ஒரு இரவுக்கு 35,000 டாலர்: விண்வெளிக்கு சுற்றுலா ட்ரிப் செல்ல நாசா ஏற்பாடு!
அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா சர்வதேச விண்வெளி நிலையத்தை வணிக பயன்பாடுகளுக்கும் தனியார் விண்வெளி வீரர்களுக்கும் 2020-ம் ஆண்டு முதல் திறக்க உள்ளது. ஒரு வருடத்திற்கு இரண்டு தனியார் விண்வெளி வீரர்கள் 30 நாட்கள் வரை தங்க அனுமதி வழங்கப்படும்.
சுற்றுலா மற்றும் இதர வணிக பயன்பாடுகளுக்காக சர்வதேச விண்வெளி நிலையத்தை திறக்க உள்ளதாக நாசா சமீபத்தில் அறிவித்துள்ளது. இதன் மூலம் 2020-ம் ஆண்டு முதல் சுற்றுலா பயணிகள் ஒரு இரவிற்கு 35,000 டாலர் செலுத்தி விண்வெளிக்கு சுற்றுலா செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.
சர்வதேச விண்வெளி நிலையத்தை சுற்றுலாவிற்கு ஏற்ப அமைப்பதற்காக தனியார் நிறுவனங்கள் இணைத்துக்கொள்ளப்படுகிறது. இந்த அறிவிப்பு நியூயார்க்கின் NASDAQ பங்குச் சந்தையில் வெளியிடப்பட்டது. நாசா தலைமை நிதி அதிகாரி ஜெஃப் டிவிட் உள்ளிட்ட மூன்று மூத்த அதிகாரிகள் கூறும்போது,
”வணிக ரீதியான வாய்ப்புகளுக்காக சர்வதேச விண்வெளி நிலையம் திறக்கப்படும்,” என்றனர்.
மனிதர்களை 2024-ல் நிலவிற்கு அனுப்பவேண்டும் என்கிற நாசாவின் நோக்கத்தில் கவனம் செலுத்தியே இந்த முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. சர்வதேச விண்வெளி நிலையத்தைப் பராமரிக்க ஒரு ஆண்டிற்கு 3-4 பில்லியன் டாலர் செலவிடப்படுகிறது. தனியார் துறைகளிடம் சில குறிப்பிட்ட பணிகளை ஒப்படைப்பதன் மூலம் நாசா அதன் முக்கிய நோக்கங்களுக்காக நேரம், பணம், வளங்கள் உள்ளிட்டவற்றைச் செலவிடமுடியும்.
நாசா விதிமுறைகளின்படி தனியார் நிறுவனங்களுக்கு தயாரிப்பு, மார்கெட்டிங் அல்லது பரிசோதனைககளுக்கு சர்வதேச விண்வெளி நிலையத்தில் நேரமும் இடமும் ஒதுக்கப்படும். மேலும் தேவையிருக்கும் பட்சத்தில் இந்நிறுவனங்கள் சர்வதேச விண்வெளி நிலையத்தின் வளங்கள் மற்றும் விண்வெளி வீரர்களின் நிபுணத்துவத்தைப் பயன்படுத்திக்கொள்ளலாம் என ’தி வெர்ஜ்’ தெரிவிக்கிறது.
2020-ம் ஆண்டு இறுதியில் தனியார் விண்வெளி வீரர்களும் நிறுவனங்களால் விண்வெளிக்கு அனுப்பப்படலாம் என்பதே இதில் சுவாரஸ்யமான அம்சமாகும்.
இந்த முயற்சியின் வாயிலாக எட்டும் தூரத்தில் விண்வெளி அமையும் என்றாலும் இதற்காக மிகப்பெரியத் தொகை செலவிட நேரும். ஒட்டுமொத்த விமானத்தின் விலை ஒரு சீட்டிற்கு 50 மில்லியன் டாலர் என ’லைவ் மிண்ட்’ குறிப்பிடுகிறது.
”இதன் கட்டணம் ஒரு இரவிற்கு ஒரு விண்வெளி வீரருக்கு சுமார் 35,000 டாலர் ஆகும். ஆனால் இத்துடன் ஹில்டன் அல்லது மேரியட் புள்ளிகள் கிடைக்காது,” என்றார் ஜெஃப்.
சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு ஆண்டு ஒன்றிற்கு இரண்டு தனிப்பட்ட பயணங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும். இவை ஒவ்வொன்றும் 30 நாட்களுக்கு நீடிக்கும். சர்வதேச விண்வெளி நிலையத்தைச் சென்றடைவதற்கான பணிகளை Space X, Boeing ஆகியவை மேற்கொண்டு வருகிறது.
விண்வெளியை வர்த்தக ரீதியாக மாற்றுவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய விண்வெளி நிலையம் 12 நிறுவனங்களை நியமித்துள்ளது. தனியார் விண்வெளி அமைப்பை சர்வதேச விண்வெளி நிலையத்துடன் இணைக்கலாம். அல்லது பூமியின் குறைந்த கோளப்பாதையில் இயக்கலாம் என்பதே திட்டம். இந்த வசதியானது ஆராய்ச்சி தொடர்பான ஆய்வகமாகவோ அல்லது தனியார் பார்வையாளர்களின் பகுதியாகவோ செயல்படும்.
’தி வெர்ஜ்’ உடனான உரையாடலில் NanoRacks சிஇஓ ஜெஃப் மேன்பர் பகிர்ந்துகொள்கையில்,
“சர்வதேச விண்வெளி நிலையம் அடுத்த பத்தாண்டுகள் சுற்றுப்பாதையில் இருக்கலாம் என விண்வெளி நிலையம் எதிர்பார்க்கிறது. இதில் வர்த்தக ரீதியான ப்ராஜெக்டுகளில் கவனம் செலுத்தவும் சுற்றுலா ஏற்பாடு செய்யவும் நாசாவின் ஆதரவுடன் முதல் வணிகரீதியான தளத்தை உருவாக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. எனவே இது ஒரு முக்கியமான முன்னெடுப்பாகும். இது ஒரு புதிய துவக்கமாக அமையும்,” என்றார்.
ஆங்கில கட்டுரையாளர்: கிருஷ்ணா ரெட்டி | தமிழில் : ஸ்ரீவித்யா