வட இந்தியாவில் சென்னை நியூபெர்க் டயக்னாஸ்டிக்ஸ் விரிவாக்கம் -மகாஜன் இமேஜிங் அண்ட் லேப்ஸுடன் கூட்டு முயற்சி!
இந்தக் கூட்டாண்மை மூலம் வட இந்தியாவின் 7 மாநிலங்களில் நோயியல் (Pathology), மரபணு சார்ந்த பரிசோதனைகள் (Genomics), சுகாதார நலப் பரிசோதனைகள் (Wellness) உள்ளிட்ட மருத்துவப் பரிசோதனை சேவைகளை விரிவுபடுத்த நியூபெர்க் டயக்னாஸ்டிக்ஸ் திட்டமிட்டுள்ளது.
வட இந்தியாவில் நோயியல் மற்றும் ஒருங்கிணைந்த மருத்துவப் பரிசோதனை சேவைகளை விரிவுபடுத்தும் வகையில், சென்னையைத் தலைமையிடமாகக் கொண்ட 'நியூபெர்க் டயக்னாஸ்டிக்ஸ்' (Neuberge Diagnostics) நிறுவனம், 'மகாஜன் இமேஜிங் அண்ட் லேப்ஸ்' நிறுவனத்துடன் உத்திசார் கூட்டு முயற்சியில் (Joint Venture) இணைந்துள்ளது.
இந்தக் கூட்டாண்மை மூலம் வட இந்தியாவின் 7 மாநிலங்களில் நோயியல் (Pathology), மரபணு சார்ந்த பரிசோதனைகள் (Genomics), சுகாதார நலப் பரிசோதனைகள் (Wellness) உள்ளிட்ட மருத்துவப் பரிசோதனை சேவைகளை விரிவுபடுத்த நியூபெர்க் டயக்னாஸ்டிக்ஸ் திட்டமிட்டுள்ளது.
இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் மருத்துவப் பரிசோதனை சேவை நிறுவனங்களில் ஒன்றான நியூபெர்க் டயக்னாஸ்டிக்ஸ், இந்தியா மட்டுமின்றி ஐக்கிய அரபு அமீரகம், தென்னாப்பிரிக்கா மற்றும் அமெரிக்காவிலும் செயல்பட்டு வருகிறது. மகாஜன் இமேஜிங் அண்ட் லேப்ஸ் நிறுவனம் வட இந்தியாவில் 35 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவத்தைக் கொண்ட ஒருங்கிணைந்த மருத்துவப் பரிசோதனை மையங்களின் வலையமைப்பாக உள்ளது.

பல்வேறு மருத்துவப் பரிசோதனைகள்
நியூபெர்க் டயக்னாஸ்டிக்ஸ் நிறுவனத்தின் நோயியல், மரபணுவியல், மருத்துவ மற்றும் செயல்பாட்டு மேலாண்மை அனுபவம், பல்வேறு நாடுகளில் பெற்றுள்ள அனுபவம், தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் கட்டமைப்பு ஆகியவற்றுடன், மகாஜன் இமேஜிங் அண்ட் லேப்ஸின் கதிரியக்கவியல் (Radiology), அணுக்கரு மருத்துவம் (Nuclear Medicine), PET-CT மற்றும் உயர் தொழில்நுட்ப மருத்துவப் பரிசோதனை அனுபவம் ஒருங்கிணைக்கப்பட உள்ளது.
மகாஜன் நிறுவனத்துக்கு டெல்லி தேசியத் தலைநகர் பிராந்தியம் (Delhi NCR) மற்றும் ஜெய்ப்பூர் பகுதிகளில் வலுவான செயல்பாட்டு தளம் உள்ளது.
வட இந்தியாவின் 7 மாநிலங்களுக்கு பிரத்யேக கூட்டாளியாக நியூபெர்க் செயல்பட உள்ளது. மகாஜன் நிறுவனத்தின் பிராந்திய வலையமைப்பையும், ஏற்கெனவே உள்ள நோயியல் பரிசோதனை வசதிகளையும் பயன்படுத்தி நியூபெர்க் தனது சேவைகளை விரிவுபடுத்தும்.
இதன் ஒரு பகுதியாக, நொய்டா, லக்னோ மற்றும் ஜம்முவில் ஏற்கெனவே செயல்பட்டு வரும் ஆய்வகங்களில் தனது செயல்பாடுகளை வலுப்படுத்தவும், அவற்றை ஒருங்கிணைக்கவும் நியூபெர்க் நிறுவனம் மகாஜன் நிறுவனத்துடன் இணைந்து செயல்பட உள்ளது.
