இந்திய ஸ்டார்ட்அப் சூழலை வலுப்படுத்த ரூ.21 கோடி முதலீடு திரட்டியது கோவை ‘Cumma’ நிறுவனம்!
இந்தியாவின் ஸ்டார்ட்அப் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக BizDateUp நிறுவனத்திடமிருந்து ரூ.21 கோடி உத்திசார் முதலீட்டைப் பெற்றுள்ளதாக கோவையைச் சேர்ந்த ‘Cumma’ அறிவித்துள்ளது.
கோயம்புத்தூரைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் தொழில்நுட்ப சந்தை தளமான 'கம்மா' (Cumma), இந்தியாவின் ஸ்டார்ட்அப் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக BizDateUp நிறுவனத்திடமிருந்து ரூ.21 கோடி உத்திசார் முதலீட்டைப் பெற்றுள்ளதாக அறிவித்துள்ளது.
இந்த முதலீட்டின் மூலம் 'கம்மா' நிறுவனத்தின் 54.5 சதவீத பங்குகளை பிஸ்டேட்அப் கைப்பற்றியுள்ளது. இந்தியாவின் ஸ்டார்ட்அப் சூழலில் ஒரு முக்கிய மைல்கல்லாகக் கருதப்படும் இந்த ஒப்பந்தம், நாடு முழுவதும் உள்ள கண்டுபிடிப்பாளர்களுக்கான உள்கட்டமைப்புகளை எளிதில் அணுக வழிவகை செய்யும் நோக்கில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பு குறித்து கமா நிறுவனத்தின் நிறுவனரும் தலைமைச் செயல் அதிகாரியுமான கௌதம் பழனிசாமி கூறுகையில்,
"பிஸ்டேட்அப் உடனான இந்த கூட்டணி கம்மா நிறுவனத்திற்கு ஒரு மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்றும், இது இந்திய ஸ்டார்ட்அப் அமைப்பில் உள்ள உள்கட்டமைப்பு இடைவெளியை நிரப்புவதற்கான ஒரு முக்கிய அங்கீகாரம்,” என்றும் தெரிவித்தார்.
இந்தியாவில் பல இன்குபேட்டர்கள், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு ஆய்வகங்கள் மற்றும் அதிநவீன வசதிகள் இருந்தாலும், அவை பல தொழில்முனைவோருக்கு எளிதில் கிடைப்பதில்லை என்பதைச் சுட்டிக்காட்டிய அவர், கம்மா ஒரு தொழில்நுட்ப சந்தையாகச் செயல்பட்டு கண்டுபிடிப்பாளர்களையும் அவர்களுக்குத் தேவையான வசதிகளையும் இணைக்கும் பாலமாக விளங்கும் என்றார்.
குறிப்பாக, இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை நகரங்களைச் சேர்ந்த புதிய தொழில்முனைவோர் பெருநகரங்களுக்கு இடம் பெயராமலேயே உலகத்தரம் வாய்ந்த வசதிகளைப் பெற இது உதவும் என்றும், இதன் மூலம் உள்ளூர் அளவில் வேலைவாய்ப்புகள் மற்றும் பொருளாதார வளர்ச்சி ஏற்படும், என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
மற்ற சாதாரண பணியிட தளங்களைப் போலல்லாமல், கம்மா குறிப்பாக ஸ்டார்ட்அப் சூழலுக்காக வடிவமைக்கப்பட்ட ஒரு உள்கட்டமைப்பு சந்தையாகச் செயல்படுகிறது. இது அரசாங்கத்தின் ஆதரவு பெற்ற மையங்கள், சோதனை வசதிகள் மற்றும் உற்பத்தி அலகுகளை ஒரே தளத்தில் ஒருங்கிணைக்கிறது. இதன் மூலம் பதிவு செய்யும் நேரம் குறைக்கப்படுவதோடு, ஆவணச் சிக்கல்களும் தவிர்க்கப்படுகின்றன.
பிஸ்டேட்அப் நிறுவனத்தின் குழும நிர்வாக இயக்குநர் ஜீத் சந்தன் இது குறித்துப் பேசுகையில்,
“இந்தியாவின் அடுத்த தலைமுறை ஸ்டார்ட்அப்’கள் பெருநகரங்களில் இருந்து மட்டுமல்லாமல், சிறு நகரங்கள் மற்றும் பல்கலைக்கழகங்களில் இருந்தும் உருவாகும்,” என்ற ஆழ்ந்த நம்பிக்கையை வெளிப்படுத்தினார்.
இந்தக் கூட்டணியின் மூலம் அடுத்த மூன்று முதல் ஐந்து ஆண்டுகளில் தேசிய அளவில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி, 25,000-க்கும் மேற்பட்ட ஸ்டார்ட்அப்களை ஊக்குவிப்பது, 1,500-க்கும் மேற்பட்ட கண்டுபிடிப்பு வசதிகளைச் செயல்படுத்துவது மற்றும் ₹5,000 கோடிக்கும் அதிகமான மதிப்பிலான உள்கட்டமைப்புகளைப் பயன்பாட்டுக்குக் கொண்டு வருவது போன்ற இலக்குகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.
இதன் மூலம் சுமார் 3 முதல் 5 லட்சம் நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகள் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவின் 'ஆத்மநிர்பர் பாரத்' (சுயசார்பு இந்தியா) தொலைநோக்கு பார்வைக்கு வலுசேர்க்கும் வகையில், சிறு நகரங்களின் தொழில்முனைவு கனவுகளை நனவாக்க இந்தக் கூட்டணி உறுதுணையாக இருக்கும்.
