இந்தியாவின் பின்தங்கிய கிராமப்புறப் பெண்கள் ஆரோக்கியமாக பிரசவிக்க உதவும் மதுரை இளைஞர்!

செந்தில் குமார் நிறுவியுள்ள JioVio Healthcare நிறுவனத்தின் SaveMom வெவ்வேறு சாதனங்கள், ஆப் ஆகியவற்றின் மூலம் கர்ப்பிணிப் பெண்களுக்கு உதவுகிறது.

இந்தியாவின் பின்தங்கிய கிராமப்புறப் பெண்கள் ஆரோக்கியமாக பிரசவிக்க உதவும் மதுரை இளைஞர்!

Friday May 26, 2023,

6 min Read

மதுரையைச் சேர்ந்த செந்தில் குமார். இவர் ஒரு ஐடி பொறியாளர் மற்றும் தொழில்முனைவர். இவரின் சகோதரி மணிமாலா. அவருக்கு திருமணமாகி மதுரை அருகில் உள்ள் ஒரு கிராமத்தில் குடிபெயர்ந்தார்.

மணிமாலா கருவுற்றிருந்தபோது சரியான நேரத்தில் மகப்பேறு மருத்துவரைச் சென்று சந்தித்து மருத்துவ ஆலோசனை பெறவில்லை. இது நடந்தது 2016-ம் ஆண்டு. கர்பமாக இருந்த தனது சகோதரி மணிமாலா ஏன் மருத்துவமனைக்கு சரிவர செல்வதில்லை, இதனால் அவரது வயிற்றில் இருக்கும் கருவுக்கோ, அவருக்கோ ஆபத்து ஏற்பட்டுவிடுமோ என்று யோசித்தார் செந்தில். சகோதரியிடம் இதுபற்றி பேசியிருக்கிறார்.

1

மணிமாலா வசிப்பது கிராமத்தில். மருத்துவமனை செல்லவேண்டுமென்றால் நகரத்திற்கு வெகு தூரம் பயணிக்கவேண்டும். அப்படியே பாடுபட்டு அத்தனை தொலைவு சென்றாலும் மருத்துவரை சந்திக்க நீண்ட நேரம் காத்திருக்கவேண்டும். கர்பமான சமயத்தில் இந்த அலைச்சலை அவரால் சமாளிக்க முடியவில்லை என்று செந்திலுக்கு புரிந்தது.

இந்த பிரச்சனை தன் சகோதரிக்கு மட்டுமல்ல மற்ற பல கர்பிணிப்பெண்களுக்கும் இருக்கும் என புரிந்துகொண்ட செந்தில், இதற்குத் தீர்வுகாண முற்பட்டார்.

“என் சகோதரி சின்ன விஷயத்துக்கே ரொம்ப பயப்படுவாங்க. ஹாஸ்பிடல் போகணும்னா மொத்த குடும்பத்தையும் கூட்டிட்டுப் போவாங்க. எனக்கு அவங்க ஒழுங்கா ஹாஸ்பிடல் போகணும். அவங்க பத்தட்டத்தைப் போக்க ஏதாவது செய்யணும்னு யோசிச்சேன்,” என்கிறார்.

மணிமாலாவின் மருத்துவரை சந்தித்து செந்தில் பேசினார். பொதுவாக கர்ப்பிணிப்பெண்கள் செக்-அப் செய்யும்போது எந்த மாதிரியான பரிசோதனைகள் செய்யப்படும் என்பதைப் புரிந்துகொண்டார். இவற்றை செக்-அப் செய்துவிட்டு பின்னர் மருத்துவ ஆலோசனை பெற்று முடிக்க ஒரு பெண்ணுக்கு கிட்டத்தட்ட ஒரு நாள் ஆகிவிடுகிறது என்று புரிந்து கொண்டார். அதோடு, இப்படி மாதாமாதம் சென்றுவருவது கிராமப்புற பெண்களுக்கு சிரமமாக உள்ளது தெரிந்தது.

