தாத்தா ‘இந்தியாவின் க்ரோசின் மனிதர்’ உருவாக்கிய மருந்தக நிறுவனத்தை அடுத்தக்கட்டத்துக்கு கொண்டு செல்லும் பேரன்!
ஜிவி.மசூர்கரால் 1970-களில் துவங்கப்பட்ட ENTOD ஃபார்மா நிறுவனத்தில், யுகே-வில் படித்த அவரது பேரன் நிகில் இணைந்து, மருந்தகத்துறையில் புதுமையாக்கத்தை புகுத்தி, அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.1000 கோடி நிகர வருவாய் கொண்ட நிறுவனமாக உருவாக்க இலக்கு வைத்துள்ளார்.
ஒருவரின் வாழ்நாளில் கண் சிகிச்சை என்பது நம் அனைவருக்கும் முக்கியமான ஒன்றாக அமைகிறது. இந்தியாவில் மட்டும் ஆண்டுக்கு 12 மில்லியன் கண்புரை அறுவை சிகிச்சை செய்யப்படுகின்றன.
விழித்திரை புண் மற்றும் பூஞ்சை கெராடிடிஸ் போன்றவை தவிர்க்கக் கூடிய பார்வை இழப்பை தொடர்ந்து உண்டாக்குகின்றன. எனினும், இந்த கோளாறுகள் பலவற்றுக்கு இன்னமும் செயல்திறன் மிக்க அல்லது அணுகக் கூடிய சிகிச்சைகள் இல்லை.
இந்த அதிகரிக்கும் இடைவெளியே ENTOD ஃபார்மசூட்டிகல்ஸ் நிறுவன செயல் இயக்குனர் நிகில் மசூர்கரை இயக்கி கொண்டிருக்கிறது.
“பல கண் கோளாறுகளுக்கு உலகம் செயல்திறன் மிக்க தீர்வுகளை எதிர்பார்க்கிறது. இந்த இடைவெளியை இந்தியாவில் மட்டும் அல்லாமல் உலக அளவில் நிரப்ப விரும்புகிறோம்,” என நிகில், எஸ்.எம்.பி ஸ்டோரியிடம் கூறினார்.

ENTOD ஃபார்மசூட்டிகல்ஸ் நிறுவன செயல் இயக்குனர் நிகில் மசூர்கர்
நிகிலின் தாத்தா ஜிவி.மசூர்கரால் 1970-களில் துவங்கப்பட்ட ENTOD பார்மாசூட்டில்கல்ஸ், கண் சிகிச்சை சார்ந்த பொருட்களுக்கான இந்தியாவின் ஆரம்ப ஒப்பந்ததாரர் நிறுவனங்களில் ஒன்றாக அமைகிறது.
50 ஆண்டுகளில் இந்நிறுவனம், கண் சிகிச்சை, இ.என்.டி, டெர்மடாலஜி உள்ளிட்ட துறைகளில் 250க்கும் மேலான பொருட்கள் கொண்ட, 1,000 உறுப்பினர்களுக்கும் மேலான நிறுவனமாக உருவாகியிருக்கிறது. ஆய்வு வசதிகளையும் பெற்றுள்ளது.
யுகேவில் உயர் கல்வி முடித்த நிகில், 2011ல் தாத்தாவின் நிறுவனத்தில் இணைந்தார். மும்பையை தலைமையகமாகக் கொண்ட இந்நிறுவனம், விழித்திரை புண் ஆற்றும் மருந்துகள், தீவிர கெரடோபதிகள், இன்சுலின் சார்ந்த ஆக்குலர் சிகிச்சை உள்ளிட்ட உலகத்தரம் வாய்ந்த ஃபார்முலேஷன்களை உருவாக்குகிறது. மேலும், மருந்து கண்டுபிடிப்பை வேகமாக்க ஏஐ நுட்பத்தையும் பயன்படுத்துகிறது.
இந்தியாவின் க்ரோசின் மனிதர் தொடங்கிய அறிவியல் பாரம்பரியம்
மசூர்கர் மருந்தக பாரம்பரிய பயணத்தில் நிகில் மூன்றாம் தலைமுறையில் வருகிறார். ஆனால், லாப நஷ்ட அறிக்கை, ஆய்வு கட்டமைப்பு போன்றவற்றுக்கு எல்லாம் முன்னர் நிறுவன விழுமியங்கள் உருவாக்கப்பட்டு விட்டதாக கூறுகிறார்.
