ஓலா ‘ரோட்ஸ்டர் எக்ஸ்+’ பைக்குக்கு மத்திய அரசு சான்றிதழ் - விரைவில் சந்தையில் அறிமுகம்!
‘4680 பாரத் செல்’ பேட்டரி மூலம் இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட ஓலா எலெக்ட்ரிக் நிறுவனத்தின் ‘ரோட்ஸ்டர் எக்ஸ்+’ பைக்குக்கு மத்திய அரசின் சான்றிதழ் கிடைத்துள்ளது.
‘4680 பாரத் செல்’ பேட்டரி மூலம் இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட ஓலா எலெக்ட்ரிக் நிறுவனத்தின் ‘ரோட்ஸ்டர் எக்ஸ்+’ பைக்குக்கு மத்திய அரசின் சான்றிதழ் கிடைத்துள்ளது.
ஓலா எலெக்ட்ரிக் நிறுவனத்தின் ‘ரோட்ஸ்டர் எக்ஸ்+’ (Roadster X+) மின்சார மோட்டார் சைக்கிள் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட ‘4680 பாரத் செல்’ பேட்டரி மூலம் இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதற்கு தற்போது மத்திய அரசு சான்றிதழ் கிடைத்துள்ளது. இதனைத் தொடர்ந்து, ஓலா நிறுவனம் இந்த மாடலின் விற்பனையை விரைவில் தொடங்கவுள்ளது.
மத்திய மோட்டார் வாகன விதிகள், 1989-ன் கீழ், ஹரியானாவின் மானேசரில் உள்ள சர்வதேச வாகனத் தொழில்நுட்ப மையத்திடம் இருந்து ‘ரோட்ஸ்டர் எக்ஸ்+’ அங்கீகாரம் பெற்றுள்ளது.
இது தொடர்பாக ஓலா நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,
‘இந்தச் சான்றிதழின் மூலம், ஓலா எலக்ட்ரிக் இப்போது ரோட்ஸ்டர் எக்ஸ்+ (9.1kWh) விநியோகத்தைத் தொடங்க உள்ளது. முற்றிலும் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட 4680 பாரத் செல் பேட்டரி பேக் மூலம் சான்றிதழ் பெற்ற இந்தியாவின் முதல் மின்சார மோட்டார் சைக்கிள் இதுவாகும்,’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தொழில்நுட்பத்தை இப்போது தனது அனைத்து இருசக்கர வாகன வரிசைகளிலும் ஓலா நிறுவனம் விரிவுபடுத்தியுள்ளது. இது குறித்து ஓலா எலெக்ட்ரிக் செய்தித் தொடர்பாளர் கூறியது:
“ரோட்ஸ்டர் எக்ஸ்+ அரசு சான்றிதழ் பெற்றது, இந்தியாவில் முழுமையான மின்சார வாகனங்கள் தொழில்நுட்பத்தை உருவாக்குவதற்கான ஓலா எலெக்ட்ரிக்கின் பயணத்தில் ஒரு முக்கிய மைல்கல்லாகும். எங்களின் சொந்த பேட்டரி தொழில்நுட்பத்தின் மூலம் சிறந்த செயல்திறன், பாதுகாப்பு மற்றும் நம்பகத்தன்மையை நாங்கள் வழங்குகிறோம்,” என்றார்.
சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகத்தின் அறிவிப்பின்படி, பாதுகாப்பு, மின்சாரம், செயல்திறன் மற்றும் சுற்றுச்சூழல் சோதனைகளுக்குப் பிறகு இந்தச் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இதில் பிரேக்கிங் திறன், இரைச்சல் மற்றும் மின்காந்த இணக்கத்தன்மை போன்ற முக்கிய சோதனைகளும் அடங்கும்.
நீர் ஊடுருவல், வெப்ப பாதிப்பு மற்றும் தீ பாதுகாப்பு போன்ற கடுமையான சோதனைகளைத் தாண்டி இந்த 9.1 kWh பேட்டரி பேக் தேர்ச்சி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழில்: ஜெய்
Edited by Induja Raghunathan

