சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் வளர்ச்சியில் தமிழ்நாடு, மகாராஷ்டிரா, கர்நாடகா, உத்தரப் பிரதேசம் முன்னிலை!
டெலாயிட்டின் MSME எக்கோசிஸ்டம் குறியீடு 2025 (Deloitte MSME Ecosystem Index 2025)-இன் படி, மகாராஷ்டிரா, தமிழ்நாடு, கர்நாடகா, உத்தரப் பிரதேசம் ஆகிய நான்கு மாநிலங்கள் இந்தியாவின் MSME வளர்ச்சியில் முன்னணியில் உள்ளன.
இந்தியாவில் ஒரு சிறு தொழில் எந்த மாநிலத்தில் இயங்குகிறது என்பதே அதன் வளர்ச்சியை நிர்ணயிக்கும் முக்கிய காரணிகளில் ஒன்றாக மாறியுள்ளது. நிதி, திறமையான தொழிலாளர்கள், அடிப்படை வசதிகள், சந்தை அணுகல் போன்ற அம்சங்களில் மாநிலங்களின் வித்தியாசம் சிறு, குறு, நடுத்தர தொழில்களின் (MSME) வெற்றியை தீர்மானிக்கிறது.
டெலாயிட்டின் MSME எக்கோசிஸ்டம் குறியீடு 2025 (Deloitte MSME Ecosystem Index 2025)-இன் படி, மகாராஷ்டிரா, தமிழ்நாடு, கர்நாடகா, உத்தரப் பிரதேசம் ஆகிய நான்கு மாநிலங்கள் இந்தியாவின் MSME வளர்ச்சியில் முன்னணியில் உள்ளன.
மகாராஷ்டிரா 3.71 மில்லியன் MSME களை கொண்ட மாநிலமாக முதலிடத்தில் உள்ளது. மும்பையின் நிதி வலிமையும், புனேயின் உற்பத்தி மையங்களும், மேம்பட்ட துணை சேவை அமைப்பும் இதன் வெற்றிக்கு அடிப்படையாக உள்ளன.
தமிழ்நாடு, 2.17 மில்லியன் நிறுவனங்களுடன் இரண்டாம் இடத்தில் உள்ளது. பாரம்பரிய துணிநூல், வாகன உற்பத்தி மற்றும் வேளாண் சார்ந்த தொழில்கள் மாநிலத்தின் தொழில்துறை அடித்தளமாக உள்ளன.
கர்நாடகா, பெங்களூருவின் டிஜிட்டல் வலிமையால் இயக்கப்படும் மாநிலமாக திகழ்கிறது. SaaS, மின்சாதனங்கள், ஏற்றுமதி ஆகிய துறைகளில் புதிய தலைமுறை MSME-கள் வளர்ந்து வருகின்றன.
உத்தரப் பிரதேசம், "ஒன் டிஸ்ட்ரிக்ட் ஒன் ப்ரொடக்ட்" (One District, One Product) திட்டத்தின் மூலம் பாரம்பரிய கைவினை மற்றும் வேளாண் பொருட்களை மையப்படுத்தி வளர்ச்சியைப் பெற்றுள்ளது. இதன் பதிவுசெய்யப்பட்ட MSME-களின் எண்ணிக்கை 70 லட்சத்தை கடந்துள்ளது (IBEF தரவுப்படி).

பிராந்தியங்களுக்கு இடையே வேறுபாடுகளும் கொள்கை வகுத்தலும்:
இந்த நான்கு மாநிலங்களும் முன்னணியில் இருந்தாலும், நாட்டின் முழு MSME அமைப்பு இன்னும் சமமற்றதாகவே உள்ளது. இந்தியாவில் மொத்தம் 6.8 கோடி MSME கள் உள்ளன. ஆனால் அவற்றில் 68% வெறும் 10 மாநிலங்களில்தான் உள்ளன. சிக்கிம், மிசோரம், லடாக், லட்சத்தீவு போன்ற மாநிலங்களில் 20,000 MSME-களுக்கும் குறைவாகவே உள்ளன.
MSME துறை இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 30% பங்களிப்பு செய்கிறது; மொத்த ஏற்றுமதியில் 45% பங்குடன் 24 கோடி மக்களுக்கு வேலைவாய்ப்பையும் அளிக்கிறது. ஆனால், பெருநிறுவனங்களுடன் ஒப்பிடும்போது உற்பத்தி திறன் வெறும் 18% மட்டுமே.
இந்த இடைவெளியை குறைப்பதற்காக, மத்திய பட்ஜெட் (2025-26) MSME வளர்ச்சிக்காக ரூ.23,168 கோடி ஒதுக்கியுள்ளது – இது கடந்த ஆண்டைவிட 4.6% அதிகம். கடன் உத்தரவாதம், GST திருப்பிச் செலுத்தும் வேகத்தை அதிகரித்தல், ஸ்டார்ட்அப் இந்தியா மற்றும் திறன் இந்தியா திட்டங்களின் மூலம் திறன் மேம்பாடு போன்ற அம்சங்கள் கவனிக்கப்பட்டுள்ளன.
மகாராஷ்டிரா, தமிழ்நாடு, கர்நாடகா, உத்தரப் பிரதேசம் ஆகியவை முன்னணியில் இருந்தாலும், குஜராத், ராஜஸ்தான், மேற்கு வங்காளம் போன்ற மாநிலங்களும் துணிநூல், கைவினை, உணவுத் தொழில் துறைகளில் புதிய MSME களின் மையங்களாக உருவெடுத்து வருகின்றன.
