லலிதா ஜுவல்லரி மார்ட் IPO - ரூ.1700 கோடி மதிப்பு பங்கு வெளியீட்டிற்கு நல்ல வரவேற்பு!
லலிதா ஜுவல்லரி மார்ட் நிறுவனத்தின் பொது பங்கு வெளியீடு இரண்டாம் நாள் நிறைவில் 3 மடங்கு விண்ணப்பங்களோடு நல்ல வரவேற்பு பெற்றுள்ளது.
முன்னணி நகைக்கடை நிறுவனங்களில் ஒன்றான லலிதா ஜுவல்லரி மார்ட், அண்மையில் பொது பங்கு வெளியீட்டை அறிவித்தது. இதன் ஐபிஓ கடந்த 17ம் தேதி துவங்கி, இன்றோடு முடிவடைகிறது. சென்னை தி.நகரில் 1985ம் ஆண்டு துவங்கப்பட்ட லலிதா ஜுவல்லரி மார்ட், பிரபல நகைக்கடை நிறுவனங்களில் ஒன்றாக வளர்ந்துள்ளது.
இந்நிறுவன பங்கு வெளியீடு துவங்கியது முதல் நல்ல ஆதரவு பெற்று வந்தது. முதல் நாளில் 44 சதவீத விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இரண்டாம் நாள் நிறைவில் முழு விண்ணப்பங்கள் பெறப்பட்டதோடு, மூன்று மடங்கு விண்ணப்பங்கள் பெறப்பட்டன. நிறுவன மற்றும் ரீடைல் பிரிவிலும் ஆதரவு இருந்தது. கிரே மார்க்கெட்டில் 15 சதவீத பிரிமியம் நிலவியது.
லலிதா ஜுவல்லரி நிறுவனத்தின் பொது பங்கு வெளியீடு இரண்டாம் நாள் நிறைவில் 3 மடங்கு விண்ணப்பங்களோடு நல்ல வரவேற்பு பெற்ற நிலையில், பங்கு வெளியீட்டின் நிறைவு நாளான இன்று, கிரே மார்க்கெட்டில் அதன் பங்குகள் ரூ.40 பிரிமியத்தில் கிடைக்கும் நிலை இருந்தது. மூன்றாம் நாளில் நண்பகல் அளவில் இந்த வெளியீடு 9 மடங்கு விண்ணப்பங்களை பெற்றிருந்தது.

பங்கு விலை வரம்பு
லலிதா ஜுவல்லரி நிறுவனத்தின் இந்த பங்கு வெளியீடு ரூ.1700 கோடி மதிப்பு கொண்டது. பங்குகளுக்கான விலை வரம்பு ரூ.190 முதல் ரூ.201 வரை அமைந்துள்ளது. பங்கு வெளியீடு, ரூ.500 கோடிக்கான விற்பனை வாய்ப்பையும் கொண்டுள்ளது.
புதிய கிளைகள் துவக்கம் மற்றும் விரிவாக்கத்திற்கு வெளியீடு மூலமான நிதியை பயன்படுத்த இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. பங்கு வெளியீட்டிற்கு முன்னதாக, ஆங்கர் முதலீட்டாளர்களிடம் இருந்து ரூ.508 கோடி திரட்டியது.
இன்று நிறைவு
லலிதா ஜுவல்லரியின் பங்கு வெளியீடு இன்றோடு நிறைவடைகிறது. இந்நிலையில், நன்பகல் அளவில் 9 மடங்கு விண்ணப்பங்கள் பெறப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ரீடைல் பிரிவில் 6 மடங்கு விண்ணப்பங்கள் பெறப்பட்டன. நிறுவன பிரிவில் 28 மடங்காக இருந்தது.
கிரே மார்க்கெட்டில் நிறுவன பங்குகள் ரூ.40 பிரிமியம் கொண்டுள்ளன. விலை வரம்பை விட 20 சதவீதம் கூடுதலாக உள்ளது. நிறுவனத்தின் பங்குகள் மும்பை மற்றும் தேசிய பங்குச்சந்தைகளில் வரும் 24 ம் தேதி பட்டியலிடப்படும், என எதிர்பார்க்கப்படுகிறது.
Edited by Induja Raghunathan