சகோதரியின் பிரச்சனையில் உருவான உன்னதமான தீர்வு

கர்ப்பிணிப்பெண்களுக்கு ரத்த சர்க்கரை அளவு, ரத்த அழுத்தம் போன்றவை முக்கியமாக பரிசோதனை செய்யப்படும் என்பது செந்திலுக்கு புரிந்தது. ரத்த அழுத்தத்தைக் கண்டறியும் மானிட்டர், ரத்த குளுக்கோஸ் அளவை கணக்கிடும் கருவி ஆகியவற்றை வாங்கினார். அதன் டிஸ்ப்ளே திரையை ப்ளூ சிப்பாக மாற்றினார்.

”என் சகோதரியோட பரிசோதனை முடிவை டாக்டருக்கு அனுப்பற வசதி இருக்கற மாதிரி ஒரு ஆப் உருவாக்கினேன். மருந்து எப்படி, எப்போ சாப்பிடணும்னு இந்த ஆப் நினைவுபடுத்தும். ஊட்டச்சத்து நிறைஞ்ச உணவை எடுத்துக்கறதுக்கு டிப்ஸ் கொடுக்கும்,” என விவரித்தார் செந்தில்.
Allokit

அதுமட்டுமா? அவசரமான சூழலில் மணிமாலாவின் கணவருக்கு அலர்ட் செல்லும்படியும் தேவைப்பட்டால் கார் புக் செய்யும்படியும் ஆப் வடிவமைத்தார் செந்தில்.

தொழில்நுட்பத் தீர்வுகள்

சிறியளவில் தொடங்கப்பட்ட இந்த முயற்சி மிகப்பெரிய சமூக நிறுவனமாக இன்ரு உருவெடுத்துள்ளது. இவரது யோசனையில் உதித்த JioVio Healthcare, SaveMom ஆகிய மகப்பேறு சுகாதாரத் தீர்வுகள், எத்தனையோ கர்ப்பிணிப் பெண்களுக்கு உதவுகிறது.

மதுரை மற்றும் பெங்களூருவைச் சேர்ந்த இந்த நிறுவனம் மூலம் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் உள்ள மலைவாழ் பகுதிகளைச் சேர்ந்த 36,000-க்கும் மேற்பட்ட கர்ப்பிணிப் பெண்கள் ஆரோக்கியமாக பிரசவிக்க உதவியுள்ளது. தற்போது 3 லட்சத்திற்கும் மேற்பட்ட தாய்மார்கள் இந்தத் தளத்துடன் இணைந்திருக்கிறார்கள்.

SaveMom தொடக்கத்துக்கு முன்

மதுரையைச் சேர்ந்த செந்தில், ஆரம்பத்தில் சாம்சங் நிறுவனத்தில் பணியாற்றினார். அதன்பிறகு, பெங்களுரு Qualcomm நிறுவனத்தில் சேர்ந்து 4ஜி, 5ஜி உள்ளிட்ட வயர்லெஸ் தொழில்நுட்பத்தில் பணியாற்றினார்.

மதுரையில் ஐடி செயல்பாடுகள் அதிகரிக்கவேண்டும் என்பதே அந்த நாட்களில் அவரது கனவாக இருந்தது. அதனால்,

“என் சகோதரியுடன் இணைந்து ஒவ்வொரு வாரக் கடைசியிலயும் மதுரைக்கு போவேன். யூஎன் ஏற்பாடு செய்யற டெக்னொவேஷன் சேலஞ்ச்ல கலந்துக்க 200 பெண்களுக்கு நாங்க உதவி செஞ்சோம். அவர்களுக்கு ஹேக்கத்தன் சேலஞ்சுல கலந்துற வாய்ப்பு கிடைச்சுது. ஆனா, இந்தப் பெண்களுக்கு பாஸ்போர்ட் இல்லாததால அமெரிக்க போகமுடியாததால், சான் ஃபிரான்சிஸ்கோலேர்ந்து ஒரு குழு பெங்களூரு வந்து போட்டி நடத்தினாங்க. திறமையான அந்தப் பெண்கள் சுலபமா ஜெயிச்சிட்டாங்க,” என்று பகிர்ந்துகொண்டார்.

வீடுதேடி கர்ப்பகால பரிசோதனைகள்

செந்தில் தனது சகோதரிக்காக உருவாக்கிய முயற்சி, முறையான சுகாதார வசதி கிடைக்காத சில இடங்களில் சிறந்த பலனளிக்கும் என்று நம்பினார்.

