‘2030-க்குள் தமிழ்நாட்டை $1லட்சம் கோடி ஜிடிபி பொருளாதார மாநிலம் ஆக்குவோம்’ - முதல்வர் ஸ்டாலின்!

தமிழ்நாடு முதலீட்டாளர்களின் முதல் முகவரியாக மாறுவதை மாநில அரசு குறிக்கோளாக கொண்டு செயல்படுகிறது என்றும் தொழில் துவங்க ஏற்ற சுழலை உருவாக்க பல்வேறு திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளதையும் முதல்வர் ஸ்டாலின் தொழில்துறையினர் நிகழ்ச்சியில் தெரிவித்தார்.
168 CLAPS
0

பண்பாட்டின் முகவரியாக இருக்கும் தமிழ்நாடு, முதலீட்டாளர்களின் முதல் முகவரியாக மாற வேண்டும் எனும் நோக்கத்துடன் தமிழ்நாடு அரசுத் தொழில் துறையினரை ஈர்க்கும் வகையில் செயல்பட்டு வருவதாக முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

2030ம் ஆண்டிற்குள் தமிழ்நாட்டை ஒரு லட்சம் கோடி டாலர் உள்நாட்டு மொத்த உற்பத்தி கொண்ட மாநிலமாக உருவாக்கும் நோக்கத்தைக் கொண்டிருப்பதாகவும், தொழில் துறையினர் தேவையான அனைத்து அனுமதிகளையும் உடனுக்குடன் பெறும் வகையில் ஒற்றைச்சாளர இணையதளம் 2.0 துவக்கியுள்ளதாகவும் முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

தொழில்துறை சார்பில் சென்னையில் நடத்தப்பட்ட முதலீட்டாளர்களின் முதல் முகவரி –தமிழ்நாடு எனும் நிகழ்ச்சியில் தலைமை உரை நிகழ்த்திய முதல்வர் ஸ்டாலின் இவ்வாறு கூறினார்.

தமிழ்நாட்டில் முதலீடுகள் மற்றும் தொழில்நிறுவனங்களை ஈர்க்கும் வகையில், தமிழ் நாடு அரசு சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் பன்னாட்டு தொழில் நிறுவங்களின் பிரதிநிதிகள் பங்கேற்றனர். மாநில தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, சி.ஐ.ஐ தலைவர் சி.கே.ரங்கநாதன் உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியில் தலைமை உரை ஆற்றிய முதல்வர் ஸ்டாலின்,

பண்பாட்டு முகவரியாக திகழும் தமிழ்நாடு முதலீட்டாளர்களின் முகவரியை மாறும் வகையில் செயல்படுவதை மாநில அரசு நோக்கமாகக் கொண்டிருப்பதாகத் தெரிவித்தார்.

கொரோனா நெருக்கடியான சூழலில் ஆட்சிக்கு வந்த நிலையில், நிதி நெருக்கடியையும் எதிர்கொண்டு செயல்பட்டதை முதல்வர் குறிப்பிட்டார்.

உலகளவில் தொழில் துறை பாதிக்கப்பட்டிருந்தாலும், தமிழ்நாட்டு பொருளாதாரம் புத்தியிர் பெற்று இயங்கத் துவங்கியுள்ளதாக குறிப்பிட்ட முதல்வர் ஸ்டாலின், முந்தைய திமுக ஆட்சியில் முதலீடுகள் மேற்கொள்ள இந்தியாவிலேயே தமிழ்நாடு சிறந்த மாநிலமாக இருந்தது என்றும், தற்போது தெற்காசியாவிலேயே தொழில் துவங்க சிறந்த இடமாக தமிழ்நாடு விளங்க வேண்டும் என்பதே அரசின் லட்சியம் என்றும் தெரிவித்தார்.

