38,000 பள்ளிகளுடன் இணைந்து இந்தியாவில் தொடக்க கல்வியை மாற்றி அமைக்கும் ‘மதி பவுண்டேஷன்’
சென்னையில் மெர்லியா தொடங்கிய ‘மதி பவுண்டேஷன்’ அடித்தள கற்றலை தனது திட்டங்களில் மையமாக்கி, பெற்றோர்களுடன் இணைந்து செயல்பட்டு அரசுப் பள்ளி அமைப்பை வலுவாக்கி வருகிறார்.
வழக்கமான எதிர்பார்ப்புகளுக்கு மாறாக மெர்லியா சவுக்கத்தின் பெற்றோர் அவரை, எல்லோரும் பார்க்கக் கூடிய வேலையை நோக்கிச் செல்ல வைக்கவில்லை. அவர்கள் வளர்ச்சித் துறையில் தொழில் வாழ்கையை அமைத்துக்கொள்ள ஊக்குவித்தனர்.
சென்னையில் பிறந்து வளர்ந்த மெர்லியாவின் இல்லம் கல்வி மற்றும் சமூக மாற்றம் தொடர்பான உரையாடல்கள் போலவே தொழில்முனைவு தொடர்பாகவும் அதிகம் பேசப்படும் சூழலில் அமைந்திருந்தது. பொது நலன் என்பது தினசரி வாழ்க்கையின் அங்கமாக பார்த்தனர்.
சமூக சீர்திருத்தவாதியான அவரது தாத்தா சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த மாணவ மாணவிகளுக்கான கல்வி நிலையங்களை உண்டாக்கினார் என்றால் பெற்றோர், முதல் தலைமுறை தொழில்முனைவோராக தங்கள் பயணத்தை துவக்கியிருந்தனர்.

சமத்துவம் மற்றும் தொழில்முனைவு இணைந்த இந்த சூழலில் வளர்ந்த மெர்லியா தன் இதயத்தின் அழைப்பை கண்டு கொண்டார். லண்டன் பொருளாதார பள்ளி மற்றும் ஆக்ஸ்போர்டு பல்கலையில் படித்து திரும்பியவர் தெளிவான எண்ணம் கொண்டிருந்தார்.
“நான் சலுகைகளுடன் பிறந்தவள், இந்த சலுகை மேலும் சலுகைகளை மட்டும் உருவாக்கக் கூடாது என்றும் இந்த சலுகையை சிறந்த முறையில் பயன்படுத்திக்கொள்ளும் பொறுப்பு எனக்கு இருக்கிறது என பெற்றோர் அடிக்கடி சொல்வது உண்டு,” என்று சோஷியல் ஸ்டோரியிடம் பேசிய போது மெர்லியா கூறினார்.
தாத்தாவின் சமூக நோக்கம் மற்றும் பெற்றோர்களின் தொழில்முனைவு மரபணுவை கொண்டிருந்தவர், தான் ஒரு சமூக தொழில்முனைவோராக வேண்டும் என்பதை துவக்கத்திலேயே உணர்ந்திருந்தார். பிரச்சனைகளுக்கு பெரிய அளவில் தீர்வு காண விரும்பினார்.
2011 ல் அவர் ’டீச் பார் இந்தியா’ மூலம் பயணத்தை துவக்கினார். அதன் முதல் ஊழியராக இணைந்தார். நிதி திரட்டுவது, செயல்பாடுகள், மனிதவளம் என எல்லா பணிகளையும் சேர்த்து செய்தார். இது அவருக்கு ஒரு அமைப்பை உருவாக்குவது தொடர்பான புரிதலை அளித்ததோடு, அடிமட்ட அளவில் கல்வி சீர்திருத்தம் தொடர்பான உண்மைகளை உணர்த்தியது.
“இது என்னை ஆசிரியர்கள், வகுப்பறைகளுக்கு வெகு அருகாமையில் கொண்டு சென்று, கல்வி சீர்திருத்தத்தின் கோட்பாட்டை தாண்டி இது இருப்பதையும், களத்தில் என்ன நிலவரம் என்பதையும் புரிய வைத்தது,” என்கிறார்.
இதன் பிறகு, தமிழ்நாடு அரசுடன் நேரடியாக செயல்பட்ட ஆலோசனை நிறுவனம் ஒன்றில் பணியாற்றினார். இது கொள்கை வகுப்பு நடைமுறைகளை புரிய வைத்தது.
2016ல் அவர் சென்னையில் ‘மதி பவுண்டேஷன்’ துவக்கினார். கொள்கை மற்றும் செயல்பாடு ஆகியவற்றின் இணைப்பு புள்ளியில் இதை உருவாக்கியிருந்தார்.
