Infosys நிகர லாபம் 12% உயர்வு - அடுத்த தலைமைச் செயல் அதிகாரியாக ஆஷிஷ் குமார் தாஷ் நியமனம்!
2027-ம் நிதியாண்டின் முதல் காலாண்டில் இன்ஃபோசிஸ் ரூ.7,769 கோடி நிகர லாபம் ஈட்டியுள்ளது. கடந்த ஆண்டு இதே காலாண்டில் நிறுவனத்தின் நிகர லாபம் ரூ.6,921 கோடியாக இருந்தது. இதே காலகட்டத்தில் நிறுவனத்தின் வருவாய் 14% உயர்ந்து ரூ.48,211 கோடியாக அதிகரித்துள்ளது.
இந்தியாவின் இரண்டாவது பெரிய தகவல் தொழில்நுட்ப மென்பொருள் சேவை ஏற்றுமதி நிறுவனமான இன்ஃபோசிஸ், 2027-ம் நிதியாண்டின் முதல் காலாண்டில் நிகர லாபம் ஆண்டுக்கு ஆண்டு 12.2% உயர்ந்துள்ளதாகத் தெரிவித்துள்ளது. இதனிடையே, அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் சலீல் பரேக்கிடம் இருந்து தலைமைச் செயல் அதிகாரி பொறுப்பை ஆஷிஷ் குமார் தாஷ் ஏற்க உள்ளதாகவும் நிறுவனம் அறிவித்துள்ளது.
2027-ம் நிதியாண்டின் முதல் காலாண்டில் இன்ஃபோசிஸ் ரூ.7,769 கோடி நிகர லாபம் ஈட்டியுள்ளது. கடந்த ஆண்டு இதே காலாண்டில் நிறுவனத்தின் நிகர லாபம் ரூ.6,921 கோடியாக இருந்தது. இதே காலகட்டத்தில் நிறுவனத்தின் வருவாய் 14% உயர்ந்து ரூ.48,211 கோடியாக அதிகரித்துள்ளது.
காலாண்டு முடிவுகள் வலுவாக இருந்தபோதிலும், 2027-ம் நிதியாண்டுக்கான வருவாய் வளர்ச்சி வழிகாட்டுதலை இன்ஃபோசிஸ் சற்று குறைத்துள்ளது. முன்னதாக 1.5% முதல் 3.5% வரை வளர்ச்சி இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது 1.5% முதல் 3% வரை மட்டுமே வளர்ச்சி இருக்கும் என நிறுவனம் தெரிவித்துள்ளது.
பொருளாதாரச் சூழலில் தொடர்ந்து நிலவும் நிச்சயமற்ற தன்மையே இந்த மாற்றத்துக்குக் காரணம் என இன்ஃபோசிஸ் தலைமைச் செயல் அதிகாரி சலீல் பரேக் தெரிவித்துள்ளார். மேலும், குறிப்பிட்ட ஒரு வாடிக்கையாளரிடமிருந்து ஏற்பட்ட சவால்களும், வர்த்தக அளவில் ஏற்பட்ட மாற்றங்களும் நிறுவனத்தைப் பாதித்ததாக அவர் கூறினார்.

இருப்பினும், எதிர்கால வளர்ச்சி குறித்து இன்ஃபோசிஸ் நம்பிக்கையுடன் இருப்பதாகத் தெரிவித்துள்ளது. நிறுவனம் 360 கோடி டாலர் மதிப்பிலான பெரிய ஒப்பந்தங்களைப் பெற்றுள்ளது. இதில் 61% புதிய ஒப்பந்தங்களாகும். செயற்கை நுண்ணறிவு (AI) சேவைகளுக்கும் வலுவான வரவேற்பு இருப்பதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.
