‘பணத்தை இஷ்டம் போல் செலவழிக்காமல் வளர்ச்சி நோக்கி முதலீடு செய்கிறோம்’ - Zepto இணை நிறுவனர் கைவல்யா வோரா
அதிகரிக்கும் போட்டிக்கு மத்தியில், Zepto 450 மில்லியன் டாலர் புதிய நிதி திரட்டியுள்ள நிலையில், பல நிறுவனங்கள் பணத்தை கணக்கில்லாமல் செலவிட்டு வருவதாகவும், ஜெப்டோ கவனமாக திட்டமிட்டு செலவு செய்வதாகவும் கூறினார், அதன் இணை நிறுவனர் கைவல்யா வோரா.
குவிக் காமர்ஸ் நிறுவனம் Zepto பணத்தை இஷ்டம் போல செலவிடுவதற்கு பதிலாக, கவனமாக, திட்டமிட்டு முதலீடு செய்து வருவதாக, இணை நிறுவனர் கைவல்யா வோரா டெக்ஸ்பார்க்ஸ் 2025 நிகழ்ச்சியில் பேசும் போது கூறினார்.
“இந்தியா மற்றும் உலக அளவில் பல நிறுவனங்கள், கைகளில் எந்த சேவையில் இல்லாத போது, நிறைய பணத்தை செலவிட்டு வீணடித்துள்ளன. எந்த அர்த்தமும் இல்லாத வகையில், பணத்தை இஷ்டம் போல செலவிடுவதற்கும், வளர்ச்சி நோக்கில் திட்டமிட்டு செலவிடுவதற்குமான வேறுபாட்டை உணர அறிவு நேர்மை அவசியம்,“ என்று யுவர்ஸ்டோரி நிறுவனர் மற்றும் சி.இ.ஓ.ஷ்ரத்தா ஷ்ர்மாவுடனான உரையாடலின் போது வோரா தெரிவித்தார்.
இப்போது, புதிய பயனாளிகளை ஈர்ப்பது முதல் புதிய நகரங்களில் நுழைவது வரை கவனம் செலுத்தி வருவதாக கூறினார்.
“இந்த அறிவு நேர்மை முக்கியமானது. இதை மீண்டும் மீண்டும் உணர்த்தியுள்ளோம்,” என்று தெரிவித்தார்.

யுவர்ஸ்டோரியின் முன்னணி நிகழ்ச்சியான டெக்ஸ்பார்க்ஸ் 16வது பதிப்பில் பேசிய வோரா, குறைந்த வளர்ச்சி விகிதத்தில் லாப நோக்கை ஜெப்டோ தேர்வு செய்யும் வாய்ப்பு இருந்தாலும், சந்தை வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள விரும்புவதாக தெரிவித்தார்.
“லாபகரமாக இருப்பது மற்றும் ஆண்டுக்கு 20 -30 சதவீதம் வளர்ந்து, படிப்படியாக உயர்வதா? எனும் தேர்வை மேற்கொள்ள வேண்டியிருந்தது,” என்றார்.
"அல்லது இது நாட்டின் பெரிய ரீடைல் சந்தை. மளிகை மற்றும் ரீடைல் பொருட்களில் மக்கள் அதிகம் செலவிடுகின்றனர். டாலர் கணக்கில், 700 பில்லியன் டாலர் அளவு செலவிடப்படலாம். இதில் 0.1 சதவீதம் தான் பெற்றுள்ளோம்,” என்றார்.
ஸ்விக்கியின் இன்ஸ்டாமார்ட் மற்றும் சந்தையில் முன்னணி வகிக்கும் பிளின்கிட்டை எதிர்கொள்ளும் வகையில், ஜெப்டோ 450 மில்லியன் டாலர் புதிய நிதி திரட்டிய நிலையில் வோரா இவ்வாறு கூறினார்.
இதனிடையே, நிறுவனம் பல்வேறு உயர் அதிகாரிகள் வெளியேற்றத்தை எதிர்கொண்டு வருகிறது. ஜெப்டோ கேப் தலைவர் சஷாங் சேகர் சர்மா விலகியதை யுவர்ஸ்டோரி முதலில் வெளியிட்டது.
இந்த வாரம், அதன் இறைச்சி பிரிவு ரிலிஷில் இருந்து தலைமை அதிகாரி சந்தன் ரன்க்டா வெளியேற்றத்தை நிறுவனம் உறுதி செய்தது. மேலும், மூத்த துணைத்தலைவர் அபூர்வ் பாண்டே, தொழில்நுட்ப தகவல் தலைவர் சந்த்ரேஷ் தேதியாவும் வெளியேறியுள்ளனர்.
ஆங்கிலத்தில்: பிரனவ் பாலகிருஷ்ணன், தமிழில்: சைபர் சிம்மன்
Edited by Induja Raghunathan