“பணம், தொடர்புகள் அல்லது தொழில் சூழலில் இருந்து என் தாத்தா வரவில்லை. அறிவியல், பணிவு மற்றும் ஆர்வம் ஆகியவற்றை முதன்மையாக கொண்டு எல்லாவற்றையும் உருவாக்கினார். இந்த விழுமியங்களை இன்றளவும் காக்க முற்படுகிறோம்,” என்கிறார் நிகில்.
அவரது தாத்தா ஜிவி.மசூர்கர் இந்தியாவின் பதிவு செய்த முதல் மருந்தக வல்லுனர்களில் ஒருவராக திகழ்கிறார். 1960 மற்றும் 70 களில் அவர் இந்திய மருந்தக சந்தை உருவாக்கத்தில் முக்கிய பங்கு வகித்தார். துபர் இன்டெர்பர்ன் (க்ரூக்ஸ் இன்டெர்பெர்ன்) நிறுவனம் சார்பில் இந்தியாவுக்கு குரோசினை கொண்டு வந்ததால் ‘இந்தியாவின் க்ரோசின் மனிதர்’ என அழைக்கப்படுகிறார். வைட்டமின் டி ஃபார்முலேஷன் மற்றும் லேக்டோகாலமைன் ஆகியவற்றையும் அவர் தான் கொண்டு வந்தார்.
“மற்றவர்களுக்கு முன்னதாக மூலக்கூறுகளின் நீண்ட கால பலன்களை அடையாளும் காணும் ஆற்றல் அவருக்கு இருந்தது. இந்த அறிவியல் தொலைநோக்கை சார்ந்திருக்கிறோம்,” என்கிறார் நிகில்.

ஜிவி.மசூர்கர் - இந்தியாவின் க்ரோசின் மனிதர்
எனினும், இந்த குடும்பத்தின் தொழில்முனைவு வேர் இன்னமும் ஆழமாக உள்ளது. நிகிலின் கொள்ளுப் பாட்டி ருக்மா விட்டல் மசூர்கர் 1930-களிலேயே, தனி பெண்மணியாக சொந்த மூலிகை மருந்துகளை உண்டாக்கினார். அவரது மருத்துவ பசை பல கிராமங்களில் பயன்படுத்தப்பட்டது.
“அவரிடம் முதலீடு அல்லது ஆய்வுக்கூடம் இருக்கவில்லை. ஆனால், பிரச்சனைகளை தீர்க்கும் அறிவு மட்டும் இருந்தது. புதுமையாக்கம் என்பது தாக்கு பிடித்தலாகும். இந்த குணம் குடும்பத்தில் தொடர்கிறது,” என்கிறார்.
இந்த அறிவியல் ஆற்றல் மற்றும் தொழில்முனைவு கலந்த தன்மையே 1970 களில் ஜிவி.மசூர்கர் முன்னதாக ஓய்வு பெற்று ENTOD நிறுவனத்தை உருவாக்க வைத்தது. நிறுவனம் கண் சிகிச்சை மற்றும் டெர்மடாலஜியில் கவனம் செலுத்தியது.
புதுமையாக்க ஊக்கம்
நிகில் நிறுவனத்தில் இணைந்த போது, நிறுவனம் நம்பகமான பெயராக இருந்தாலும், புதுமையாக்கம் தன்மையில் நிலைத்திருக்கவில்லை. அதுவே அவரது தொலைநோக்காக இருந்தது.
“மருந்துகளை உற்பத்தி செய்ய மட்டும் விரும்பவில்லை. புதிய மருந்து வகைகளை உருவாக்க விரும்பினோம்,” என்கிறார்.
அதன் பிறகு, நிறுவனம் அதிகம் கவனிக்கப்படாத கண் கோளாறுகளுக்கான ஆய்வில் கவனம் செலுத்தி வருகிறது.
“தீவிர சிகிச்சை வழிகள் இல்லாத விழித்திரை புண் ஆற்றல் போன்ற பிரிவுகளில் கவனம் செலுத்தி வருகிறோம் என்கிறார். தீவிர கெராடோபதிகளுக்கான மேம்பட்ட மருந்துகள் மற்றும் இன்சூலின் சார்ந்த ஆக்குலர் சிகிச்சை ஆகியவற்றிலும் நிறுவனம் கவனம் செலுத்துகிறது.”