“தொடக்க கல்வியில் மட்டும் கவனம் செலுத்தினோம், வலுவான அடித்தளம் அமைத்துக்கொடுத்தால், எதிர்கால கற்றல் இடைவெளி பலவற்றை போக்கலாம் என நம்பினோம்,” என்கிறார்.
குழந்தைகளை மையமாகக் கொண்டு, அரசு பள்ளிகளுடன் இணைந்து செயல்படுவதோடு, பெற்றோர்களுடனும் தொடர்பு கொள்கிறது. அவர்களும் இதில் ஒரு பங்கேற்பாளராகின்றனர்.
பொது கல்வி அமைப்பின் அனைத்து பகுதிகளிலும் இந்த அமைப்பு இணைந்து செயல்படுகிறது. பாடத்திட்டங்கள், ஆசிரியர் பயிற்சி சீர்த்திருத்தம், ஆசியரியர்- பயிற்சியாளார் சீர்திருத்தம், அரசு செயல்முறை டிஜிட்டல்மயமாக்கல், மாநில- மாவட்ட உறவை வலுவாக்கம் போன்றவற்றில் கவனம் செலுத்துகிறது.
ஆரம்ப ஆண்டுகளில், சென்னையில் உள்ள ஒரு சில நகரப்புற மையங்களில் கவனம் செலுத்தியது. இதற்கான நிதி; நெருங்கிய நண்பர்கள், உறவினர்களிடம் இருந்து கிடைத்தது.
சென்னைக்கு வெளியே விரிவாக்கிய போது திருப்பு முனை உண்டானது. தமிழ்நாட்டின் 37,000 தொடக்க பள்ளிகளில் 300 மட்டும் சென்னையில் உள்ளது.
நகரத்திற்கு வெளியே நிலை வேறாக இருந்தது. நகர்புறங்களின் அனுமானங்கள் செல்லுபடியாகவில்லை மற்றும் வெற்றிகான வரையறையும் மாறியது, என்கிறார்.
"நாங்கள் நீண்ட கால அளவை கொண்டிருக்க வேண்டியிருந்தது மற்றும் சிறிது முன்னேற அமைப்புடன் ஓயாமல் அழுத்தம் தர வேண்டியிருந்தது. அதை தான் செய்து கொண்டிருக்கிறோம்,” என்கிறார்.
அடிப்படை கல்வியை வலுவாக்கும் வகையில் கோவிட் தொற்று சூழலுக்கு பின் தமிழ்நாடு அரசு அறிமுகம் செய்த ’எண்ணும் எழுத்தும்’ திடத்தில் முதன்மை பங்குதாரராக தேர்வானது முக்கிய திருப்பமாக அமைந்தது.
இதன் பரப்பும் பிரம்மாண்டமாக இருந்தது: 37,000 பள்ளிகள், 2.25 லட்சம் மாணவர்கள், 65,000 ஆசிரியர்கள், 45000 பள்ளிகள் மற்றும் கல்வி நிர்வாகிகள். இதற்கான பலனும் அர்த்தமுள்ளதாக இருந்தது. பத்தாண்டுகளில் முதல் முறையாக தமிழ்நாடு, தேசிய சாதனை ஆய்வில் (NAS) பின் தங்கிய 10 மாவட்டங்களில் இருந்து மேலே வந்தது.
கல்வி நிலைக்கான ஆண்டு அறிக்கையில் மாநிலம் மேம்பட்ட முன்னேற்றத்தை கொண்டிருந்தது. கோவிட்டிற்கு முந்தைய நிலையை எட்டியதோடு, அதை விட கூடுதலாக கொண்டிருந்தது.

வாசிப்பு, எழுத்து மற்றும் கூட்டல், கழித்தல் உள்ளிட்டவற்றில் 7 முதல் 15 சதவீத முன்னேற்றம் இருப்பதாக உள்ளுக்குள் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பு தெரிவித்தது. இன்று ஆசிரியர் பயிற்சி விஜயங்கள் பெறும் பள்ளிகள் விகிதம் 86 சதவீதமாக அதிகரித்துள்ளது. ஆண்டு குறைந்தது 4 முதல் 6 முறை நிகழ்கிறது.
பள்ளி முதல் அன்று அல்லது முன்னதாக பாடப்புத்தகங்கள் பெறும் விகிதம் 99 சதவீதமாக உயர்ந்துள்ளது. இவை அமைப்பு நோக்கிலான மாற்றத்தை உணர்த்துகின்றன.