இணையதளம் 2.0

2030ம் ஆண்டிற்குள் ஒரு லட்சம் கோடி அமெரிக்க டாலர் உள்நாட்டு மொத்த உற்பத்தி (ஜிடிபி) கொண்ட மாநிலமாக தமிழ்நாட்டை உருவாக்குவதே அரசின் குறிக்கோள் என்று குறிப்பிட்ட முதல்வர், தொழில் துவங்குவதை எளிதாக்கவும், உகந்த சூழலை உருவாக்கிடவும் உறுதிக் கொண்டிருப்பதாக தெரிவித்தார்.

தொழில் துவங்குவதற்கான அனைத்து அனுமதிகளையும் எளிதாக பெற்று, திட்டத்தைத் துவங்கி நிறுவனத்தை நிறுவும் வகையில், ஒற்றைச்சாளர இணையதளம் 2.0 துவங்கப்பட்டுள்ளதாக ஸ்டாலின் தெரிவித்தார்.

தற்போதுள்ள முதலீட்டாளர்கள் மற்றும் புதிய முதலீட்டாளர்களுக்கு உதவும் வகையில் 24 துறைகளின் 100 சேவைகள் கொண்ட மேம்படுத்தப்பட்ட இணையதளமாக இது அமைந்துள்ளது. இணைய முறையில் தொழில் துறையினர் விண்ணப்பங்கள் பெறப்பட்டு, உரிய துறையால் பரிசீலிக்கப்பட்ட பின் காணொலி வாயிலாக உரையாடல் நடத்தப்படும்.

மேலும், இந்த ஒற்றைச்சாளர் இணையதளம் வாயிலாக கூடுதலாக 210 சேவைகள் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் கிடைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது

தட்டாமல் திறக்கும்!

தமிழ்நாட்டில் தொழில் துவங்க திட்டமிட்டதுடன் உங்கள் சிந்தனை செயலுக்கு வரும் வகையில் சூழலை உருவாகியுள்ளோம் என்றும், தட்டுங்கள் திறக்கும் என்பார்கள், தட்டாமலேயே தமிழ்நாடு அரசின் கதவுகள் திறக்கும் என உறுதி அளிப்பதாகவும் முதல்வர் குறிப்பிட்டார்.

ஒற்றைச்சாளர் இணையதள செயல்பாட்டை முதல்வர் தானே நேரில் கண்காணிப்பேன் என்றும் தெரிவித்தார். புதிய முதலீடுகளை ஈர்க்கும் நோக்கத்தை நிறைவேற்ற உலகத்தரமான உள்கட்டமைப்பு வசதிகளை உருவாக்குவோம் என்றும் தெரிவித்தார்.

தொழிற்சாலைகள் அதிகம் அமைந்துள்ள வல்லம், கிருஷ்ணகிரி, திருப்பூர் ஆகிய இடங்கள் தொழிலாளர்கள் பணிபுரியும் இடத்திலேயே வசிக்கும் வகையில் குடியிருப்புப் பகுதிகளை அமைக்க ஆயத்தப்பணிகள் நடைபெற்று வருகிறன.

மேலும், 500 கோடி ரூபாய் அளவில் தொழில் மேம்பாட்டு நிதி உருவாக்க உத்தரவிட்டுள்ளதாகவும், இதன் மூலம் தொழில் பூங்காக்கள், நிறுவனங்களுக்குத் தேவையான உள்கட்டமைப்பு வசதிகள், புத்தாக்க மையங்கள், ஆய்வு மையங்கள் அமைக்கப்படும் என்றும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.

தொழில்புரட்சி 4.0

வளந்து வரும் தொழில்களான மின்வாகன் உற்பத்தி, காற்றலை, தகவல் தொழில்நுட்பம், தகவல் தரவுகள் மையங்கள் போன்ற துறைகளுக்கும் தமிழ்நாடு அரசு முக்கியத்துவம் அளிக்க உள்ளது.