வேகமான கண்டறிதலுக்காக, நிறுவனம் ’ஜென் ஏஐ’ கொண்டு மாதிரிகளை உருவாக்கியிருக்கிறது.
“பல ஆண்டுகள் தேவைப்படும் ஆய்வை மாதங்களில் முடிக்க ஏஐ உதவுகிறது. எனினும், இறுதி அறிவியல் முடிவை எங்கள் குழுவே மேற்கொள்கிறது. ஏஐ ஒரு கருவி மட்டும் தான் விஞ்ஞானி அல்ல,” என்கிறார்.
பிற துறைகளில் கவனம்
கண் சிகிச்சைத் தவிர, டெர்மடாலஜி, சுவாச மற்றும் குழந்தை நல பிரிவுகளிலும் நிறுவனம் கவனம் செலுத்துகிறது.
“கண் சிகிச்சைப் போலவே இந்த துறைகளிலும் அறிவியல் ஆழம் மற்றும் நீண்ட கால பார்வை தேவை. எங்களால் உண்மையான அறிவியல் மதிப்பை உருவாக்க முடியும் துறைகளில் மட்டுமே ஈடுபடுகிறோம்,” என்கிறார் நிகில்.
இந்த துறைகளில் மேம்பட்ட மருந்துகளை உருவாக்க தேவையான ஆய்வுகள், மூலக்கூறு பணிகளை நிறுவனம் துவக்கியுள்ளது.
“இந்த விரிவாக்கம் அதிக மதிப்பு கொண்ட பிரிவுகளில் எங்கள் இருப்பை வலுவாக்கி, மேம்பட்ட மருந்தக புதுமையாக்கத்தில் எங்கள் நிலையை வலுவாக்குகிறது,” என்கிறார்.

எதிர்கால பாதை
நிறுவனம் தற்போது ரூ.500 கோடி வருவாய் கொண்டுள்ளது, 2018 முதல் 30 சதவீத வளர்ச்சி கண்டு வருகிறது. நிறுவனம் மேலும் வேகமான வளர்ச்சியை நாடுகிறது.
“குறுகிய காலத்தில், 4 முதல் 5 ஆண்டுகளுக்குள் ரூ.1000 கோடி நிகர வருவாய் கொண்ட நிறுவனமாக உருவாக வேண்டும் என்பது எங்கள் லட்சியம். வலுவான ஆர்கானிக் வளர்ச்சி இயந்திரத்தை உருவாக்கினாலும், அடுத்த கட்ட வளர்ச்சி ஆர்கானிக் அல்லாத விரிவாக்கம் சார்ந்தது,” என்கிறார்.
இதுவரை நிறுவனம் சொந்த நிதியில் இயங்கி வருகிறது. இந்நிறுவனம் சர்வதேச விரிவாக்கம் மற்றும் கையகப்படுத்தலை நாடும் நிலையில் இதில் மாற்றம் வரலாம்.
“இதற்கு முன் வெளி முதலீடு தேவைப்படவில்லை. ஆனால், வேகமான வளர்ச்சியை நாடும் போது, சரியான பங்குதாரர்களை ஏற்க தயாராக இருக்கிறோம். இன்று கடன் இல்லாத நிறுவனமாக உள்ளோம். இப்போது வியூக நோக்கிலான முதலீட்டாளர்களை நாடுகிறோம்,” என்கிறார் நிகில்.
நிறுவனம் தற்போது 20 நாடுகளில் இருப்பு கொண்டுள்ளது. இது முதல் கட்டம் மட்டுமே என்கிறார் நிகில். உலக அளவிலான மருந்துகள், கிளினிகல் வசதி விரிவாக்கம், ஐரோப்பா மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் ஆய்வு கூட்டு ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறோம் என்கிறார்.
“உற்பத்திக்காக மட்டும் அல்லாமல் புதுமையாக்கத்திற்காக இந்தியா அறியப்பட வேண்டும் என விரும்புகிறோம். பெரும்பாலான கண் சிகிச்சை கோளாறுகளுக்கு தீர்வு கண்டால் உலகம் இந்திய அறிவியலை நோக்கும் விதத்தை நாம் மாற்றலாம்” என்கிறார்.
ஆங்கிலத்தில்: திரிஷா மேதி, தமிழில்: சைபர் சிம்மன்
Edited by Induja Raghunathan

