செய்வதற்காக HAL தலைமையிலான தொழில்துறை கூட்டமைப்புக்கு NSIL ஐந்து ராக்கெட்டுகளுக்கான ஒப்பந்தத்தை வழங்கியுள்ளது. தொழில்துறையால் தயாரிக்கப்படும் முதல் PSLV 2026-ஆம் ஆண்டில் ஏவப்பட உள்ளது. குறிப்பிடத்தக்க வகையில், NSIL முழுமையாக மத்திய அரசுக்குச் சொந்தமான நிறுவனமாகவும், இஸ்ரோவின் வர்த்தகப் பிரிவாகவும் செயல்படுகிறது.
இந்த பரந்த கொள்கை மாற்றம் 2020-ஆம் ஆண்டில் தொடங்கியது. அந்த ஆண்டு இந்தியா தனது விண்வெளித் துறையின் மதிப்புச் சங்கிலி முழுவதும் தனியார் நிறுவனங்களின் பங்களிப்புக்கு வழிவகுத்தது. இதைத் தொடர்ந்து, 2023-ஆம் ஆண்டின் இந்திய விண்வெளிக் கொள்கையும், தாராளமயமாக்கப்பட்ட அந்நிய நேரடி முதலீட்டு விதிமுறைகளும் அறிமுகப்படுத்தப்பட்டன. அரசு சாரா விண்வெளி நடவடிக்கைகளை ஊக்குவித்தல், அங்கீகரித்தல் மற்றும் கண்காணித்தல் ஆகிய பணிகளுக்காக IN-SPACe உருவாக்கப்பட்டது. அதேபோல், வர்த்தகமயமாக்கல் மற்றும் தொழில்துறை தலைமையிலான உற்பத்தியை ஊக்குவிக்கும் பொறுப்பு NSIL-க்கு வழங்கப்பட்டது.
இந்த மாற்றங்களின் விளைவாக இந்தியாவில் தனியார் விண்வெளித் துறையின் சூழல் கணிசமாக விரிவடைந்துள்ளது. 2026 ஆகஸ்ட் நிலவரப்படி, நாட்டில் சுமார் 440 விண்வெளி ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் இருப்பதாக அரசு புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. ஏவுகலங்கள், செயற்கைக்கோள்கள், உந்துவிசை அமைப்புகள், தரை நிலையங்கள் மற்றும் விண்வெளி சார்ந்த பயன்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் தனியார் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.
கடந்த 5 ஆண்டுகளில் தனியார் முதலீடு 600 மில்லியன் டாலரைத் தாண்டியுள்ளது. மேலும், இத்துறையை ஆதரிப்பதற்காக ரூ.1,000 கோடி மதிப்பிலான துணிகர முதலீட்டு நிதியும், ரூ.500 கோடி மதிப்பிலான தொழில்நுட்ப ஏற்றுக்கொள்ளல் நிதியும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
எனவே, முக்கியமான கேள்வி இஸ்ரோ தனியார்மயமாக்கப்படுகிறதா என்பது அல்ல; இஸ்ரோவுக்கும் தனியார் துறைக்கும் இடையிலான பணிப் பிரிவு எந்த அளவுக்கு விரிவடையும் என்பதுதான். மூலோபாய திறன்கள், முன்னோடி ஆராய்ச்சி, மனித விண்வெளிப் பயணம் மற்றும் முக்கிய தேசிய விண்வெளிப் பணிகள் ஆகியவை இஸ்ரோவின் பணிகளில் தொடர்ந்து முக்கிய இடத்தைப் பெறும் என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதேசமயம், உற்பத்தி மற்றும் செயல்பாட்டு நடவடிக்கைகள் தனியார் துறைக்கு மாற்றப்பட்டால், எதிர்காலத்தில் இஸ்ரோ பெரும்பாலும் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனமாக மட்டுமே மாறிவிடுமா என்பது குறித்து அதன் ஊழியர் சங்கங்கள் தெளிவான விளக்கத்தை கோரி வருகின்றன.
செப்டம்பர் 4-ஆம் தேதி இந்தியாவின் EOS-05 செயற்கைக்கோளை வெற்றிகரமாக சுற்றுப்பாதையில் நிலைநிறுத்திய GSLV ஏவுதல், தேசிய விண்வெளித் திட்டத்தின் மையத்தில் இஸ்ரோ தொடர்ந்து முழுமையான செயல்பாட்டுடன் இருப்பதை எடுத்துக்காட்டுகிறது.
எனவே, இந்தியா தனது விண்வெளித் திறன்களை உருவாக்கிய பொது நிறுவனமான இஸ்ரோவை பலவீனப்படுத்தாமல், அதனைச் சுற்றி மிகப் பெரிய வர்த்தக விண்வெளித் தொழில்துறையை உருவாக்க முயற்சிப்பதே தற்போதைய மாற்றத்தின் முக்கிய நோக்கமாகத் தெரிகிறது.
தகவல் உதவி: யுவர்ஸ்டோரி குழு, தமிழில்: முத்துகுமார்

