2025ல் இந்தியர்கள் விரும்பிச் சாப்பிட்ட உணவுகள் என்ன? - ஸ்விக்கி வெளியிட்ட ருசிகர பட்டியல்!
2025ம் ஆண்டில் இந்தியர்கள் ஆன்லைனில் அதிகம் ஆர்டர் செய்த உணவுப் பட்டியலில் பிரியாணி முதலிடத்தில் உள்ளதாக ஸ்விக்கி தெரிவித்துள்ளது. இந்தாண்டு மட்டும் ஸ்விக்கியில் சுமார் 9.3 கோடி பிரியாணிகள் ஆர்டர் செய்யப்பட்டுள்ளன.
பிரியாணி மீதான இந்தியர்களின் காதலுடன் வேறு எந்த உணவும் போட்டி போட்டு ஜெயித்துவிட முடியாது என்பது ஸ்விக்கியின் 2025ம் ஆண்டிற்கான அறிக்கை மூலம் மீண்டும் உறுதியாகியுள்ளது.

சாப்பிட்டுக் கொண்டாடிய இந்தியர்கள்
வீட்டு உணவைவிட ஹோட்டல்களில் சாப்பிடுவது என்பது எப்போதுமே மக்களுக்கு மகிழ்ச்சி தருகின்ற விசயம்தான். அதிலும் அலைச்சல் இல்லாமல், வேலையைக் கெடுத்துக் கொள்ளாமல் வீட்டில் இருந்தபடியே, நினைத்த நேரத்தில் பிடித்தமான ஹோட்டல்களில், பிரியமான உணவுப் பதார்த்தங்களை ஆர்டர் செய்து சாப்பிடுவதென்றால் கேட்கவா வேண்டும். அப்படித்தான், கடந்த ஆண்டுகளைப் போலவே இந்தாண்டும் விதவிதமான உணவுகளைச் சாப்பிட்டு, கொண்டாடித் தீர்த்து விட்டனர் நம் மக்கள்.
2025ம் ஆண்டு இன்னும் சில தினங்களில் முடிய உள்ள நிலையில், ஸ்விக்கி வாயிலாக அவர்கள் இந்தாண்டு என்னென்ன உணவுகளை ஆர்டர் செய்து சாப்பிட்டார்கள் என்ற விபரத்தை, ருசியான பட்டியலாக வெளியிட்டுள்ளது இந்தியாவின் முன்னணி உணவு டெலிவரி செய்யும் நிறுவனமான ஸ்விக்கி.
- 2025ம் ஆண்டில் இந்தியா 93 மில்லியன் பிரியாணிகளை ஆர்டர் செய்துள்ளது. அதாவது, ஒவ்வொரு நொடிக்கும் 3.25 ஆர்டர்கள் (அதாவது ஒவ்வொரு நிமிடத்திற்கும் 194 பிரியாணி ஆர்டர்கள்) பதிவாகியுள்ளன.
- ஒரு தசாப்தமாக, அதாவது தொடர்ந்து 10 ஆண்டுகளாக பிரியாணி இந்தப் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.
- இதில் சிக்கன் பிரியாணி மட்டும் சுமார் 57.7 மில்லியன் ஆர்டர்கள் வந்துள்ளன.
- இந்தப் பட்டியலில் இரண்டாம் இடத்தில் 44.2 மில்லியன் ஆர்டர்களுடன் பர்கர் உள்ளது. பிற்பகல் 3 மணியிலிருந்து மாலை 7 மணி வரையிலான காலகட்டத்தில் பர்கர் அதிகம் ஆர்டர் செய்யப்பட்டுள்ளன.

