செட்டிநாட்டு பாரம்பரிய நகைகளை மீட்டெடுக்கும் பெண்மணி - ‘மீனு சுப்பையா டைமண்ட்ஸ்’ வியத்தகு பயணம்!
சந்தையில் ஒரிஜினல் செட்டிநாட்டு நகைகள் அழிந்துவரும் நிலையை கண்ட மீனு சுப்பையா, ஒரு சிறிய பட்டறையாகத் தொடங்கிய இந்த முயற்சி இன்று சென்னை, கோவை, திருச்சி எனத் தமிழகம் முழுவதும் கிளைகளையும், அமெரிக்காவிலும் அலுவலகங்களையும் கொண்டு சர்வதேச அளவில் மிளிரும் ஒரு மிகப் பெரிய நிறுவனமாக வளர்ந்துள்ளது.
தமிழகத்தின் சிவகங்கை மாவட்டத்தில் அமைந்துள்ள காரைக்குடி என்றாலே நம் நினைவுக்கு வருவது வானளாவிய அரண்மனை போன்ற வீடுகளும், நாவூறும் செட்டிநாட்டு சமையலும் மட்டுமல்ல; அந்த மண்ணின் கலைநயம் மிக்க ஆபரணங்களும்தான். ஆனால், காலப்போக்கில் நவீனமயமாக்கல் என்ற பெயரில் அந்தப் பாரம்பரிய நகைகளின் அசல் தன்மை மங்கத் தொடங்கியது.
1993-ஆம் ஆண்டு, அமெரிக்காவின் ஜி.ஐ.ஏ நிறுவனத்தில் வைரங்களைப் பற்றிய உயர் கல்வியை முடித்துவிட்டு காரைக்குடி திரும்பிய நகை வடிவமைப்பாளர் மீனு சுப்பையாவுக்கு ஒரு பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. சந்தையில் செட்டிநாட்டு நகைகள் என்று விற்கப்படுபவை, அதன் நுணுக்கத்தையும் தரத்தையும் இழந்திருப்பதை அவர் உணர்ந்தார். அந்தத் தருணம்தான், செட்டிநாட்டு நகைகளின் உன்னதத்தை மீட்டெடுக்கும் ஒரு மாபெரும் பயணத்திற்கு விதையிட்டது.

கடல் கடந்து வணிகம் செய்து, உலகெங்கிலும் இருந்து அரிய கலைப் பொருட்களைத் தமிழகத்திற்குக் கொண்டு வந்த செட்டியார் சமூகத்தின் அடையாளம் அவர்கள் அணிந்த நகைகளில் இருந்தது. கோயில் கட்டடக்கலை, மயில், அன்னம், மாங்காய் மற்றும் கொடி வேலைப்பாடுகள் எனப் பிரம்மாண்டமான கலைத்திறன் கொண்டவை அந்த நகைகள்.
மரபு சிதைந்துவிடக் கூடாது என்ற உறுதியோடு, மீனு சுப்பையா தனது தந்தை எஸ்.எம்.சுப்பையாவுடன் இணைந்து ‘மீனு சுப்பையா டைமண்ட்ஸ்’ நிறுவனத்தைத் தொடங்கினார்.
ஒரு சிறிய பட்டறையாகத் தொடங்கப்பட்ட இந்த முயற்சி இன்று சென்னை, கோவை, திருச்சி எனத் தமிழகம் முழுவதும் கிளைகளையும், அமெரிக்காவில் கார்ப்பரேட் அலுவலகங்களையும் கொண்டு சர்வதேச அளவில் மிளிரும் ஒரு மிகப் பெரிய நிறுவனமாக வளர்ந்துள்ளது.
வெற்றியின் ரகசியம்
‘மீனு சுப்பையா டைமண்ட்ஸ்’ நிறுவனத்தின் வெற்றியின் ரகசியம், அதன் அசைக்க முடியாத கலை நேர்த்தியில் உள்ளது. பெரும்பாலான நகை நிறுவனங்கள் தயாராக உள்ள நகைகளை வாங்கி விற்பனை செய்வதில் கவனம் செலுத்தும் சூழலில், மீனு சுப்பையா நகைகளை வடிவமைப்பதில் இருந்து இறுதி மெருகூட்டல் வரை அனைத்தையும் தன் கட்டுப்பாட்டிலேயே வைத்திருக்கிறார்.

