18% பிரீமியத்தில் MilkyMist பங்குகள் பட்டியிலிடல்!
மும்பை பங்குச்சந்தை மற்றும் தேசியப் பங்குச் சந்தைகளில் ரூ.165-க்கு வர்த்தகம் தொடங்கியது. இது வெளியீட்டு விலையான ரூ.140-ஐ விட 17.85 சதவீதம் அதிகமாகும். தொடர்ந்து மும்பைப் பங்குச் சந்தையில் 29.60 சதவீதம் உயர்ந்து ரூ.181.45-ஐ எட்டியது.
பேக்கேஜ் செய்யப்பட்ட உணவுப் பொருட்கள் தயாரிப்பு நிறுவனமான மில்கி மிஸ்ட் டெய்ரி ஃபுட் லிமிடெட் நிறுவனத்தின் பங்குகள், அதன் வெளியீட்டு விலையான ரூ.140-ஐ விட கிட்டத்தட்ட 18 சதவீத பிரீமியத்தில் செவ்வாய்க்கிழமை பங்குச்சந்தைகளில் பட்டியலிடப்பட்டன.
மும்பை பங்குச்சந்தை மற்றும் தேசியப் பங்குச் சந்தைகளில் ரூ.165-க்கு வர்த்தகம் தொடங்கியது. இது வெளியீட்டு விலையான ரூ.140-ஐ விட 17.85 சதவீதம் அதிகமாகும். தொடர்ந்து மும்பைப் பங்குச் சந்தையில் 29.60 சதவீதம் உயர்ந்து ரூ.181.45-ஐ எட்டியது. இதையடுத்து நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ.13,968.81 கோடியாக உயர்ந்தது.
மில்கி மிஸ்ட் டெய்ரி ஃபுட் நிறுவனத்தின் ஐபிஓ, பங்கு விற்பனையின் கடைசி நாளான வியாழக்கிழமை 56.12 மடங்கு சந்தா பெற்றது. ரூ.1,553 கோடி மதிப்பிலான இந்த ஐபிஓவில், ஒரு பங்கின் விலை ரூ.133 முதல் ரூ.140 வரை நிர்ணயிக்கப்பட்டிருந்தது.
இந்த ஆரம்பப் பொதுப்பங்கு வெளியீட்டில் ரூ.1,428 கோடி வரையிலான புதிய பங்குகள் வெளியிடப்பட்டதுடன், ரூ.125 கோடி வரையிலான பங்குகள் ஆஃபர் ஃபார் சேல் முறையில் விற்பனை செய்யப்பட்டன. இந்திய பால் பொருட்கள் துறையைச் சேர்ந்த ஒரு நிறுவனத்தின் பிரதான பங்குச்சந்தை ஐபிஓ-க்களில் இதுவே மிகப்பெரியதாகும். இத்துறையில் ஏற்கெனவே பராக் மில்க் ஃபுட்ஸ், ஹாட்சன் அக்ரோ புராடக்ட் மற்றும் டோட்லா டெய்ரி ஆகிய நிறுவனங்கள் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ளன.
புதிய பங்குகள் மூலம் திரட்டப்படும் நிதி, நிறுவனத்தின் கடன்களை திருப்பிச் செலுத்துதல் அல்லது முன்கூட்டியே செலுத்துதல், தமிழ்நாட்டின் பெருந்துறையில் உள்ள உற்பத்தி ஆலையை விரிவுபடுத்தி நவீனமயமாக்குதல் மற்றும் குளிர்சாதன விநியோகக் கட்டமைப்பை வலுப்படுத்துதல் உள்ளிட்ட பணிகளுக்குப் பயன்படுத்தப்பட உள்ளது.
மேலும், வே புரோட்டீன் கான்சன்ட்ரேட், யோகர்ட் மற்றும் கிரீம் சீஸ் தயாரிப்பு ஆலைகளை அமைத்தல், ஐஸ்கிரீம் ஃப்ரீசர்கள் மற்றும் சாக்லேட் கூலர்களை நிறுவுதல் ஆகியவற்றுக்கும் நிதி பயன்படுத்தப்பட உள்ளது. இதன் ஒரு பகுதி பொதுநிறுவனத் தேவைகளுக்கும் ஒதுக்கப்படும்.
தமிழ்நாட்டின் ஈரோட்டை தலைமையிடமாகக் கொண்டு தொடங்கப்பட்ட மில்கி மிஸ்ட் நிறுவனம், பனீர், சீஸ், தயிர், யோகர்ட், வெண்ணெய், நெய், ஐஸ்கிரீம் உள்ளிட்ட மதிப்பு கூட்டப்பட்ட பால் பொருட்கள் தயாரிப்பில் கவனம் செலுத்தி வருகிறது. இந்நிறுவனம் திரவ பால் விற்பனைப் பிரிவில் செயல்படவில்லை.

