இஸ்ரோ டெக்னீசியன் ஆன பானிபூரி வியாபாரி - ராம்தாஸ் மார்படேவின் அசாத்திய பயணம்!
கடின உழைப்பாலும், கல்வியாலும் வாழ்க்கையின் எப்பேர்பட்ட கனவையும் அடைய முடியும் என்பதை மெய்பித்து காட்டியுள்ளார் பானிபூரி வியாபாரியாக இருந்து இஸ்ரோவில் டெக்னீசியனாக பணிபுரியும் ராம்தாஸ் மார்படே.
வாழ்க்கையானது ஏற்ற இறக்கங்கள், இன்ப துன்பங்கள், கஷ்ட நஷ்டங்களால் நிறைந்தது. இன்பத்தில் மகிழும் மனிதன் துன்பத்தை எதிர்கொள்ளவும் பழகிக் கொள்ள வேண்டும் என்பது நியதி. ஆனால், மாற்றம் நிரந்தரமானது. என்றாவது ஒரு நாள் நமக்கு பிடித்தாற்போன்று வாழ்க்கை மாறும் என்ற எண்ணமே ஒவ்வொரு மனிதனின் ஓட்டத்திற்குமான காரணம். அப்படி தான், காலை பொழுதில் பானிபூரி வண்டியை தள்ளிக் கொண்டும், இரவில் தீவிரமாய் படிப்பதன் மூலம் அவரது வாழ்க்கையை மாற்றியமைத்துள்ளார் ராம்தாஸ் ஹேம்ராஜ் மார்படே. ஆம், இன்று அவர் நாட்டின் மதிப்புமிக்க நிறுவனமான இஸ்ரோவில் டெக்னீசியனாக பணிபுரிகிறார்.

உள்ளூர் தெருக்கள் முதல் லாஞ்ச்பேட்கள் வரை...
மகாராஷ்டிராவின் கோண்டா மாவட்டத்தின் திரோடா தாலுகாவில் உள்ள கைர்போடி என்ற சிறிய கிராமத்தைச் சேர்ந்தவர் ராம்தாஸ் ஹேம்ராஜ் மார்படே. அவருடைய தந்தை அரசுப் பள்ளியின் பியூனாகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். அவரது தாய் இல்லத்தரசி. குடும்ப கஷ்டத்திற்கு மத்தியில் ராம்தாஸின் படிப்புச் செலவுகளுக்களை அவர்களால் சமாளிக்க முடியவில்லை என்றாலும், அவருக்கு அசைக்க முடியாத ஆதரவையும் விடாமுயற்சியுடன் செயல்படுவதற்கான மனஉறுதியையும் அளித்தனர்.
பள்ளிப் படிப்பை முடித்த பிறகு, அவரால் கல்லுாரியில் சேர முடியவில்லை. நிதி நெருக்கடி இருந்தபோதிலும், அவர் கல்வியை கைவிடவில்லை. நேரடியாக கல்லுாரிக்கு சென்று பட்டப்படிப்பை தொடர முடியாத நிலையில் அவர், நாசிக்கில் உள்ள ஒய்.சி.எம் கல்லூரியில் தொலைத்துார கல்வி முறையில் தேர்வெழுதி இளங்கலைப் படிப்பை முடித்தார். அவருடைய படிப்பு செலவுகளுக்கும், குடும்பத்திற்கும் உதவுவதற்காக தெருக்களில் பானிபூரியை விற்றார். பகல் பொழுதில் பானிபூரியை விற்றநிலையில், இரவுகளை அவரது இலக்கை அடைவதற்காக புத்தகங்களில் மூழ்கி கடினமாக படித்தார்.
அவருடைய கனவினை அடைவதற்கும், வாய்ப்புகளை தனத்தாக்கி கொள்ள, பாடத்திட்டங்களை தாண்டி தொழில் திறன்களின் சக்தி முக்கியமானது என்பதை உணர்ந்த ராம்தாஸ், டிரோராவில் உள்ள ஐ.டி.ஐ-யில் பம்ப் ஆபரேட்டர்-கம்-மெக்கானிக் படிப்பில் சேர்ந்தார். அங்கு, மையவிலக்கு மற்றும் பரிமாற்ற பம்புகளை இயக்குவது முதல் நீர் சுத்திகரிப்பு நுட்பங்கள் மற்றும் எண்ணெய் உபகரண பராமரிப்பு வரை முக்கியமான தொழில்நுட்ப அறிவைப் பெற்றார்.
இஸ்ரோவின் வேலை வாய்ப்பு குறித்து வெளியாகும் செய்திகளை உன்னிப்பாக கவனித்து கொண்டே வந்துள்ளார். அவரது காத்திருப்பின் முடிவில், 2023ம் ஆண்டில், இஸ்ரோ பயிற்சியாளர்களுக்கான விண்ணப்பங்களுக்கு விண்ணப்பிக்குமாறு அறிவித்தபோது, ராம்தாஸ் தயக்கமின்றி விண்ணப்பித்தார்.
2024ம் ஆண்டில் நாக்பூரில் எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்றார். அதே ஆண்டு, ஆகஸ்ட் மாதம் ஸ்ரீஹரிகோட்டாவில் நடைபெற்ற திறன் தேர்விலும் தேர்ச்சி பெற்றார்.

கடந்த மாதம் ஒரு காலத்தில் தொலைதூரக் கனவாகத் தோன்றிய இஸ்ரோ பணியை நனவாக்கினார். ஆம், கடந்த மே மாதம் அதிகாரப்பூர்வமாக ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இஸ்ரோவின் விண்வெளி மையத்தில் பம்ப் ஆபரேட்டர்-கம்-மெக்கானிக்காக பணியில் சேர்ந்தார்.
ஒரு காலத்தில் பானிபூரி வண்டியில் பூரிகளை எண்ணி விற்றுகொண்டிருந்த ராம்தாஸ், இப்போது இஸ்ரோவின் செயல்பாட்டிற்கு அவசியமான பம்ப் மெக்கானிக்ஸின் சிக்கல்களைக் கையாளுகிறார். அவருடைய கதை இன்று அவரது சொந்த ஊருக்கு அப்பால் நாடு முழுவதும் அடைந்து, எண்ணற்ற இளைஞர்களுக்கு இன்ஸ்பிரேஷனாகியுள்ளார்.

