நாடு முழுவதும் டீலர்கள் மூலம் விற்பனை, மற்றும் சேவையை தொடங்கியது Ola Electric
வரும் மாதங்களில், நிறுவனத்துக்குச் சொந்தமான ஷோரூம்கள் பிராண்ட் மற்றும் தயாரிப்பு அனுபவத்தை வழங்கும் மையங்களாக செயல்படும்.
தனது விற்பனை மற்றும் சேவை வலையமைப்பை நாடு முழுவதும் டீலர் கூட்டாளர்களுக்கு திறந்து வைப்பதாக வியாழக்கிழமை ஓலா எலக்ட்ரிக் அறிவித்துள்ளது. மின்சார ஸ்கூட்டர்களை அறிமுகப்படுத்திய ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு, நிறுவனத்தின் சந்தைப்படுத்தல் (Go-to-Market) உத்தியில் இது ஒரு முக்கிய கட்டமைப்பு மாற்றமாகும்.
ஆரம்ப கட்ட வளர்ச்சியில், நிறுவனம் முழுமையாக தன்னுடைய சொந்த ஷோரூம்கள் மூலம் செயல்பட்டு, மின்சார வாகனங்கள் குறித்த விழிப்புணர்வை உருவாக்கியது. மேலும், தனது பிராண்டை வலுப்படுத்தி, 10 லட்சத்திற்கும் அதிகமான வாடிக்கையாளர்களைக் கொண்ட இந்தியாவின் மிகப்பெரிய மின்சார இருசக்கர வாகன வாடிக்கையாளர் அடித்தளத்தையும் உருவாக்கியது.
தற்போது மின்சார வாகன சந்தை முதிர்ச்சியடைந்து, பொதுமக்களிடையே அதன் ஏற்றுக்கொள்ளும் மனப்பான்மை அதிகரித்துள்ள நிலையில், அந்த வணிக மாதிரியை மாற்றி அமைக்க நிறுவனம் முடிவு செய்துள்ளது.
வரும் மாதங்களில், நிறுவனத்துக்குச் சொந்தமான ஷோரூம்கள் பிராண்ட் மற்றும் தயாரிப்பு அனுபவத்தை வழங்கும் மையங்களாக செயல்படும். அதே நேரத்தில், நாடு முழுவதும் உள்ளூர் அளவில் விற்பனை, சேவை மற்றும் விரிவாக்கப் பணிகளை டீலர் கூட்டாளர்கள் முன்னெடுப்பார்கள் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த முடிவு, கடந்த ஒரு மாதமாக நாடு முழுவதும் டீலர்களுடன் நடத்தப்பட்ட நேரடி ஆலோசனைகளுக்குப் பிறகு எடுக்கப்பட்டதாகவும், நிறுவனத்தின் தயாரிப்பு வரிசையும், உள்ளூர்ச் சந்தை அனுபவமும் இணைந்தால் ஓலா எலக்ட்ரிக் விற்பனையையும் இந்தியாவில் மின்சார வாகனங்களின் பயன்பாட்டையும் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரிக்க முடியும் என்ற நம்பிக்கையை டீலர்கள் வெளிப்படுத்தியுள்ளதாகவும் நிறுவனம் கூறியுள்ளது.
இதுகுறித்து ஓலா எலக்ட்ரிக் நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் பாவிஷ் அகர்வால் கூறுகையில்,
"இந்தியாவில் மின்சார வாகனத் துறை தற்போது புதிய கட்டத்தை எட்டியுள்ளது. ஆரம்பத்தில் மின்சார வாகனங்கள் மீது மக்களின் நம்பிக்கையை உருவாக்க வேண்டியிருந்ததால், நகரம் நகரமாக எங்களது சொந்த ஷோரூம்களை அமைத்தோம். அந்த முயற்சியே இன்றைய வலுவான அடித்தளத்தை உருவாக்கியது. இப்போது மின்சார வாகனங்களை நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும் கொண்டு செல்ல வேண்டிய நேரம் வந்துள்ளது. அந்த இலக்கை அடைய, உள்ளூர் சந்தையை நன்கு அறிந்த டீலர் கூட்டாளர்களின் பங்கு மிகவும் முக்கியமானதாக இருக்கும்," என்றார்.
மேலும், நிறுவனத்தின் ஷோரூம்கள் இனி வாடிக்கையாளர்களுக்கு சிறந்த பிராண்ட் மற்றும் தயாரிப்பு அனுபவத்தை வழங்கும் மையங்களாக இருக்கும் என்றும், அந்த அனுபவத்தை நாட்டின் ஒவ்வொரு நகரம் மற்றும் பகுதிக்கும் கொண்டு செல்லும் பொறுப்பை டீலர் கூட்டாளர்கள் ஏற்க உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
டீலர் கூட்டாளர்களுக்கு ஐந்து ஆண்டுகளாக உருவாக்கப்பட்ட வலுவான பிராண்ட் மதிப்பு, 10 லட்சத்திற்கும் அதிகமான மின்சார இருசக்கர வாகன வாடிக்கையாளர்களால் உருவாகும் தொடர்ச்சியான சேவை வாய்ப்புகள், ஸ்கூட்டர்கள், மோட்டார்சைக்கிள்கள், 'ஓலா சக்தி' உள்ளிட்ட எரிசக்தி தயாரிப்புகள் மற்றும் எதிர்காலத்தில் அறிமுகமாகவுள்ள புதிய எரிசக்தி தயாரிப்புகள் ஆகியவற்றுடன், நல்ல வருவாயை உறுதி செய்யும் பொருளாதார மாதிரியையும் நிறுவனம் வழங்கவுள்ளதாக தெரிவித்துள்ளது.
இந்த புதிய டீலர் திட்டத்தின் மூலம் 2026 தீபாவளிக்குள் நாடு முழுவதும் குறிப்பிடத்தக்க அளவில் தனது விற்பனை மற்றும் சேவை வலையமைப்பை விரிவுபடுத்தும், என ஓலா எலக்ட்ரிக் நம்பிக்கை தெரிவித்துள்ளது.
இந்த மாற்றத்தின் ஒரு பகுதியாக, ஹூண்டாய் மோட்டார் இந்தியாவின் முன்னாள் தலைவர் பி.வி.ஆர். சுப்பு, மூத்த ஆலோசகராக மீண்டும் ஓலா எலக்ட்ரிக் நிறுவனத்தில் இணைந்து, இந்த திட்டத்தின் செயல்பாட்டை வழிநடத்த உள்ளதாகவும் நிறுவனம் அறிவித்துள்ளது. அவர் முன்பு ஓலா எலக்ட்ரிக் நிறுவனத்தின் இயக்குநர் குழுவிலும் பணியாற்றியதுடன், பவிஷ் அகர்வாலின் வழிகாட்டியாகவும் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