4வது இடத்தில் தோசை
சைவ மற்றும் அசைவ உணவுப் பிரியர்கள் போட்டி போட்டு பர்கரை ஆர்டர் செய்து சாப்பிட்டுள்ளனர் என்பது, 6.3 மில்லியன் சிக்கன் பர்கர்களும், 4.2 மில்லியன் வெஜ் பர்கர்களும் ஆர்டர் செய்யப்பட்டிருப்பதன் மூலம் தெரிய வருகிறது.
- நள்ளிரவு 12 மணி தொடங்கி, அதிகாலை 2 மணி வரையிலான காலகட்டத்தில் அதிகம் ஆர்டர் செய்யப்பட்ட உணவாக 2.3 மில்லியன் ஆர்டர்களுடன் சிக்கன் பர்கர் முதலிடத்தில் உள்ளது.
- மூன்றாவது இடத்தில் பீட்சா உள்ளது. இந்தாண்டு சுமார் 40.1 மில்லியன் பீட்சாக்களை ஆர்டர் செய்து சாப்பிட்டுள்ளனர் இந்தியர்கள்.
- தோசை இந்தப் பட்டியலில் நான்காவது இடத்தில் உள்ளது. சுமார் 26.2 மில்லியன் தோசை ஆர்டர்கள் செய்யப்பட்டதாக ஸ்விக்கி தெரிவித்துள்ளது.

சமோசாவும், அட்ராக் சாய்-யும்
காலை, மதியம் மற்றும் இரவு என்று மட்டுமில்லாமல், இடைப்பட்ட நேரங்களிலும் விதவிதமான சிற்றுண்டிகளை ஆர்டர் செய்து சாப்பிட்டுள்ளனர் இந்தியர்கள்.
- சிற்றுண்டியாக இந்தாண்டு சுமார் 3.42 மில்லியன் சமோசாக்களை ஆர்டர் செய்து சாப்பிட்டுள்ளனர் இந்தியர்கள்.
- அட்ராக் சாய் (Adrak chai), அதாங்க நம்ம ஊரு இஞ்சி டீ, இந்தாண்டு 2.9 மில்லியன் ஆர்டர்களைப் பெற்றுள்ளது.
- உள்ளூர் உணவுகளின் மீதான ஆசை இந்தாண்டு பலமடங்கு அதிகரித்துள்ளதாக ஸ்விக்கி அறிக்கை கூறுகிறது. அதன்படி, முந்தைய ஆண்டுகளைவிட, இந்தாண்டு பஹாரி உணவு வகைகள் 9 மடங்கும், மலபாரி, ராஜதானி, மல்வாணி மற்றும் பிற பிராந்திய விருப்ப உணவுகள் இரண்டு மடங்கும் ஆர்டர் செய்யப்பட்டுள்ளன.

சாப்பிட்டு சாப்பிட்டு சாதனை
வெளியே சாப்பிடுவதன் மூலம் சுமார் ரூ.774 கோடியை மிச்சப்படுத்திய இந்தியர்கள், அப்படிச் சாப்பிடுவதன் மூலம் மகிழ்ச்சியாக இருப்பதாக ஸ்விக்கி அறிக்கை கூறுகிறது.
- பெங்களூருவைச் சேர்ந்த ஒரு வாடிக்கையாளர் ஒருவர், ஒரே ஒரு உணவகத்தில் ஒரே ஆர்டரில் சுமார் 3 லட்சம் ரூபாய்க்கு உணவு ஆர்டர் செய்து சாதனை படைத்துள்ளார்.
- இதேபோல், மும்பையைச் சேர்ந்த ஒருவர் ஒரே நாளில் 1, 26,000 ரூபாய்க்கு உணவுகளை ஆர்டர் செய்துள்ளார். அன்னையர் தினத்தன்று அவர் இந்த ஆர்டரை செய்ததாக ஸ்விக்கி தெரிவித்துள்ளது.
- ஹைதராபாத்தைச் சேர்ந்த ஒரு வாடிக்கையாளர் 67 டிரை ப்ரூட் குக்கீஸ் கிப்ட் பாக்ஸை, ரூ.47,106க்கு ஆர்டர் செய்து வாங்கியுள்ளார். இது ஒரே சமயத்தில் அதிக தொகை கொண்டு செய்யப்பட்ட ஆர்டர் என ஸ்விக்கி கூறியுள்ளது.
- அதேபோல், மும்பையைச் சேர்ந்த ஒருவர், இந்தாண்டு மட்டும் சுமார் 3,196 முறை உணவு ஆர்டர் செய்து, இந்தாண்டில் அதிக ஆர்டர் செய்தவர் என்ற பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ளார். அதாவது ஒரு நாளைக்குச் சராசரியாக 9 முறை உணவு ஆர்டர் செய்து சாப்பிட்டுள்ளார் இந்நபர்.
- கடந்தாண்டைவிட இந்தாண்டு காதலர் தினத்தன்று 130 சதவீதம், அதிக ஆர்டர்கள் வந்ததாக ஸ்விக்கி தெரிவித்துள்ளது. இதில் குறிப்பாக பெங்களூரு, டெல்லி, மும்பை மற்றும் ஹைதராபாத் உள்ளிட்ட நகரங்களில் அதிக ஆர்டர்கள் குவிந்துள்ளன.