குறிப்பாக, வைர நகைகளில் குளோஸ் செட்டிங் எனப்படும் வேலைப்பாடு இவர்களின் தனிச்சிறப்பு. கல்லின் பிரகாசத்தையும் ஆயுளையும் அதிகரிக்கும் இந்த முறையில், கற்கள் பாதுகாப்பாகப் பொதிந்து வைக்கப்படுகின்றன.
இயந்திரங்களின் துணையின்றி, கைதேர்ந்த கலைஞர்களால் தங்கம் மெல்லிய தகடுகளாக அடிக்கப்பட்டு, நுணுக்கமான கருவிகளால் செதுக்கப்படும்போது, ஒவ்வொரு நகையும் தரத்துடன் ஜொலிக்கிறது.
சென்னையில் உள்ள இவர்களின் உற்பத்திப் பிரிவை மீனுவின் கணவர் கணேசன் சுப்பையா வழிநடத்துகிறார். இங்கு சோழ மற்றும் பாண்டிய நாடுகளைச் சேர்ந்த ஐந்தாம் தலைமுறை ஆசாரிகள் பணியாற்றுகிறார்கள்.
“எங்கள் பணியாளர்கள் வெறும் தொழிலாளிகள் அல்ல; அவர்கள் மறைந்து வரும் ஒரு கலாச்சார வரலாற்றைத் தாங்கிப் பிடிக்கும் கலைஞர்கள்,” என்கிறார் மீனு சுப்பையா.

மீனு சுப்பையா
புதியதாகச் சேரும் கலைஞர்களுக்கு ஆறு மாதம் முதல் ஒரு வருடம் வரை முறையான பயிற்சி அளிக்கப்பட்டு, நிறுவனத்தின் தரத்திற்கு அவர்கள் தயார் செய்யப்படுகிறார்கள். மூலப்பொருட்களை வாங்குவதில் இருந்து, நகையை மெருகேற்றுவது வரை ஒவ்வொரு நிலையிலும் நேர்மையும் நம்பிக்கையுமே தாரக மந்திரமாகப் பின்பற்றப்படுகிறது.
வேலைப்பாடுகள் எப்படி?
வரலாற்று ரீதியாகச் செட்டிநாட்டு நகைகள் பல்வேறு கலாச்சாரங்களின் சங்கமமாகத் திகழ்ந்தன. பர்மா மாணிக்கங்கள், இலங்கை நீலக் கற்கள் மற்றும் ஐரோப்பிய நுணுக்கங்கள் என அனைத்தையும் உள்வாங்கி அவை உருவாக்கப்பட்டன.
இந்தத் தொன்மையான கலை மொழியைப் பாதுகாக்க, மீனு சுப்பையா பல ஆண்டுகள் பழைய புகைப்படங்கள் மற்றும் தங்கள் சமூகததைச் பெரியவர்களின் நினைவுகளின் உதவியுடன் ஆய்வு செய்தார். அதன் விளைவாக, கண்டசரம், காசுமாலை, மற்றும் முல்லைச்சரம் போன்ற பழங்கால வடிவமைப்புகள் மீண்டும் உயிர் பெற்றன. இவர்களின் நகைகள் வெறும் ஆபரணங்கள் மட்டுமல்ல, கழுத்துரு மற்றும் கௌரி சங்கம் போன்ற நகைகள் செட்டிநாட்டுச் சமூகத்தின் ஆன்மீக மற்றும் கலாச்சார வேர்களைப் பிரதிபலிப்பவை.