இது குறித்து இன்ஃபோசிஸ் தலைமைச் செயல் அதிகாரி சலீல் பரேக் கூறுகையில்,
“செயற்கை நுண்ணறிவுக்கான வேகம் தற்போது வேகமாக வருவாயாக மாறி வருகிறது. நிறுவனங்களுக்கான செயற்கை நுண்ணறிவு தீர்வுகளில் இன்ஃபோசிஸின் தனித்துவமான மதிப்பு முன்மொழிவு, சந்தைப் பங்கை தொடர்ந்து அதிகரிப்பதில் எவ்வாறு பங்களிக்கிறது என்பதை இது காட்டுகிறது. இன்ஃபோசிஸ் டோபாஸ் மூலம் கிடைத்துள்ள வலுவான பெரிய ஒப்பந்தங்கள், செயற்கை நுண்ணறிவு மாற்றத்தில் வாடிக்கையாளர்களுக்கு விரும்பத்தக்க மூலோபாயக் கூட்டாளியாக இருந்து, கண்கூடாகத் தெரியும் வர்த்தக மதிப்பை உருவாக்கும் எங்கள் திறன் மீதான நம்பிக்கையை வலுப்படுத்துகின்றன,” என்றார்.
இன்ஃபோசிஸின் மொத்த வருவாயில் AI சேவைகளின் பங்கு தற்போது 8% ஆக உயர்ந்துள்ளது. 2026-ம் நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில் இது 5.5% ஆக இருந்தது.
AI சேவைகள் இரட்டை இலக்க வளர்ச்சியைப் பதிவு செய்து வருவதாகவும், இதுதொடர்பான ஒப்பந்தங்களுக்கான எதிர்கால வாய்ப்புகள் தொடர்ந்து வலுவாக இருப்பதாகவும் சலீல் பரேக் தெரிவித்தார். இருப்பினும், AI வருவாய் வளர்ச்சியில் ஏற்றத் தாழ்வுகள் இருக்கக்கூடும் என்றும் அவர் கூறினார்.
காலாண்டில் இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் அனைத்து வர்த்தகப் பிரிவுகளிலும், புவியியல் சந்தைகளிலும் நல்ல வளர்ச்சி பதிவாகியுள்ளது. நிறுவனத்தின் மிகப்பெரிய பங்களிப்பாளரான நிதிச் சேவைப் பிரிவும், ஒட்டுமொத்த நிறுவன வளர்ச்சி விகிதத்தைவிட அதிக வேகத்தில் வளர்ந்து வருவதாக இன்ஃபோசிஸ் தெரிவித்துள்ளது.
ஊழியர் எண்ணிக்கையைப் பொறுத்தவரை, முதல் காலாண்டின் முடிவில் இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் மொத்தம் 3,28,062 ஊழியர்கள் இருந்தனர். 2026-ம் நிதியாண்டின் நான்காவது காலாண்டுடன் ஒப்பிடுகையில் இது 532 ஊழியர்கள் குறைவாகும். அதேசமயம், ஆண்டுக்கு ஆண்டு அடிப்படையில் ஊழியர் எண்ணிக்கை 4,274 அதிகரித்துள்ளது.
ஊதிய உயர்வுகள் அக்டோபர் மற்றும் ஜனவரி மாதங்களில் வழங்கப்படும் என்றும் நிறுவனம் தெரிவித்துள்ளது.
அடுத்த தலைமைச் செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள ஆஷிஷ் குமார் தாஷ், இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் 30 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் கொண்டவர். தற்போது லாஸ் ஏஞ்சல்ஸில் பணியாற்றி வரும் அவர், இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் நிர்வாகத் துணைத் தலைவராகவும், சேவைகள், பயன்பாடுகள், வளங்கள், எரிசக்தி மற்றும் நிறுவன நிலைத்தன்மைப் பிரிவுகளின் உலகளாவிய தலைவராகவும் உள்ளார்.
சலீல் பரேக், 2018 ஜனவரியில் இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்டார். அவரது தலைமையில் நிறுவனத்தின் வருவாய் 1000 கோடி டாலரில் இருந்து 2000 கோடி டாலராக இரட்டிப்பானது.