சென்னைப் பெண் முதலிடம்
வாடிக்கையாளர்களை ஏமாற்றாத வகையில் டெலிவரிமேன்கள் பறந்து பறந்து உணவுகளை ஆர்டர் செய்ததாக பாராட்டியுள்ளது ஸ்விக்கி.
- இந்தாண்டு ஸ்விக்கி டெலிவரிமேன்கள், சுமார் 1.24 பில்லியன் கிலோமீட்டர்களைக் கடந்து சென்று, தனது வாடிக்கையாளர்களுக்கு சூடாகவும், அதே சமயத்தில் உரிய நேரத்திலும் உணவுகளை டெலிவரி செய்துள்ளனர்.
- இதில், பெங்களூருவைச் சேர்ந்த முகமது ரஸிக் என்ற டெலிவரிமேன் மட்டும், 11,718 ஆர்டர்களை டெலிவரி செய்துள்ளார். இந்தப் பட்டியலில், பெண்கள் பிரிவில் சென்னையைச் சேர்ந்த பூங்கொடி என்பவர், 8,196 ஆர்டர்களையும் டெலிவரி செய்துள்ளார்.

பிரியாணி என்பது எமோசன்
ஸ்விக்கியின் இந்த அறிக்கை குறித்து ஸ்விக்கி மார்க்கெட் பிளேஸ் சிஇஓ, ரோகித் கபூர் கூறுகையில்,
“இந்தியாவை பொறுத்தவரை உணவு என்பது வெறும் உணவு மட்டுமல்ல, அது உணர்வு சம்பந்தப்பட்டது. அவசரமான உணவு, ஆறுதல் தருவதாகவும், தூங்குவதற்கு முன் வரும் பசி, வயிற்றோடு மனதை நிரப்புவதாகவும் அமையும். இதுதான் இந்தியாவில் ஸ்விக்கி என் இதயத்திற்கு நெருக்கமானதற்குக் காரணம்.”
93 மில்லியன் பிரியாணிகள் ஆர்டர் செய்யப்பட்டிருப்பது என்பது, உலகளாவிய உணவு வகைகளுக்கான வளர்ந்து வரும் பசி அல்லது உள்ளூர் விருப்பங்களை மீண்டும் கண்டுபிடிப்பது மட்டுமல்ல. அந்த எண்களுக்குக் கீழே என்ன மாதிரியான நினைவுகள், தருணங்கள் மற்றும் மனநிலை இருந்துள்ளது, அதனை எப்படியெல்லாம் மக்கள் உணவுடன் கொண்டாடியுள்ளனர் என்பதைக் காட்டுகிறது.
ஒவ்வொரு நாளும் ஸ்விக்கியில், இந்தக் கதைகளைக் காணவும், அன்றாட மகிழ்ச்சிகளின் ஒரு பகுதியாக இருக்கவும் நாங்கள் அதிர்ஷ்டசாலிகள், எனத் தெரிவித்துள்ளார்.

