Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
ADVERTISEMENT
Advertise with us

Chandrayaan 2 - கடைசி நேரம் கேன்சல் ஆக என்னக் காரணம்? லேட்டாவது பற்றிய லேட்டஸ்ட் தகவல்!

நிலவின் தென்துருவத்தை ஆராய்வதற்காக இஸ்ரோ விண்ணில் ஏவ இருந்த சந்திராயன் -2 கடைசி நேரத்தில் நிறுத்தப்பட்டதற்கு என்னக் காரணம்?

Chandrayaan 2 - கடைசி நேரம் கேன்சல் ஆக என்னக் காரணம்? லேட்டாவது பற்றிய லேட்டஸ்ட் தகவல்!

Monday July 15, 2019 , 2 min Read

இஸ்ரோவின் 10 ஆண்டுகால முயற்சி! ரூ.1,000 கோடியில் உருவான ‘பாகுபலி’ ’சந்திராயன் - 2’ (Chandrayaan-2). இந்தியாவிற்கு முன்னரே நாசா, நிலவில் ஆராய்ச்சி செய்திருந்தாலும் 2008ம் ஆண்டு இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் கழகம் நிலவுக்கு அனுப்பிய சந்திராயன்- 1 அங்கே தண்ணீர் இருப்பதை உறுதி செய்து அறிவியல் உலகில் வரலாற்றுச் சாதனை படைத்தது.


இந்நிலையில் அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட உலக நாடுகள் சந்திராயன் -2’ன் செயல்பாடுகள் எவ்வாறு இருக்கும் என்று உற்று நோக்கி காத்திருந்தன.

gslv

நிலவின் இருண்ட பகுதியான தென்துருவத்தில் இதுவரை எந்த நாடும் ஆய்வு செய்ததில்லை என்பதால் இஸ்ரோவிற்கும் ’சந்திராயன்-2’ மிகச் சவாலானதாக அமைந்தது. 2009ம் ஆண்டில் சந்திராயன்- 2 விண்ணுக்கு அனுப்ப ஒப்புதல் அளிக்கப்பட்டு விஞ்ஞானிகளின் 10 ஆண்டு கால உழைப்பில் உருவாகியுள்ளது.


சந்திரனை சுற்றி வந்து ஆய்வு செய்வதற்காக ‘ஆர்பிட்டர்‘, சந்திரனில் தரை இறங்கி ஆய்வு செய்ய விக்ரம் என்னும் ‘லேண்டர்‘, அங்கு தரையில் ஊர்ந்து சென்று ஆய்வு செய்ய பிரக்யான் என்னும் ‘ரோவர்‘ என மொத்தம் 3 சாதனங்கள் சந்திரயான்-2 விண்கலத்தில் இடம்பெற்றிருக்கின்றன. இந்த சாதனங்களில் அதிநவீன கேமராக்கள், எக்ஸ்ரே கருவிகள், வெப்ப நிலையை ஆய்வு செய்யும் கருவிகள், லேசர் தொழில் நுட்பத்தில் செயல்படும் கருவிகள் என 13 வகையான கருவிகள் இணைக்கப்பட்டுள்ளன.


இந்தியாவின் மிகவும் கனமான ராக்கெட்டான ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 ராக்கெட் மூலம் சந்திரயான்-2 விண்கலத்தை ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஏவுதளத்தில் இருந்து 15-7-2018 அன்று அதிகாலை 2.51 மணிக்கு விண்ணில் செலுத்த நாள் குறிக்கப்பட்டது. அதற்கான 20 மணி நேர கவுண்ட் டவுன் ஜூலை, 14ம் தேதி காலை 6.51 மணிக்கு தொடங்கியது. 


இந்திய நாட்டு மக்கள் பெருமையோடு சந்திராயன்-2 விண்ணில் ஏவப்படுவதை காண்பதற்காகக் காத்திருந்தனர். ஸ்ரீஹரிகோட்டாவில் 5 ஆயிரம் பேர் திரண்டு சந்திராயன்-2 விண்ணில் செல்வதை காண்பதற்காகக் கூடி இருந்தனர். அதிகாலை 12.16 மணிக்கு ராக்கெட்டில் திரவ ஆக்ஸிஜன் மற்றும் திரவ ஹைட்ரஜன் நிரப்பும் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்ற அறிவிப்பும் வெளியானது. 


அதைத்தொடர்ந்து 1.34 மணிக்கு திரவ ஹைட்ரஜன் நிரப்பும் பணி வெற்றிகரமாக முடிக்கப்பட்டது என்ற அறிவிப்பு வெளியானது. கடைசி நேர பரபரப்பில் விஞ்ஞானிகள் செயல்பட்டுக் கொண்டிருக்க திக் திக் என்று காத்திருந்தனர் மக்கள். சரியாக அதிகாலை 1.55.36 மணிக்கு கவுண்டவுன் திடீரென நிறுத்தப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

ஏவுகணையில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு கடைசி நேரத்தில் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து முன்னெச்சரிக்கையாக சந்திராயன் -2 ஏவப்படுவது நிறுத்தப்படுவதாக இஸ்ரோ அறிவிப்பை வெளியிட்டது.

சந்திராயன் -2 இன்றைய தினம் ஏவப்படாது என்றும் விரைவில் வேறொரு நாளில் ஏவப்படுற்கான அறிவிப்பு வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


விண்ணில் செலுத்தப்பட்ட பின்னர் ஏவுகணையில் கோளாறை சரிசெய்வது என்பது கடினமான காரியம் என்பதால் கடைசி நேரத்தில் விண்ணில் செலுத்துவதற்கு முன்னரே கோளாறு கண்டுபிடிக்கப்பட்டதற்கு டிஆர்டிஓ மூத்த அதிகாரிகள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

கோளாறு சரிசெய்யப்பட்டு Chandrayaan 2 வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டு தனது இலக்கை எட்ட வேண்டும் என்றும் அவர்கள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.

சந்திராயன் -2 இன்று வெற்றிகரமாக ஏவப்பட்டு இருந்தால், ரஷ்யா, அமெரிக்கா, சீனாவை தொடர்ந்து இந்தியாவும்; சந்திரனின் புதிய பகுதியில் காலடி வைத்த நாடுகளின் பட்டியலில் சேர்ந்திருக்கும். இருப்பினும் எல்லாம் நன்மைக்கே என்பது போல் இன்னும் சில நாட்களில் தொழில்னுட்பக் கோளாறுகள் சரிசெய்யப்பட்டு ‘சந்திராயன் 2’ பெருமிதத்துடன் நிலவுக்கு பரக்கும் என்ற நம்பிக்கையுடன் காத்திருப்போம்.

கட்டுரையாளர் : கஜலெட்சுமி