ஓலா எலக்ட்ரிக் QIP மூலம் ரூ.780 கோடி நிதி திரட்டியது!
பங்குச் சந்தைகளில் நிலவும் ஏற்றத்தாழ்வுகளுக்கு மத்தியிலும் இந்த அளவிலான முதலீட்டு ஆதரவு கிடைத்திருப்பது, ஓலா எலக்ட்ரிக்கின் வளர்ச்சித் திட்டங்கள், தொழில்நுட்ப முன்னேற்றங்கள் மற்றும் இந்திய மின்சார வாகனத் துறையில் அதன் நிலைப்பாடு மீது நிறுவன முதலீட்டாளர்கள் கொண்டுள்ள நம்பிக்கையை வெளிப்படுத்துகிறது.
ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் தகுதிவாய்ந்த நிறுவன முதலீட்டாளர் பங்கு ஒதுக்கீடு (QIP) மூலம் ரூ.780 கோடி நிதியை வெற்றிகரமாக திரட்டியுள்ளது. இந்த வெளியீட்டிற்கு 56 சதவீத அதிகப்படியான வரவேற்பு கிடைத்ததாக பங்குச் சந்தை தரவுகள் தெரிவிக்கின்றன.
இந்த நிதி திரட்டலில் நீண்டகால முதலீட்டு நிறுவனங்கள் மற்றும் உலகளாவிய முதலீட்டாளர்கள் அதிக ஆர்வம் காட்டினர். குறிப்பாக கோல்ட்மான் சாக்ஸ், பிஎன்பி பாரிபாஸ் அசெட் மேனேஜ்மெண்ட், நிறுவனத்தின் பிஎன்பி கிளைமேட் நிதி உள்ளிட்ட சர்வதேச முதலீட்டாளர்களுடன், ஆஸ்வால், மிராய் அசெட், கோடக் மகிந்திரா, ஜேஎம் ஃபைனான்ஷியல் மற்றும் பரோடா பிஎன்பி பரிபாஸ் போன்ற இந்திய மியூச்சுவல் ஃபண்டுகளும் பங்கேற்றன.
பங்குச் சந்தைகளில் நிலவும் ஏற்றத்தாழ்வுகளுக்கு மத்தியிலும் இந்த அளவிலான முதலீட்டு ஆதரவு கிடைத்திருப்பது, ஓலா எலக்ட்ரிக்கின் வளர்ச்சி திட்டங்கள், தொழில்நுட்ப முன்னேற்றங்கள் மற்றும் இந்திய மின்சார வாகனத் துறையில் அதன் நிலைப்பாடு மீது நிறுவன முதலீட்டாளர்கள் கொண்டுள்ள நம்பிக்கையை வெளிப்படுத்துகிறது.

க்யூஐபி வெளியீடு ஒரு பங்குக்கு ரூ.35.86 என்ற குறிகாட்டி விலையில் தொடங்கப்பட்டது. அதேவேளையில், வியாழக்கிழமை தேசிய பங்குச் சந்தையில் அந்த பங்கு ரூ.43.06 என்ற விலையில் முடிவடைந்தது. இது வெளியீட்டு விலையை விட 20 சதவீதத்திற்கும் அதிகமாகவும், ஒழுங்குமுறை தரை விலையான ரூ.37.74-ஐ விடவும் உயர்வாகும்.
இந்த நிதி திரட்டலின் மூலம் நிறுவனத்தின் நிதி நிலை மேலும் வலுப்பெறும், என எதிர்பார்க்கப்படுகிறது. மின்சார வாகன உற்பத்தி விரிவாக்கம், பேட்டரி தொழில்நுட்ப மேம்பாடு, உற்பத்தித் திறன் அதிகரிப்பு மற்றும் புதிய தயாரிப்பு கண்டுபிடிப்புகளுக்கு இந்த நிதி பயன்படுத்தப்பட உள்ளது.
மேலும், இந்த நடவடிக்கை மூலம் ஓலா எலக்ட்ரிக்கின் நிறுவன முதலீட்டாளர் அடித்தளம் விரிவடைந்துள்ளது. இந்தியாவில் மின்சார போக்குவரத்துக்கான மாற்றம் வேகமெடுத்து வரும் நிலையில், அதனை மையமாகக் கொண்ட நிறுவனங்களின் நீண்டகால வளர்ச்சி வாய்ப்புகள் மீது முதலீட்டாளர்கள் தொடர்ந்து நம்பிக்கை வைத்திருப்பதையும் இது எடுத்துக்காட்டுகிறது.
தொகுப்பு: முத்துகுமார்