உலகளவில் கர்ப்பகால இறப்புகள் பற்றி ஆராய்ந்தபோது, இந்தியாவில் பிரசவத்தில் இறக்கும் பெண்களின் எண்ணிக்கையும், கருவில் இறக்கும் சிசுக்களில் எண்ணிக்கையும் செந்திலை மிகவும் பாதித்தது.

அதனால், தமிழ்நாட்டில் பின் தங்கிய கிராமங்கள் மற்றும் மலைவாழ் மக்கள் வசிக்கும் பகுதிகளை முதலில் ஆராய்ந்தார். ஊட்டியில் இருக்கும் ஒரு மலைக் கிராமத்தில் கர்ப்பிணிப் பெண்கள் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு செல்ல 10-12 கி.மீட்டர் பயணிக்கவேண்டிய அவலநிலை இருப்பதைத் தெரிந்துகொண்டார்.

“கர்ப்பிணிப் பெண் ஒருத்தரை நான் பார்த்து பேசினேன். அவங்களோட முதல் குழந்தை இறந்துடுச்சு. ரெண்டாவது தடவை கர்ப்பமா இருந்தாங்க. முதல் குழந்தை இறந்ததுக்கான காரணத்தைத் தெரிஞ்சுக்க ஆரம்ப சுகாதார நிலையம் போயிருந்தேன். ஆனா, அங்க குழந்தை பிறந்ததாகவும் அரசாங்கத்தின் 10,000 ரூபாய் நிதி உதவி பெற்றதாகவும் பதிவுல இருந்ததை பார்த்து அதிர்ந்து போனேன்,” என்கிறார்.

அந்தப் பெண்மணியின் தகவல்களை நகல் எடுத்துச் சென்று அவர்களிடம் காட்டினார் செந்தில். கர்ப்பிணிப் பெண்களின் பராமரிப்பிற்காக அரசாங்கம் பணம் வழங்கும் தகவலே அவர்களுக்குத் தெரியவில்லை என்பது ஆச்சரியமாக இருந்தது.

சரி, இந்த முயற்சிக்கு முழு கவனம் தேவை என முடிவெடுத்து, 2016ம் ஆண்டு Qualcomm வேலையை விட்டு விலகினார் செந்தில். கேரள தமிழக எல்லைப் பகுதியின் கிராமங்களில் இருந்த கர்ப்பிணிப் பெண்கள் பற்றிய தரவுகளைத் திரட்டினார். அங்கும் தரவுகள் துல்லியமாக இல்லை.

women

எனவே, முறையாக ஆரம்ப சுகாதார நிலையம் செல்லாத பெண்களுக்கு தொழில்நுட்பத்தில் உதவியுடன் பராமரிப்பு வழங்க முடிவு செய்தார். இப்படித்தான் JioVio உருவானது.

”நாங்க சுகாதாரப் பணியாளர்களுக்கு சாதனங்களையும் மொபைல் அப்ளிகேஷனையும் கொடுக்க ஆரம்பிச்சோம். அவங்க கர்ப்பிணிப் பெண்ணோட வீட்டுக்குப் போய் தரவுகளை டிஜிட்டல் முறையில சேகரிச்சு ப்ளூடூத் மூலமா மொபைலுக்கு அனுப்புவாங்க,” என விவரித்தார்.

டாக்டர் போர்டல் மூலமாக டாக்டர்கள் இந்தத் தகவல்களைப் பார்க்கலாம். அதன் அடிப்படையில் ரிஸ்க் அளவைக் கொண்டு தாய்மார்களை வகைப்படுத்துவார்கள். ரிஸ்க் அதிகமில்லாதவர்களுக்கு சுகாதாரப் பணியார்களே இரும்பு சத்து, ஃபோலிக் ஆசிட் மாத்திரைகளை விநியோகம் செய்வார்கள். ரிஸ்க் அளவு அதிகமிருப்பவர்களை அல்ட்ராசவுண்ட் போன்ற பரிசோதனைகளுக்கு மருத்துவமனைக்கு அழைத்து செல்வார்கள்.

