நீட் தேர்வில் தோல்வி அடைந்த பெண்ணின் வாழ்க்கையை மாற்றிய இ-மெயில்!
மருத்துவராக வேண்டும் என்ற கனவுடன் இருந்த இளம் பெண்ணுக்கு, அவர் திர்பார்த்தபடி மருத்துவக் கல்லூரியில் சீட் கிடைக்கவில்லை. இது முடிவல்ல ஆரம்பம் என்று நினைத்த அவர், ரோபோட்டிக்ஸ் இன்ஜினியரிங் முடித்துவிட்டு, இன்று ரோல் ராய்ஸ் நிறுவனத்தில் ரூ.72 லட்சம் சம்பளத்தில் சேர்ந்த உத்வேகக் கதை வைரலாகி உள்ளது.
கர்நாடகாவின் திர்தஹள்ளி தாலுகாவில் உள்ள கொடூரு என்ற சிறிய ஊரைச் சேர்ந்த ரிதுபர்ணா கே.எஸ். என்பவரின் வாழ்க்கை கனவுகள் நேர்கோட்டில் பயணிப்பதில்லை என்ற மகா வாக்கியத்திற்கான உதாரணமாகத் திகழ்கிறது.
மருத்துவராக வேண்டும் என்பதே ரிதுபர்ணாவின் ஆரம்பக் கனவு. அதற்காகவே நீட் தேர்வுக்கு தீவிரமாக தயாரானார். ஆனால், எதிர்பார்த்தபடி அரசு மருத்துவக் கல்லூரியில் சீட் கிடைக்கவில்லை. அந்த தோல்வி அவரை தளர்வடையச் செய்யவில்லை; மாறாக, வாழ்க்கையை வேறு திசையில் திருப்பும் ஒரு தொடக்கமாக அது மாறியது. இது முடிவல்ல ஆரம்பம் என்று மனதுக்குள் உறுதி பூண்டார்.
மருத்துவம் இல்லை என்றால் என்ன, என்று நினைத்து அவர் ரோபோட்டிக்ஸ் என்ஜினியரிங்கை தேர்வு செய்தார். இது அவர் முன்பு ஒருபோதும் திட்டமிட்ட பாதை அல்ல.

2022-ஆம் ஆண்டு, CET மூலம் மங்களூருவில் உள்ள சஹ்யாத்ரி இன்ஜினியரிங் & மேனேஜ்மெண்ட் கல்லூரியில் மெக்காட்ரானிக்ஸ், ரோபோட்டிக்ஸ் மற்றும் ஆட்டோமேஷன் இன்ஜினியரிங்கில் BE படிப்பில் சேர்ந்தார். ஆரம்பத்தில் மனதில் சிறிய ஏமாற்றம் இருந்தாலும், “இங்கே வந்துவிட்டோம், சிறந்ததை செய்வோம்...” என்ற உறுதியுடன் முதல் நாளிலிருந்தே முழுமையாக ஈடுபட்டார்.
பாடப்புத்தக அறிவோடு மட்டுமல்லாமல், புதுமையான செயல்பாடுகளிலும் அவர் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். விவசாயிகளுக்கு உதவும் வகையில் ரோபோட்டிக்ஸ் அடிப்படையிலான அரைக்காய் அறுவடை இயந்திரம் மற்றும் தெளிப்பான் ஒன்றை வடிவமைத்தார். இந்த முயற்சி கோவாவில் நடைபெற்ற INEX போட்டியில் தங்கமும், வெள்ளிப் பதக்கங்களை பெற்றுத் தந்தது. மருத்துவர்களுடன் இணைந்து ரோபோட்டிக் சர்ஜரி குறித்த ஆய்வுகளை மேற்கொண்டார். உள்ளூர் நிர்வாகத்துடன் சேர்ந்து திடக்கழிவு மேலாண்மை தீர்வுகளை உருவாக்கினார். NITK சூரத்கல்லில் ஆராய்ச்சிப் பணிகளிலும் பங்கேற்றார். தன்னை எந்தத் துறையில் தள்ளி வைத்தாலும், அதில் தனித்தன்மையுடன் ஒளிர வேண்டும் என்பதே அவரை இவற்றையெல்லாம் செய்யத்தூண்டியது.
ரிதுபர்ணாவின் வாழ்க்கையில் ஏற்பட்ட திருப்புமுனை
ஒரு எளிய ஆனால் தைரியமான செயலில் இறங்கினார் ரிதுபர்ணா. ரோல்ஸ்-ராய்ஸ் நிறுவனத்திற்கு அவர் நேரடியாக இன்டர்ன்ஷிப் வாய்ப்பு கேட்டு ஒரு மின்னஞ்சல் அனுப்பினார். எந்த பரிந்துரையும் இல்லை, எந்த உறுதியும் இல்லை—ஆனால், நம்பிக்கை மட்டும் இருந்தது.
அந்த மின்னஞ்சல் கவனிக்கப்பட்டது. அவருக்கு ஒரு சவாலான பணியை கொடுத்தார்கள்; அதை முடிக்க ஒரு மாதம் ஆகும், என நினைத்தார்கள். ஆனால், ரிதுபர்ணா அதை ஒரு வாரத்திலேயே செய்து முடித்தார். இதனால் ஆச்சரியமடைந்த நிறுவனம் தொடர்ந்து மேலும் கடினமான பணிகளை கொடுத்தது. இப்படியாக எட்டு மாதங்கள் அவர் அங்கு தன்னை நிரூபித்தார்.
அவருடைய வேகம், அர்ப்பணிப்பு, கற்றுக்கொள்ளும் ஆர்வம் ஆகியவை ரோல்ஸ்-ராய்ஸ் நிறுவனத்தை மிகுந்த அளவில் கவர்ந்தது. 21 வயது கூட நிறைவடையாத நிலையில், அவருக்கு ஆண்டுக்கு ரூ.72 லட்சம் சம்பளத்துடன் முழுநேர வேலைவாய்ப்பு கிடைத்தது. இது ஒரு வேலை வாய்ப்பு மட்டுமல்ல; ஒரு இளம் பெண்ணின் தன்னம்பிக்கைக்கும், துணிச்சலுக்கும் கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரம்.
இந்த கதையை அன்கூர் வாரிகூ சமூக ஊடகங்களில் பகிர்ந்தபோது, ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு அது ஒரு நம்பிக்கைக் குரலாக மாறியது. நீட் தோல்வி என்ற ஒரு ஏமாற்றம், உலகின் முன்னணி நிறுவனத்தில் வேலை கிடைக்கும் அளவுக்கு ஒரு படிக்கட்டாக மாறும் என்று யார் நினைத்திருப்பார்கள்?
ரிதுபர்ணாவின் பயணம் சொல்லும் பாடம் ஒன்றுதான்—தோல்வி என்பது முடிவல்ல. சூழ்நிலைக்கு ஏற்ப தன்னை மாற்றிக்கொள்ளும் மனமும், ஒரு சரியான நேரத்தில் எடுத்த ஒரு தைரியமான முடிவும், வாழ்க்கையின் திசையையே மாற்றிவிடும். ஒரே ஒரு மின்னஞ்சல் கூட ஒரு வாழ்க்கையை மாற்றும் சக்தி கொண்டது என்பதற்கு ரிதுபர்ணா உயிரோடு நிற்கும் உதாரணம்.