நவீனத் தொழில்நுட்பம் வளர்ந்தாலும், கைவேலைப்பாட்டின் ஆன்மாவை இவர்கள் விட்டுக்கொடுக்கவில்லை. கணினி வழி வடிவமைப்புகள் துல்லியத்திற்காகப் பயன்படுத்தப்பட்டாலும், கலைநயமிக்க வேலைப்பாடுகளுக்கு மனிதக் கரங்களே இன்றும் பிரதானம்.
ஒரு நகையை வடிவமைக்க நான்கு முதல் எட்டு வாரங்கள் வரை ஆகிறது. ஒவ்வொரு கம்மலும் சமநிலையாக இருக்கிறதா, ஒவ்வொரு வளையலும் சரியாகப் பொருந்துகிறதா, ஒவ்வொரு நெக்லஸும் அணிவதற்கு எளிதாக இருக்கிறதா என்பது பலகட்ட சோதனைகளுக்குப் பிறகே உறுதி செய்யப்படுகிறது. தரம் என்பது வெறும் அழகு மட்டுமல்ல, அது அணிபவருக்குத் தரும் சௌகரியமும் கூட என்பது இவர்களின் நிலைப்பாடு.
வளர்ச்சி எப்படி?
கடந்த ஐந்து ஆண்டுகளில், மீனு சுப்பையா டைமண்ட்ஸ் ஆண்டுக்கு 14 முதல் 16 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. இந்தியா மட்டுமின்றி சிங்கப்பூர், மலேசியா, துபாய், அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து வரை இவர்களுக்கு வாடிக்கையாளர்கள் உள்ளனர்.

நடப்பு ஆண்டில், இவர்கள் 'விலாசம்', 'வம்சம்', மற்றும் 'மெனாயா' என மூன்று புதிய உட்பிரிவுகளை அறிமுகப்படுத்தியுள்ளனர். 'விலாசம்' பாரம்பரிய செட்டிநாட்டு வேலைப்பாடுகளையும், 'வம்சம்' தென்னிந்தியக் கோயில் கலை மற்றும் முகலாய பாணியையும், 'மெனாயா' நவீன உலகளாவிய ரசனைக்கு ஏற்ற எளிய வடிவமைப்புகளையும் வழங்குகின்றன.
“நாங்கள் டிரெண்டின் பின்னால் ஓடுபவர்கள் அல்ல. நாங்கள் கதைகளை உருவாக்குபவர்கள்,” என்று மீனு சுப்பையா பெருமையுடன் கூறுகிறார்.
இவர்களின் வணிகம் அறநெறி சார்ந்த கொள்முதலில் உறுதியாக உள்ளது. சுரங்கத்தில் இருந்து நகைக்கடை வரை ஒவ்வொரு கல்லும் நியாயமான முறையில் பெறப்படுவதை இவர்கள் உறுதி செய்கிறார்கள். அதற்கும் மேலாக, காரைக்குடியில் 'பெட்டகம்' என்ற பெயரில் ஒரு தனியார் அருங்காட்சியகத்தை மீனு சுப்பையா நிறுவியுள்ளார். இது செட்டிநாட்டு நகை வரலாற்றைப் பாதுகாக்கும் ஒரு கருவூலமாகத் திகழ்கிறது. பழைய புகைப்படங்கள், வரைபடங்கள் மற்றும் அசல் பழங்கால நகைகள் அங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
வருங்காலத்தில் இந்தியாவின் பெருநகரங்களில் புதிய கிளைகளைத் தொடங்கத் திட்டமிட்டுள்ள மீனு சுப்பையா, தனது நகைகளை ஒரு பாலமாகவே கருதுகிறார்.
“யாராவது தங்களின் பாட்டியின் நகையைக் கொண்டு வந்து, அதைச் சீரமைத்துத் தரும்படி எங்களிடம் ஒப்படைக்கும்போது, அந்தத் தருணத்தைத்தான் நாங்கள் உண்மையான வெற்றியாகக் கருதுகிறோம். அந்த நம்பிக்கைதான் எங்களின் பலம்,” என்கிறார் அவர்.
நகைகள் என்பது வெறும் ஃபேஷன் அல்ல; அது காலங்களைக் கடந்து நிற்கும் நினைவுகளின் பெட்டகம் என்பதை மீனு சுப்பையா டைமண்ட்ஸ் உலகுக்கு நிரூபித்து வருகிறது.
தமிழில்: ஜெய்
Edited by Induja Raghunathan

