நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் சந்தை மதிப்பு 5.28% உயர்வு!
நெய்வேலி நிலக்கரி கார்ப்பரேஷனின் சந்தை மதிப்பு 5.28% உயர்ந்துள்ளது. நடப்பு நிதியாண்டின், அதாவது 2024-25-ன் முதல் காலாண்டில் பழுப்பு நிலக்கரி மற்றும் நிலக்கரி உற்பத்தியில் 26% வளர்ச்சி கண்டுள்ளது.
நெய்வேலி நிலக்கரி கார்ப்பரேஷனின் சந்தை மதிப்பு 5.28% உயர்ந்துள்ளது. நடப்பு நிதியாண்டின், அதாவது, 2024-25-ன் முதல் காலாண்டில் பழுப்பு நிலக்கரி மற்றும் நிலக்கரி உற்பத்தியில் 26% வளர்ச்சி கண்டுள்ளது.
மின் உற்பத்தியில் என்.எல்.சி. இந்தியா 10 சதவீத வளர்ச்சி கண்டுள்ளது. நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டுக்கான நிதிநிலை அறிக்கைகளை என்.எல்.சி. இந்தியா நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதில் கடந்த நிதியாண்டான 2023-24-ஐ விட இந்த நிதியாண்டில் பழுப்பு நிலக்கரி, நிலக்கரி மற்றும் மின்சார உற்பத்தியை அதிகரித்துள்ளதன் மூலம் வளர்ச்சிப்பாதையில் சென்று கொண்டிருப்பதாகத் தெரிவித்துள்ளது.

நடப்பு நிதியாண்டில் நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் 21.12% வளர்ச்சியுடன் முதல் காலாண்டில் 61.72 லட்சம் டன்கள் பழுப்பு நிலக்கரி உற்பத்தி செய்துள்ளது. இது கடந்த நிதியாண்டின் முதல் காலாண்டு உற்பத்தியான 50.54 லட்சம் டன்னை விட அதிகமாகும். நிலக்கரி உற்பத்தியில் நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் 28.46 லட்சம் டன்களை எட்டியுள்ளது. இது 35.27% வளர்ச்சியாகும். இது கடந்த நிதியாண்டின் இதே காலாண்டு உற்பத்தியை விட அதிகம்.
இதோடு பழுப்பு மற்றும் நிலக்கரி உற்பத்தியில் கூடுதலாக 90.18 லட்சம் டன்கள் உற்பத்தியை எட்டியுள்ளது. இது கடந்த நிதியாண்டில் 71.58 லட்சம் டன்களாக இருந்தது. நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் மொத்த மின் உற்பத்தி 7,553 மில்லியன் யூனிட் ஆக அதிகரித்துள்ளது. இது கடந்த நிதியாண்டின் முதல் காலாண்டின் உற்பத்தியை விட 10.38% அதிகமாகும்.
இந்த நிதியாண்டில் புதுப்பிக்கத்தக்க மின் உற்பத்தி 546.63 மில்லியன் யூனிட் ஆக உயர்ந்துள்ளது. இது கடந்த நிதியாண்டை விட சுமார் 7 மில்லியன் யூனிட்கள் அதிக உற்பத்தியாகும்.
என்.எல்.சி.யின் சந்தை மூலதனத்தின் மதிப்பு 5.28% சதவீதம் அதிகரித்துள்ளது. நிறுவனத்தின் ஒரு பங்கின் விலை ரூ.240.15 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