சவால்கள்
போட்டி முன்னரிமைகள் பல கொண்ட பெரிய அமைப்புடன் இணைந்து செயல்படுவது மற்றும் இந்த அமைப்புகளுடன் செயல்படக்கூடிய பொறுமை கொண்ட கொடையாளர்களை கண்டறிவது ஆகியவை இந்த அறக்கட்டளை பத்தாண்டுகளில் எதிர்கொள்ளும் சவால்களாக இருக்கின்றன.
“மாற்றம் நிகழ காலம் ஆகும். சிக்கல்கள், மற்றும் அடுக்குகள் இன்னும் சவாலாக இருக்கலாம். இவை எல்லாவற்றையும் மீறி, இவை செய்யப்பட வேண்டும் என்பதை புரிந்து கொள்ளும் நிறுவனர்கள் மற்றும் பங்குதாரர்களை பெற்றுள்ளோம். முன்னின்று வழி நடத்தும் குழுவினர் உள்ளனர். அடிப்படை கல்வி முக்கியம் என்பது அனைத்து மட்டத்திலும் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது,” என்கிறார்.
முன்னோட்ட திட்டங்கள் வளர்ச்சி அடைந்த நிலையில், ’மதி பவுண்டேஷன்’ விரிவடைந்து நிறுவன அளவிலான நிதியை ஈர்த்தது. கேட்ஸ் பவுண்டேஷன், செண்டரல் ஸ்கொயர் பவுண்டேஷன், கோத்ரெஜ் உள்ளிட்டவை ஆதிரிக்கின்றன. ’தி/நட்ஜ்’ கழகமும் ஆதரிக்கிறது.
தரவுகளுடன் மனித கதைகள் இணைந்திருக்கின்றன. தானாக ஓய்வு பெற நினைத்து, அதற்கான கடிதத்தை சமர்பித்த ஆசிரியர் ஒருவர், மதி பவுண்டேஷன் பயிற்சி அமர்வில் பங்கேற்ற பின் அதை திரும்ப பெற்றார், என்கிறார் மெர்லியா. மேலும், மூன்று ஆண்டுகள் பணியாற்றிவர், இதை திருப்தி அளிக்கும் காலம் என்று கூறியிருக்கிறார்.
வகுப்பறைகளில் இருந்து கற்றல் அச்சத்தை இது அகற்றியிருப்பதாக ஆசிரியர்கள் கூறுகின்றனர். மாணவர்கள், செயல்முறை சார்ந்த கற்றலில் ஈடுபடுகின்றனர். எட்டு ஆண்டுகள் தமிழ்நாட்டில் மட்டும் பணியாற்றிய நிலையில், மற்ற மாநிலங்களுக்கு விரிவாக்கம் செய்வதற்கு முன் தனது அனுமானங்கள் சரியானவை தானா என்பதை இந்த பவுண்டேஷன் தெரிந்து கொள்ள விரும்பியது. இப்போது மேகாலயா மற்றும் நாகாலாந்தில் செயபட்டு வருகிறது.
“அரசு அமைப்புகளை எப்படி கையாள்வது, மாநிலம் மற்றும் மாவட்டங்கள் இடையே நம்பகமான தரவு பாய்ச்சலை சாத்தியமாக்குவது தொடர்பான வரைவு புத்தகத்தை இந்த அமைப்பு கொண்டுள்ளது. ஏஐ கொண்டு டிஜிட்டல் பொருட்களையும் உருவாக்கி வருகிறது. இதே சூழலில் உள்ள அமைப்புகளுக்கு பொது சொத்தாக அமையும் என நம்புகிறது,” என்கிறார் மெர்லியா.
பெற்றோர் பங்களிப்பை, தற்போது 20,000 என்பதை அடுத்த ஐந்தாண்டுகளில் முப்பது லட்சமாக உயர்த்த திட்டமிட்டுள்ளது.
மூன்று பள்ளிகளில் துவங்கி இப்போது 38,000 பள்ளிகளுடன் இணைந்து செயல்படுகிறது. இந்த முறை தேசிய அளவில் விரிவாக்கப்பட்டால் இந்திய கல்வி அமைப்பு எப்படி இருக்கும்?
"அனைத்து முடிவுகளிலும் குழந்தைகள் நலனை மையமாக்க கொண்டதாக இருக்கச் செய்யும் வகையிலான செயல்திறன் மிக்க அரசு பொது பள்ளி அமைப்பாக இருக்கும்,” என்கிறார் மெர்லியா.
ஆங்கிலத்தில்: ரேகா பாலகிருஷ்ணன், தமிழில்: சைபர் சிம்மன்
Edited by Induja Raghunathan