துல்லியமான தகவல்கள்

கர்ப்பிணிப்பெண்களின் நிலை பற்றிய சரியான தரவுகளை பெற சிரமமாக இருந்ததாக செந்தில் கூறுகிறார். பெரும்பாலும் மலைப்பகுதிலில் வசிக்கும் இந்த கர்ப்பிணிப் பெண்களின் வீடுகளை அடைய பல கிமி தூரம் செல்லவேண்டி இருக்கும் என்பதால், சுகாதாரப் பணியாளர்கள் தாங்களே அக்கருவியை போட்டு, அல்லது தங்கள் சக ஊழியர்களிடம் எடுத்து அனுப்பி விடுவார்கள்.

இதைத் தவிர்க்க ஒவ்வொரு முறை பரிசோதனை செய்யும்போதும் சுகாதார பணியாளருக்கு 20 ரூபாய் ஊக்கத்தொகை வழங்கினோம்.

இதனால் தரவுகள் தவறாக கையாளப்படுவது ஓரளவிற்கு கட்டுப்படுத்தப்பட்டாலும்கூட இந்தப் பிரச்சனைக்கு முழுமையான தீர்வை உருவாக்கவேண்டும் என்று செந்தில் விரும்பினார்.

Allotricorder

சுகாதாரப் பணியாளர்களுக்கும் கர்ப்பிணிப் பெண்களுக்கும் இடையே தடையற்ற தொடர்பை ஏற்படுத்த விரும்பினார். சுகாதாரப் பணியாளர்கள் நேரே சென்று ஒவ்வொரு முறையும் செக் செய்வதைவிட, கர்ப்பிணிப்பெண்கள் அணிந்துகொள்ளக்கூடிய கருவி வாயிலாக தரவுகளை பெறுவது பெஸ்ட் வழி என முடிவெடுத்தார்.

கர்ப்பிணிப் பெண்கள் ஆபரணம் போல் அணிந்துகொள்ளும் வகையில் Allowear என்கிற ஸ்மார்ட் சாதனத்தை வடிவமைத்தேன். இது ஸ்மார்ட் வாட்ச் போலத்தான். எவ்வளவு நேரம் தூங்குகிறார்கள், எத்தனை அடி தூரம் நடக்கிறார்கள் என்று கணக்கிடுவதுடன் எப்போது மருந்து சாப்பிடவேண்டும் என்பதையும் நினைவுபடுத்தும். சுகாதாரப் பணியாளர் அந்த கர்ப்பிணிப் பெண்ணைப் பார்க்கப் போகும்போது தரவுகளை ப்ளூடூத் மூலம் சேகரித்து, மருத்துவர்கள் பார்வையிடுவதற்காக க்ளவுட் தளத்தில் பதிவேற்றம் செய்வார்கள்.

சில நேரங்களில் ஆபரணம் போன்ற இந்த கருவியை கர்ப்பிணிப் பெண்களின் கணவன்மார்கள் பயன்படுத்திய வேடிக்கை சம்பவங்களும் அரங்கேறியுள்ளன.

இந்தப் பிரச்சனைக்கு தீர்வுகாணும் வகையில் JioVio டிசைனர்கள் உள்ளூர் கலாச்சாரத்தை ஆய்வு செய்தார்கள். ஆதிவாசிப் பெண்கள் அணியும் ருத்திராட்சத்தைக் கண்டு வியந்து Allowear புதிய வெர்ஷனை வடிவமைத்தார்கள். கேரளாவின் வயநாடு பகுதியில் பச்சிளம் குழந்தைகள் இறப்பு விகிதம் அதிகம் என்பதால் இந்தப் புதிய முயற்சி அங்கு பலனளித்தது.

அதிக ரிஸ்க் இருக்கும் கர்ப்பிணிப் பெண்களுக்கு மட்டுமே தற்சமயம் இந்த அணிகலம் போன்ற கருவி வழங்கப்படுகிறது. குழந்தை பிறந்த பிறகு, குழந்தையின் ஆரோக்கியத்தைக் கண்காணிப்பதற்கு அவர்களுக்கு போடப்படுகிறது.

