'அடுத்த 20 ஆண்டுளில் இந்தியாவில் முழு செமிகண்டக்டர் சூழலியலை உருவாக்க வேண்டும்’ - அஷ்வினி வைஷ்னவ்
செமிகான் 2.0 நாட்டின் உற்பத்தி, வடிவமைப்பு, ஆராய்ச்சி மற்றும் திறன் மேம்பாடுகளை விரிவுபடுத்துவதால், இந்தியாவின் குறைக்கடத்தி சூழலமைப்பை உருவாக்குவதற்கான 20 ஆண்டு கால தொலைநோக்குப் பார்வையை மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் எடுத்துரைத்தார்.
இந்தியாவில் செமிகண்டக்டர் துறையை உருவாக்கும் முயற்சி பல பத்தாண்டுகளாக நடைபெற்று வந்த நிலையில், தற்போது அந்தத் துறையை நிறுவுவதில் வெற்றி கிடைத்துள்ளதாக மத்திய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். அதேவேளையில், இது மிகப்பெரிய பயணத்தின் தொடக்கம் மட்டுமே என்றும், அடுத்த 20 ஆண்டுகளைக் கருத்தில் கொண்டு ஒட்டுமொத்த செமிகண்டக்டர் சூழலியலை உருவாக்க வேண்டும், என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
அஷ்வினி வைஷ்ணவ் இது தொடர்பாகக் கூறியதாவது,
“1960-களில் இருந்தே இந்தியாவில் செமிகண்டக்டர் துறையை உருவாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. இறுதியாக, தற்போது நமது நாட்டில் செமிகண்டக்டர் துறையை நிறுவுவதில் வெற்றி பெற்றுள்ளோம். ஆனால், இது ஒரு சில தொழிற்சாலைகளை அமைப்பதுடன் முடிந்துவிடக் கூடாது. இந்தத் துறையின் முழுமையான மதிப்புச் சங்கிலியையும் உருவாக்க வேண்டும்," என்றார்.
மணலில் இருந்து சிலிக்கான் இங்காட், அதிலிருந்து வெற்று வேஃபர், பின்னர் தயாரிக்கப்பட்ட வேஃபர், சிப் என செமிகண்டக்டர் உற்பத்தி பல கட்டங்களைக் கொண்டது. அதன் பிறகு, அந்தச் சிப்கள் பல்வேறு மாட்யூல்களிலும் இறுதிப் பொருட்களிலும் பயன்படுத்தப்படுகின்றன. எனவே, இந்த முழு மதிப்புச் சங்கிலியையும் இந்தியாவில் உருவாக்குவது மிகவும் முக்கியம்.
செமிகண்டக்டர் என்பது அடிப்படைத் தொழிலாகும். குளிர்சாதனப் பெட்டி, தொலைக்காட்சி போன்ற சாதனங்களில் இருந்து கார்கள், ரயில்கள், விமானங்கள், கணினிகள், செல்போன்கள் என ஏராளமான பொருட்களில் சிப்கள் பயன்படுத்தப்படுகின்றன. இதனால், சிப்களை உற்பத்தி செய்வதற்கான திறன் ஒரு நாட்டின் தொழில்துறை மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு மிகவும் முக்கியமானது.
ஒரு சிறிய விரல் நகத்தின் அளவிலான சிலிக்கான் தகட்டில் பத்தாம் வகுப்பு பாடப்புத்தகங்கள் அனைத்தையும் எழுத வேண்டும் என்று கற்பனை செய்து பாருங்கள். மனிதர்களால் செய்ய முடியாத அளவுக்கு மிக நுணுக்கமான பணியாக அது இருக்கும். இதுபோன்ற மிகத் துல்லியமான பணிகளைச் செய்ய மிகவும் சிறப்பு வாய்ந்த இயந்திரங்கள் தேவைப்படுகின்றன.

"செமிகண்டக்டர் துறையில் நாம் அடுத்த கட்டத்துக்குச் செல்ல வேண்டும். அதனால்தான் பிரதமர் நரேந்திர மோடியும் நான்கு அல்லது ஐந்து ஆண்டுகளை மட்டும் சிந்திக்காமல், அடுத்த 20 ஆண்டுகளை மனதில் கொண்டு செயல்பட வேண்டும் என்று வழிகாட்டியுள்ளார். அடுத்த 20 ஆண்டுகளைக் கருத்தில் கொண்டு முழுமையான செமிகண்டக்டர் சூழலியலை உருவாக்க வேண்டும்,” என்றார்.
செமிகண்டக்டர் துறைக்கான அரசின் இரண்டாம் கட்டத் திட்டமான ‘Semicon 2.0’-க்கு மத்திய அமைச்சரவை கடந்த ஜூலை மாதம் ரூ.1.27 லட்சம் கோடி நிதி ஒதுக்கீட்டுக்கு ஒப்புதல் அளித்தது. இதன் கீழ் சிப் வடிவமைப்பு, செமிகண்டக்டர் இயந்திரங்கள் மற்றும் மூலப்பொருட்கள், சிப் உற்பத்தி ஆலைகள், ATMP மற்றும் OSAT பேக்கேஜிங், ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, திறன் மேம்பாடு உள்ளிட்ட துறைகளில் கவனம் செலுத்தப்படுகிறது.
‘Semicon 1.0’ திட்டத்தின் கீழ் ஜூலை மாதத்துக்குள் 12 திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டிருந்தது. இத்திட்டங்களில் ரூ.1.64 லட்சம் கோடிக்கும் அதிகமான முதலீடு மேற்கொள்ளப்பட உள்ளது. மைக்ரான், கேன்ஸ் மற்றும் CG Semi ஆகிய நிறுவனங்கள் ஏற்கெனவே வர்த்தக ரீதியிலான உற்பத்தியைத் தொடங்கியுள்ளன. இந்தியாவின் முதல் சிலிக்கான் ஃபேப் ஆலை 2028-ல் செயல்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
செமிகண்டக்டர் சிப் வடிவமைப்பு மற்றும் திறன் மேம்பாட்டிலும் இந்தியா முன்னேறி வருவதாக அரசு தெரிவித்துள்ளது. 24 சிப் வடிவமைப்புத் திட்டங்களுக்கு நிதியுதவி வழங்கப்பட்டுள்ளதுடன், 105 ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் மற்றும் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு மின்னணு வடிவமைப்பு தானியங்கி கருவிகளுக்கான அணுகல் வழங்கப்பட்டுள்ளது. இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை நகரங்களைச் சேர்ந்த மாணவர்கள் ஏற்கெனவே 250-க்கும் மேற்பட்ட சிப்களை வடிவமைத்துள்ளதாகவும், கடந்த நான்கு ஆண்டுகளில் 85,000 செமிகண்டக்டர் பொறியாளர்கள் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