தொழில்புரட்சி 4.0 வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளும் வகையில், தமிழ்நாட்டில் உள்ள சிறு மற்றும் குறு தொழில் நிறுவனங்கள், ஐஓடி, 3டி பிரிண்டிங் உள்ளிட்ட நவீன நுட்பங்களைப் பயன்படுத்தி மதிப்புக்கூட்டல் சேவைகளை வழங்க வேண்டும் என்றும் முதல்வர் கேட்டுக்கொண்டார்.

ஜெனரல் எலெக்ட்ரி நிறுவனம், திறன்மிகு மையம் அமைக்க டிட்கோ நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளதாகக் கூறிய முதல்வர் ஸ்டாலின், விமான இயந்திரங்களுக்கு தேவைப்படும் உபகரணங்களை தயாரிப்பதற்கான தொழில்நுட்பம் இதில் உருவாக்கப்படும் என்றார்.

தமிழ்நாட்டில் முதலீடு செய்பவர்களின் அனுபவத்தை எளிதாக்க ஏற்றுமதி கொள்கை, மருந்து பொருட்கள் கொள்கை, உயிரி நுட்பக்கொள்கை, ஆய்வுப் பணிகளை ஊக்குவிக்கும் கொள்கை ஆகியவற்றையும் தமிழ்நாடு அரசு வெளியிட திட்டமிட்டுள்ளது.

முந்தைய திமுக ஆட்சியில் திருவண்ணாமலை மாவட்டத்தில் Sez நிறுவனத்தின் தொழிற்சாலை மூலம் 32,000 பேர் வேலைவாய்ப்பு பெற்றிருப்பது மகிழ்ச்சி அளிப்பதாகக் கூறிய முதல்வர், இதே நிறுவனம் திண்டிவனத்தை ஆறாயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்க ஒரு தொழில் திட்டத்தை துவக்க புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்திருப்பதாக தெரிவித்தார்.

மாநிலத்தில் மருத்துவ ஆக்சிஜன் உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில் அளிக்கப்பட்டும் சலுகையின் பயனாக, ஐநாக்ஸ் நிறுவனம் 200 எம்டி திரவ ஆக்சிஜன் உற்பத்தி மையத்தை ஓசுரில் அமைக்க உள்ளது.

புதிய முதலீடுகள்

தொழில் துவங்க 35 புதிய நிறுவனங்கள் தமிழ்நாடு அரசுடன் ஒப்பந்ததில் கையெழுத்திட்டுள்ளன என்றும், இதன் மூலம் 17,141 கோடி முதலீடு கிடைக்கும் என்றும், 55 ஆயிரம் வேலைவாய்ப்பு உருவாக்கப்படும் என்றும் முதல்வர் தெரிவித்தார்.

9 திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது என்றும், இதன் மூலம் ரூ.4,250 கோடி முதலீடு கிடைக்கும் என்றும் தெரிவித்தார். 5 நிறுவனங்களின் வணிக உற்பத்தி துவக்கி வைக்கப்பட்டுள்ளது என்றும் முதல்வர் தெரிவித்தார்.

இன்று உறுதி செய்யப்பட்டுள்ள ஒப்பந்தங்கள் மூலம், 49 திட்டங்கள் வாயிலாக ரூ. 28,508 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது என்று முதல்வர் தெரிவித்தார்.

பரவலான தொழில் வளர்ச்சியால், அனைத்து மாவட்டங்களும் வளர்ச்சி காண்பதோடு, இளைய சமுதாயத்தினர் தங்கள் இல்லம் அருகிலேயே வேலைவாய்ப்பு பெற முடியும் என்றும் நம்பிக்கை தெரிவித்த முதல்வர், அனைவருக்கும் உயர்கல்வி, சமூக மேம்பாடு, தொழில் வளர்ச்சி ஆகிய மூன்றும் ஒரே நேரத்தில் சீரான வளர்ச்சி பெற வேண்டும் என்றும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.

Latest

Updates from around the world