பின்னர், சுகாதாரப் பணியாளர்கள் நிறைய சாதனங்களை சுமந்து செல்வதைக் கட்டுப்படுத்தும் வகையில் Allotricoder என்கிற சிறிய சாதனத்தை JioVio வடிவமைத்தது. இந்த சாதனம் ரத்த அழுத்தம், ஆக்சிஜன் அளவு, குளுக்கோஸ் அளவு உள்ளிட்ட ஆறு முக்கிய பரிசோதனைகள் செய்யும்.

Allowear

அதேபோல், கர்ப்பிணிப் பெண்களின் எடையைக் கண்காணிக்க AlloBMI என்கிற சாதனத்தையும் JioVio வடிவமைத்தது.

JioVio சாதனத்தின் விலை 1,800 ரூபாய். அணிகலன் போல் அணியக்கூடிய சாதனத்தின் விலை 1,000 ரூபாய். இந்நிறுவனம் தமிழ்நாடு அரசு, மற்றும் உள்ளூர் ஏஜென்சிகளுடனும் என்ஜிஓ-க்களுடனும் இணைந்து 1000 நாட்கள் வரை பரமாரிப்பு வழங்க 1,000 ரூபாய் கட்டணம் வசூலிக்கும் வகையில் ஏற்பாடு செய்திருக்கிறது. இதில், தாய்மார்களுக்கும் பச்சிளம் குழந்தைகளுக்கும் பராமரிப்பு வழங்கப்படும் வகையில் மொத்தம் 15 செக்-அப்கள் செய்யப்படும். ஆண்டு சந்தா முறையில் 5 லட்ச ரூபாய் செலுத்தி ஒரு குறிப்பிட்ட மாவட்டம் இந்த வசதியைப் பயன்படுத்திக்கொள்ளலாம். இதன்மூலம் குறிப்பிட்ட எண்ணிக்கை என்றில்லாமல் எத்தனை பெண்கள் வேண்டுமானால் பலனடையலாம்.

முதலீடு, வருவாய் மற்றும் பலன்

JioVio நிறுவனம் 3 கோடி ரூபாய் வரை நிதி திரட்டியுள்ளது. பெங்களூரு, புனே ஆகிய பகுதிகளில் இருக்கும் ஒப்பந்ததாரர்களை தயாரிப்பாளர்களாக நியமித்து சாதனங்கள் தயாரிக்கப்படுகின்றன.

இந்நிறுவனம் மாதத்திற்கு 12-15 லட்ச ரூபாய் வரை வருவாய் ஈட்டுகிறது. 25 பேர் கொண்ட குழுவாக இயங்கி வருகிறது.

”வடகிழக்கு பகுதிகள்ல பச்சிளம் குழந்தைகள் உயிரிழக்கற விகிதம் அதிகம் இருக்கறதால SaveMom அங்கு அறிமுகப்படுத்தத் திட்டமிட்டிருக்கோம். கானா அரசாங்கத்துக்கூட புரிந்துணர்வு ஒப்பந்தம் கையொப்பமாகியிருக்கு,” என்கிறார் செந்தில் குமார்.

TDR World Health Organisation அமைப்பிடமிருந்து SaveMom SIHI Award வென்றுள்ளது. அத்துடன் NASSCOM Health Innovation Challenge 2.0 வென்றுள்ளது.

”ஒரு சில தருணங்களை வாழ்க்கையில மறக்கவே முடியாது. அப்படி ஒரு உணர்ச்சிப்பூர்வமான சம்பவம் என் வாழ்க்கையில நடந்துது. வயநாடு கிராமத்துக்கு என்னை ஒருமுறை கூப்பிட்டிருந்தாங்க. நான் அங்க போனதும் ஒரு பழங்குடி பொண்ணு என் கையில ஒரு பெண் குழந்தையைக் கொடுத்தாங்க. அந்தக் குழந்தை 3.1 கிலோ எடை இருந்துது. அந்த கிராமத்துல பிறந்த குழந்தை எதுவுமே 2 கிலோக்கு மேல இருந்ததில்லை. முதல் தடவையா ஒரு ஆரோக்கியமான குழந்தை பிறந்ததை அந்த கிராமமே கொண்டாடி சந்தோஷப்பட்டாங்க,” என்று செந்தில் அடைந்த நெகிழ்ச்சியை நம்மாலும் உணரமுடிந்தது.