12 முதல் 14 சதவீதம் வளர்ச்சி
இந்தியாவில் மருத்துவப் பரிசோதனைத் துறை தற்போது வழக்கமான பரிசோதனைகளைத் தாண்டி, நோய் தடுப்பு, சிறப்பு மருத்துவப் பரிசோதனை மற்றும் தனிநபருக்கு ஏற்ற துல்லிய மருத்துவப் பரிசோதனைகள் (Precision Diagnostics) நோக்கி விரிவடைந்து வருகிறது.
இந்தியாவின் ஒழுங்கமைக்கப்பட்ட மருத்துவப் பரிசோதனை நிறுவனங்களின் வருவாய், 2027-ஆம் நிதியாண்டில் 12 முதல் 14 சதவீதம் வரை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக இந்திய முதலீட்டு தகவல் மற்றும் கடன் மதிப்பீட்டு நிறுவனமான ஐசிஆர்ஏ (ICRA) மதிப்பிட்டுள்ளது.
நலவாழ்வு பரிசோதனைகள், சிறப்பு மருத்துவப் பரிசோதனைகள் மற்றும் பெருநகரங்களுக்கு அப்பாற்பட்ட பகுதிகளில் சேவை விரிவாக்கம் ஆகியவை இதற்கு முக்கிய காரணிகளாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.
இந்த வாய்ப்பைப் பயன்படுத்தும் வகையில், ஆய்வகக் கட்டமைப்பு, மாதிரி சேகரிப்பு வசதிகள் மற்றும் உயர் தொழில்நுட்ப பரிசோதனைகளில் முதலீடு செய்ய நியூபெர்க் திட்டமிட்டுள்ளது.
நோயியல், கதிரியக்கவியல் ஒருங்கிணைப்பு
இந்தக் கூட்டாண்மையின் மூலம் நோயியல், கதிரியக்கவியல், அணுக்கரு மருத்துவம் மற்றும் மரபணுவியல் ஆகிய துறைகளில் கூடுதல் ஒருங்கிணைப்பை ஏற்படுத்த இரு நிறுவனங்களும் நடவடிக்கை எடுக்க உள்ளன.
மகாஜன் இமேஜிங் அண்ட் லேப்ஸின் சிக்கலான மருத்துவப் பரிசோதனைகளில் உள்ள அனுபவத்துடன் நியூபெர்க் நிறுவனத்தின் நோயியல் மற்றும் மரபணுவியல் திறன்கள் இணைக்கப்பட உள்ளதால், வட இந்தியாவில் ஒருங்கிணைந்த மருத்துவப் பரிசோதனை சேவைகளை விரிவுபடுத்த முடியும், என எதிர்பார்க்கப்படுகிறது.
மகாஜன் நிறுவனத்தைப் பொறுத்தவரை, நியூபெர்க் நிறுவனத்தின் செயல்பாட்டு அளவு மற்றும் கட்டமைப்பு வசதிகள் அதன் அடுத்தகட்ட வளர்ச்சிக்கு உதவும்.
கூட்டு நிறுவனத்தின் செயல்பாடுகளுக்கான தலைமைச் செயல் அதிகாரியாக கபீர் மகாஜன் நியமிக்கப்பட்டுள்ளார். நிறுவனத்தின் செயல்பாடுகள் மற்றும் வளர்ச்சித் திட்டங்களை அவர் வழிநடத்த உள்ளார்.
நியூபெர்க் டயக்னாஸ்டிக்ஸ் நிறுவனத்தின் நிறுவனர், தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் டாக்டர் ஜி.எஸ்.கே. வேலு கூறியதாவது,
“மகாஜன் இமேஜிங் அண்ட் லேப்ஸுடன் மேற்கொண்டுள்ள இந்தக் கூட்டாண்மை, நியூபெர்க் நிறுவனத்தின் வளர்ச்சிப் பயணத்தில் முக்கியமான கட்டமாகும். 35 ஆண்டுகளுக்கும் மேலான பாரம்பரியத்தையும், வட இந்தியாவில் வலுவான நிலைப்பாட்டையும் கொண்ட மருத்துவ நிறுவனமாக மகாஜன் உள்ளது," என்றார்.
அதன் வலுவான மருத்துவ அடித்தளமும், பிராந்தியத்தில் நிலைநிறுத்தப்பட்டுள்ள செயல்பாடுகளும், வட இந்தியாவில் எங்களது நோயியல் சேவைகளை வலுப்படுத்துவதற்கும், ஒருங்கிணைந்த மருத்துவப் பரிசோதனை சேவைகளை உருவாக்குவதற்கும் ஏற்ற கூட்டாளியாக மகாஜனை மாற்றியுள்ளது.
”மகாஜனின் அடித்தளத்துடன் நியூபெர்க் நிறுவனத்தின் நோயியல், மரபணுவியல், நலவாழ்வு பரிசோதனைத் திறன்கள், டிஜிட்டல் கட்டமைப்பு மற்றும் செயல்பாட்டு அனுபவத்தை இணைப்பதன் மூலம், வட இந்தியாவில் விரிவான மருத்துவப் பரிசோதனை சேவைகளை உருவாக்க முடியும்,” என்றார்.

மகாஜன் இமேஜிங் அண்ட் லேப்ஸின் நிறுவனர் மற்றும் தலைவர் டாக்டர் ஹர்ஷ் மகாஜன் கூறியதாவது,
“மருத்துவப் பரிசோதனைத் துறை எந்த திசையில் செல்கிறது என்பதை அடிப்படையாகக் கொண்டே நியூபெர்க் நிறுவனத்துடன் இணையும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. கதிரியக்கவியல், நோயியல் அல்லது மரபணுவியல் ஆகியவை தற்போது தனித்தனியாக செயல்படும் துறைகளாக இல்லை.”
மருத்துவ முடிவுகளை எடுப்பதற்கு கதிரியக்கப் படங்கள், நோயியல் பரிசோதனைகள், மூலக்கூறு பரிசோதனைகள் மற்றும் மரபணுவியல் தகவல்கள் ஆகியவை ஒன்றாகப் பரிசீலிக்கப்படுவது அதிகரித்து வருகிறது.
கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக கதிரியக்கவியல் மற்றும் இமேஜிங் துறையில் நாங்கள் வலுவான அனுபவத்தை உருவாக்கியுள்ளோம். கடந்த சில ஆண்டுகளாக நோயியல் சேவைகளையும் வேகமாக விரிவுபடுத்தி வருகிறோம்.
நோயியல் மற்றும் மரபணுவியல் எங்களது மருத்துவப் பரிசோதனைப் பயணத்தின் ஒருங்கிணைந்த பகுதிகளாக உள்ளன. நியூபெர்க் உடனான இந்தக் கூட்டாண்மை மூலம் கூடுதல் அளவிலான செயல்பாடு, கட்டமைப்பு மற்றும் நிபுணத்துவத்தைப் பெற்று இந்தத் திறன்களை மேலும் விரைவாக விரிவுபடுத்த முடியும்.
ஒவ்வொரு வசதியையும் தனித்தனியாக உருவாக்க வேண்டிய அவசியமின்றி, விரிவான மருத்துவச் சேவையை வழங்க இந்தக் கூட்டாண்மை உதவும். மகாஜன் நிறுவனத்தின் நோயியல் திறன்களை தடையற்ற முறையில் விரிவுபடுத்துவதற்கும், மேலும் ஒருங்கிணைந்த மருத்துவப் பரிசோதனைச் சூழலின் ஒரு பகுதியாக வளர்வதற்கும் இது முக்கியமான நடவடிக்கையாகும், என்றார்.
செயல்பாடுகளுக்கு முக்கியத்துவம்
மகாஜன் இமேஜிங் அண்ட் லேப்ஸின் தலைமைச் செயல் அதிகாரி கபீர் மகாஜன் கூறியதாவது:
“இனி செயல்படுத்துவதற்கே முக்கியத்துவம் அளிக்கப்படும். நோயியல், மரபணுவியல் மற்றும் நலவாழ்வு பரிசோதனைத் திறன்களை வலுப்படுத்துதல், மாதிரி சேகரிப்பு மற்றும் அவற்றை ஆய்வகங்களுக்கு கொண்டு செல்லும் நடைமுறைகளை மேம்படுத்துதல், டிஜிட்டல் அமைப்புகளை ஒருங்கிணைத்தல் மற்றும் பரிசோதனை முடிவுகளை வழங்கும் காலத்தை குறைத்தல் ஆகியவற்றில் கவனம் செலுத்தப்படும்.”
அதே நேரத்தில், மகாஜன் இமேஜிங் அண்ட் லேப்ஸ் நிறுவனம் பின்பற்றி வரும் தரம், துல்லியம் மற்றும் மருத்துவச் சிறப்புத் தரங்கள் தொடர்ந்து பாதுகாக்கப்படும்.
தரக் கட்டுப்பாடு, பணிப்போக்கு மேலாண்மை மற்றும் பரிசோதனை அறிக்கைகளைத் தயாரிப்பதில் தொழில்நுட்பம் மற்றும் செயற்கை நுண்ணறிவை பயன்படுத்துவதற்கும் குறிப்பிடத்தக்க வாய்ப்புகள் உள்ளன.
”எத்தனை மையங்கள் சேர்க்கப்படுகின்றன என்பது மட்டும் வெற்றிக்கான அளவுகோலாக இருக்காது. ஒரே மாதிரியான சேவை அனுபவம், நம்பகமான பரிசோதனை அறிக்கைகள் மற்றும் பரந்த அளவிலான மருத்துவப் பரிசோதனை சேவைகளை திறம்பட அணுகும் வசதி ஆகியவற்றை வழங்குவதில்தான் வெற்றி உள்ளது, என்றார்.

